ஜார்ஜ்டவுன் – பினாங்கில் தைப்பூசத்தை முன்னிட்டு 3 மில்லியன் ரிங்கிட் பொருட்செலவில் உருவாக்கப்பட்ட தங்க இரதம் நேற்று வியாழக்கிழமை வெற்றிகரமாக வெள்ளோட்டம் பார்க்கப்பட்டது.
தண்ணீர்மலை தண்டாயுதபாணி மலைக்கோயிலில் காலையில் சிறப்பு பூஜைகளுக்குப் பிறகு புறப்பட்ட 1.6 டன் எடையுள்ள தங்க இரதம் கனரக வாகனம் மூலமாக பாதுகாப்பாக அடிவாரத்திற்குக் கொண்டு வரப்பட்டு, அங்கிருந்து வலம் வரத் தயாரானது.
தங்க இரதத்தை 30 பக்தர்கள் சேர்ந்து 3 கிலோமீட்டர் தூரம் வரையில் இழுத்துச் சென்றனர்.
ஜாலான் கெபுன் பூங்கா, லோரோங் ஆயர் தெர்ஜுன், ஜாலான் துங்கு அப்துல் ரஹ்மான், ஜாலான் மாசாலிஸ்டெர், ஜாலான் ரெசிடென்சி, ஜாலான் உத்தாமா ஆகிய வீதிகள் வழியாக வலம் வந்த இந்தத் தங்க இரதம் இறுதியில் ஆலயத்தை வந்தடைந்தது.
தங்க இரத வெள்ளோட்டத்தைக் காண காலை முதல் மக்கள் அப்பகுதியில் கூடியிருந்தனர். பினாங்கு மாநில இந்து அறப்பணி வாரியத் தலைவரும், துணை முதல்வருமான பேராசிரியர் பி.இராமசாமி, மக்களோடு மக்களாக வடம் பிடித்து இரதத்தை இழுத்துச் சென்றார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “தங்க இரதத்தைப் பார்க்க இங்கு கூடியிருக்கும் மக்களைப் பார்க்கும் போது அவர்கள் எவ்வளவு ஆவலோடு இருக்கிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ள முடிகின்றது. இத்தனை ஆண்டுகள் கழித்து பினாங்கு மக்களுக்கு தங்க இரதம் கிடைத்துள்ளது. இது தங்க இரதமாக மட்டும் பார்க்கப்படுவதில்லை. பினாங்கு மக்களின் மரியாதையாகவும் பார்க்கப்படுகின்றது” என்று தெரிவித்தார்.
தொடர்ந்து, தண்ணீர்மலை ஆலயத் தலைவர் ஆர்.சுப்ரமணியம் பேசுகையில், “தங்க இரதத்தை கனரக வாகனத்தில் ஏற்ற அதிக நேரம் தேவைப்பட்டது. அதற்கு மிகவும் முக்கியத்துவம் கொடுத்து பாதுகாப்பாக ஏற்றி இறக்கினோம். அதனால் தான் 2 மணி நேரம் தாமதம் ஏற்பட்டது. தற்போது தங்க இரதம் வலம் வரத் தயாராக உள்ளது. கடந்த ஒரு வருடமாக தங்க இரதம் உருவாக பெரும் ஆதரவு அளித்த பேராசிரியர் இராமசாமிக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். வரும் பிப்ரவரி 8-ம் தேதி, தைப்பூசத்தன்று, குயின்ஸ் ஸ்ட்ரீட் மாரியம்மன் ஆலயத்திலிருந்து காலை 5 மணியளில், தங்க இரதம் புறப்படும். இந்தத் தங்க இரதத்தை ஆயிரக்கணக்கான பக்தர் இழுத்துச் செல்லவுள்ளனர்” என்று ஆர்.சுப்ரமணியம் தெரிவித்தார்.
பினாங்கு தைப்பூசத்தின் போது, ஆண்டாண்டு காலமாக செட்டியார்கள் எனப்படும் நகரத்தார் சமூகத்தினரால்,வெள்ளி இரத ஊர்வலம் நடைபெற்று வந்த நிலையில், பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தால் புதிதாக தங்க இரதம் உருவாக்கப்பட்டு, இந்த ஆண்டு முதன் முறையாக ஊர்வலம் நடத்தப்படவிருக்கின்றது.
தைப்பூசத்தன்று வெள்ளி இரதம் புறப்படுவதற்கு 2 மணி நேரங்கள் முன்னதாக தங்க இரதம் புறப்படுகின்றது.
பினாங்கு மாநிலத்தில், தைப்பூசத்தை முன்னிட்டு வெள்ளி, தங்க இரதம் என இரண்டு இரதங்கள் வலம் வர இருப்பது இதுவே முதல் முறையாகும்.