கோலாலம்பூர் – பெர்சே ஆதரவாளர்களைத் தாக்கியதாக காவல் துறையில் புகார் செய்யப்பட்டதைத் தொடர்ந்து ஜமால் யூனுஸ் தலைமையிலான சிவப்பு சட்டைக் குழுவின் ஆதரவாளர்கள் மூன்று பேரை காவல் துறை சபாக் பெர்ணத்தில் கைது செய்துள்ளது.
இதனை சிலாங்கூர் காவல் துறைத் தலைவர் அபு சமா மாட் ஊடகங்களின் வழி உறுதிப்படுத்தியுள்ளார். காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
மலேசிய குற்றவியல் சட்டம் பிரிவு 147-இன் கீழ் கலவரம் ஏற்படுத்த முனைந்ததற்காக அவர்கள் கைது செய்யப்பட்டதால், அவர்கள் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், 2 ஆண்டுகள் வரையிலான சிறைத்தண்டனையும் அல்லது அபராதமும் அவர்களுக்கு விதிக்கப்படலாம்.
எதிர்வரும் நவம்பர் 19-ஆம் தேதி நடைபெறவிருக்கும் பெர்சே 5 பேரணிக்கு ஆதரவு திரட்டும் நோக்கில் பெர்சேஅணிகள் நாடு முழுவதும் பயணம் செய்து வருகின்றனர். அவ்வாறு நேற்று அவர்கள் தெலுக் இந்தான் சென்றபோது அவர்களின் வாகன அணிவகுப்பு மீது சில சிவப்புச் சட்டைக்காரர்கள் தாக்குதல் நடத்தினர்.
இதனைத் தொடர்ந்துதான் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.