உலக நாடுகளின் அரசியலைப் புட்டுப் புட்டு வைக்கும் சில அரசியல் பார்வையாளர்களை ஒரு முறை – “அமெரிக்க அதிபர் தேர்தலில் எப்படி வாக்களிப்புகள் நடைபெறுகின்றன? அதிபர் எந்த முறையில் தேர்ந்தெடுக்கப்படுகின்றார்?” – எனக் கேட்டுப் பாருங்கள்!
ஒரு கணம் எல்லோரும் தடுமாறிப் போவார்கள். காரணம் அந்த அளவுக்கு சிக்கலான, சில குழப்பமான நடைமுறைகளைக் கொண்டது அமெரிக்க அதிபர் தேர்தல் நடைமுறை.
இன்று நவம்பர் 8-ஆம் தேதி அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெறுகின்றது.
இந்த தேர்தலின் சுவாரசியமான அம்சங்கள் சிலவற்றையும் வாக்களிப்பு முறையையும் பார்ப்போமா?
அமெரிக்க அதிபர் தேர்தல் குறித்த சில சுவாரசிய அம்சங்கள்:-
- நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறுகின்றது அமெரிக்க அதிபர் தேர்தல். அதிபரின் பதவிக் காலம் முடியும் தேதி எப்போதுமே ஜனவரி 20 தான்.
ஹிலாரியுடன் அவரது துணையதிபருக்கான வேட்பாளர் டிம் கேய்ன்
- எல்லாத் தேர்தல்களும் இடியோ, மழையோ, ஜனவரிக்கு முந்திய நவம்பர் மாதத்தின் முதல் செவ்வாய்க்கிழமை நடைபெறும். அதன் படி இந்த முறை நவம்பர் 8-ஆம் தேதி நடைபெறுகின்றது. உலக நாடுகளில் அமெரிக்காவில் மட்டும்தான் இத்தகைய குறிப்பிட்ட தேதியில் தேர்தல் நடைபெறும் நடைமுறை பின்பற்றப்படுகின்றது.
- தேர்தல் நவம்பர் 8 என்றாலும், அந்த தேதிக்கு இரண்டு வாரங்களுக்கு முன்பாகவே வாக்காளர்கள் சென்று தங்களின் வசதிக்கேற்ப வாக்களிக்கலாம். அந்த வகையில் இன்றைய தேர்தலுக்கு முன்பாக இதுவரை சுமார் 41 மில்லியன் வாக்காளர்கள் வாக்களித்து விட்டனர் எனத் தெரிவிக்கின்றன புள்ளி விவரங்கள்.
- தேர்தலை நடத்துவது அமெரிக்க தேர்தல் ஆணையம். இதுவரை தோற்ற எந்த அதிபரும் தேர்தல் ஆணையம் தேர்தலை முறையாக நடத்தவில்லை என புகார் கூறியதில்லை. அந்தளவுக்கு நேர்மை, நியாயம், பாரபட்சமற்ற அணுகுமுறை கடைப்பிடிக்கப்படுகின்றது.
- அதனால்தான், இந்த முறை டொனால்ட் டிரம்ப் தேர்தல் முடிவுகளை நான் ஏற்றுக் கொள்வேனா என்பது குறித்து இன்னும் சிந்திக்கவில்லை என்று கூற – அனைத்துத் தரப்பினராலும் நன்றாக வாங்கிக் கட்டிக் கொண்டார். பின்னர் தனது கருத்தையும் மாற்றிக் கொண்டார்.
- எல்லா ஊடகங்களும் இரண்டு வேட்பாளர்களைப் பற்றி மட்டுமே செய்திகள் வெளியிட்டுக் கொண்டிருக்கும் என்பதால், அவர்கள் இருவர் மட்டும்தான் வேட்பாளர்கள் என பலர் நினைக்கக் கூடும். ஆனால், ஒவ்வொரு தேர்தலிலும் மற்ற கட்சிகளின் வேட்பாளர்கள், சுயேச்சைகள் என சுமார் 20 பேர் போட்டியிடுவார்கள். ஆனால், அவர்களின் பெயர்கள் என்ன என்பது கூட பத்திரிக்கைகளில் வெளிவராது என்பதுதான் அமெரிக்க அரசியலின் சோகம். வாக்குச் சீட்டில் மட்டும்தான் மற்ற வேட்பாளர்களின் பெயர்கள் இருக்கும்.
- 200 ஆண்டுகால ஜனநாயக வரலாற்றைக் கொண்ட அமெரிக்காவில் இரண்டு கட்சிகளைத் தாண்டி வேறு கட்சிகள் தலையெடுக்கவே இல்லை என்பது ஓர் அதிசயம்தான்.தேர்தல் பிரச்சாரத்தின்போது – ஹிலாரிக்கு தீவிர பிரச்சாரத்தில் இறங்கியிருக்கும் – பதவிக்காலம் முடிந்து செல்லும் அதிபர் பராக் ஒபாமா…
- தேர்தல் நடக்கும் நவம்பர் 8-ஆம் தேதிக்கு ஏறத்தாழ ஓராண்டுக்கு முன்பாகவே, குடியரசுக் கட்சி, ஜனநாயகக் கட்சி இரண்டிலும் வேட்பாளர்களுக்கான நியமனங்கள் தொடங்கிவிடும்.
- ஒவ்வொரு வேட்பாளரும் முதலில் தங்களின் கட்சிப் பிரச்சாரக் கூட்டங்களில் வலம் வந்து ஆதரவு தேடி, கட்சியின் ஒட்டுமொத்த ஆதரவைப் பெற்று, அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட வேண்டும்.
- அதன் பின்னர்தான், நாடு தழுவிய அளவில் பிரச்சாரங்களை அவர்கள் பொதுமக்களிடையே தொடங்க வேண்டும். பெரிய நாடு என்பதால், சுமார் மூன்று மாதங்களுக்கு முன்பே அதிபர் வேட்பாளர் முடிவு செய்யப்படுவார். அடுத்த 3 மாதங்களுக்கு அவர் சக்கையாகப் பிழியப்படும் அளவுக்கு கூட்டங்களில் கலந்து கொள்வார். அவரது அனைத்து கடந்த கால, நிகழ்கால, அந்தரங்கங்களும் பொதுமக்களின் பார்வைக்கு முன்வைக்கப்பட்டு, பொதுமக்களின் முடிவுக்கு விடப்படும். இந்த முறை நடக்கும் தேர்தலில் ஹிலாரி, டிரம்ப் இருவரும் குறித்த பல அந்தரங்க விவகாரங்கள் எந்த அளவுக்கு சந்தி சிரித்தன என்பதைப் பலர் படித்திருப்பார்கள், தொலைக் காட்சிகளில் பார்த்திருப்பார்கள். இதுவே சான்று.
- வேட்பாளர்களின் தேர்தல் செலவுகளுக்கு தேர்தல் ஆணையமே நிதி ஒதுக்கும் என்றாலும், வேட்பாளர்கள் எந்த அளவுக்கு பொதுவில் நிதியைத் திரட்டுகிறார்கள் என்பதை வைத்துத்தான் அவர்களின் வெற்றி வாய்ப்பும் நிர்ணயிக்கப்படுகின்றது. அந்த வகையில் டிரம்ப், ஹிலாரி இருவரின் பண பலம்தான், மற்ற வேட்பாளர்கள் அவர்களைக் கண்டு அஞ்சி ஒதுங்கவும், அவர்களை இறுதிவரை களத்தில் நிற்கவும் வைத்திருக்கின்றது.
- அமெரிக்காவின் முன்னணி ஊடகங்கள் இரு வேட்பாளர்களுக்கும் சரி சமமாக நேரம் ஒதுக்கும். இருதரப்பின் செய்திகளையும் பாரபட்சமின்றி வெளியிடும். உதாரணமாக, சிஎன்என் தொலைக்காட்சியைப் பார்த்தீர்கள் என்றால், டிரம்ப் பேசுவதற்கு 10 நிமிடம் வாய்ப்பு வழங்கப்பட்டால், அதே 10 நிமிடம் ஹிலாரிக்கும் வழங்கப்படும்.
- நவம்பர் 8-ஆம் தேதி தேர்தல் முடிந்து வெற்றி பெற்றவர் அறிவிக்கப்பட்டாலும், அவர் உடனடியாக பதவியேற்க மாட்டார். ஜனவரி 20 வரை அவர் காத்திருக்க வேண்டும். இந்த இரண்டு மாதங்களுக்கு இடைப்பட்ட காலத்தில் அதிபராக வெற்றி பெற்றவர் தனது அடுத்த அரசாங்கத்தை அமைக்கும் பணிகளில் ஈடுபடுவார். அதற்காக சிறப்பு அலுவலகம் ஒன்று அமைக்கப்படும். இந்தப் பணிகளுக்காக தேர்தல் ஆணையம் தனியாக அவருக்கு கோடிக்கணக்கான டாலர்களை வழங்கும்.
- நவம்பர் 8 முதல் ஜனவரி 20 வரையிலான இடைப்பட்ட காலத்தில், பொதுவாக நடப்பு அதிபர், அதாவது இந்த முறை ஒபாமா, எந்தவிதமான முக்கிய முடிவுகளும் எடுக்கமாட்டார். குறிப்பிடத்தக்க நியமனங்கள் எதனையும் செய்ய மாட்டார். புதிய அதிபரின் முடிவுக்காக விட்டு விடுவார்.
- ஜனவரி 20-ஆம் தேதி அதிபரின் பதவியேற்பு தினம் என்றாலும், அந்த நாள் ஞாயிற்றுக்கிழமையாக இருந்தால், மறுநாள் ஜனவரி 21 திங்கட்கிழமைதான் புதிய அதிபர் பதவியேற்பார்.
– இரா.முத்தரசன்