மும்பை – வழக்குகளில் இருந்து விடுதலையாகி சில மாதங்கள் நிம்மதியில் இருந்த பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு மீண்டும் ஒரு சிக்கல் வந்துள்ளது.
இரண்டு சிங்காரா இன மான்களை வேட்டையாடி கொன்ற வழக்கில் சல்மான் கான் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து ராஜஸ்தான் மாநில அரசு, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.
1998ம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடிகர் சல்மான் கான் ‘ஹம் சாத் சத் ஹைன்’ என்ற படத்தின் படப்பிடிப்புக்காக ராஜஸ்தான் மாநிலம் சென்றார்.
அப்போது, படப்பிடிப்பின் ஓய்வு நேரத்தில் அவர் 2 அரியவகை மான்களை வேட்டையாடி கொன்றார்.
இது தொடர்பான வழக்கில் ஜோத்பூர் நீதிமன்றம் சல்மான் கானுக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்தபோது, ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் அவரை விடுவித்தது.
இந்த தீர்ப்பை எதிர்த்து ராஜஸ்தான் அரசு சார்பில், உச்ச நீதிமன்றத்தில் நேற்று புதன்கிழமை மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.