புதுடில்லி – இந்தியாவுக்கான வரவு செலவுத் திட்டம் (பட்ஜெட்) இன்று புதன்கிழமை நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் அருண் ஜெட்லியால் சமர்ப்பிக்கப்படவிருந்தது.
ஆனால், எதிர்பாராதவிதமாக இன்று அதிகாலை கேரளாவைச் சேர்ந்த மூத்த நாடாளுமன்ற உறுப்பினர் இ.அகமது காலமானதைத் தொடர்ந்து, நாடாளுமன்றக் கூட்டத் தொடர் ஒத்தி வைக்கப்படலாம் என்றும் இதன் காரணமாக இன்றைய வரவு செலவுத் திட்டம் நாளை சமர்ப்பிக்கப்படும் என்றும் தகவல்கள் வெளியாகத் தொடங்கியுள்ளன.
இருப்பினும், அரசாங்கத் தரப்பைப் பொறுத்தவரை திட்டமிட்டபடி வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்படும் என்றும் அதற்காக தனது உரையில் இறுதிக்கட்டத் திருத்தங்களை நிதியமைச்சர் அருண் ஜெட்லி மேற்கொண்டு வருகின்றார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காங்கிரசின் முன்னாள் அமைச்சர் கமல்நாத், நாடாளுமன்றப் பாரம்பரியம் காக்கப்பட வேண்டும் என்றும், உறுப்பினர் ஒருவர் மறைந்தால், அதற்காக நாடாளுமன்றக் கூட்டம் ஒத்திவைக்கப்படுவதுதான் மரபு என்றும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் நாடாளுமன்றக் கூட்டம் தொடங்கும்போது அகமதுவுக்கு முதலில் அஞ்சலி செலுத்தப்படும். அதன் பின்னர் நாடாளுமன்றக் கூட்டத்தைத் தொடர்ந்து நடத்தி வரவு செலவுத் திட்டத்தை நிதியமைச்சர் சமர்ப்பிக்க அனுமதிப்பதா அல்லது கூட்டத்தை ஒத்தி வைப்பதா என்ற முடிவை நாடாளுமன்ற அவைத் தலைவர் எடுப்பார்.
இதற்கிடையில், மறைந்த நாடாளுமன்ற உறுப்பினர் அகமதுவுக்கு இறுதி அஞ்சலி செலுத்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவரது இல்லத்திற்கு சென்றுள்ளார்.