Home Featured தமிழ் நாடு ஜல்லிக்கட்டு: “மோடியைச் சந்திக்கிறேன்! ஆர்ப்பாட்டத்தைக் கைவிடுங்கள்!” பன்னீர் செல்வம் வேண்டுகோள்!

ஜல்லிக்கட்டு: “மோடியைச் சந்திக்கிறேன்! ஆர்ப்பாட்டத்தைக் கைவிடுங்கள்!” பன்னீர் செல்வம் வேண்டுகோள்!

614
0
SHARE
Ad

O-Panneerselvam

சென்னை – மெரினா கடற்கரை முதல் மதுரை வரை தமிழகம் எங்கும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக வெடித்துள்ள மக்கள் போராட்டத்தின் விளைவாக நாளை வியாழக்கிழமை பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்க புதுடில்லி விரைகிறார் தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம்.

இதனைத் தொடர்ந்து, மெரினா கடற்கரையில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான மக்களிடையே, சென்னை காவல் துறை அதிகாரி ஒருவர், தமிழக முதல்வர் வெளியிட்ட அறிக்கையை  வாசித்தார்.

#TamilSchoolmychoice

அந்த அறிக்கையில், மீண்டும் ஜல்லிக்கட்டுவைக் கொண்டுவர தமிழக அரசு எல்லா நிலைகளிலும் முயற்சிகள் எடுத்து வருகின்றது என்றும் இதன் தொடர்பில் உடனடியாக அவசரச் சட்டம் கொண்டு வர, நாளை மோடியைச் சந்திக்க புதுடில்லி செல்லவிருப்பதாகவும் பன்னீர் செல்வம் அறிவித்துள்ளார்.

எனவே, ஆர்ப்பாட்டக்காரர்கள் நம்பிக்கையுடன் கலைந்து செல்ல வேண்டும் என்றும் பன்னீர் செல்வம் தனது அறிக்கையில் கேட்டுக் கொண்டார்.

இருப்பினும், பன்னீர் செல்வத்தின் அறிக்கையை மறுத்தும், எதிர்த்தும், கூச்சலிட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள், கலைந்து செல்ல மாட்டோம் என்றும் அவசரச் சட்டம் கொண்டுவரப்பட்ட பின்னர்தான் நாங்கள் இடத்தை விட்டு அகல்வோம் என்றும் கூறி வருகின்றனர்.

இதற்கிடையில் கூட்டத்தைக் கலைப்பதற்கு காவல் துறையினர் முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் மெரினா பகுதியில் மக்கள் வந்து சேரக் கூடாது என்பதற்காக, அந்தப் பகுதியில் செல்பேசித் தொடர்புகளைத் தடை செய்யும் கருவிகளைக் காவல் துறையினர் பயன்படுத்தியுள்ளனர்.

இதுவரையில் எந்தவித அசம்பாவிதங்களும் இன்றி மிகுந்த கட்டுக்கோப்புடன் இந்தப் போராட்டங்கள் நடந்து வருவது குறித்தும், அரசியல் கட்சிகளின் தலையீடு இன்றி, பொதுமக்களும், மாணவர்களும் இந்தப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வது குறித்தும் அகில இந்திய அளவில் பல தரப்புகள் ஆச்சரியம் தெரிவித்துள்ளன.