Home Featured தொழில் நுட்பம் ‘டிஜிட்டலில் தமிழ்’ இலங்கையில் முத்துநெடுமாறனின் கருத்தரங்க உரை!

‘டிஜிட்டலில் தமிழ்’ இலங்கையில் முத்துநெடுமாறனின் கருத்தரங்க உரை!

1159
0
SHARE
Ad

muthu nedumaran-jaffna-sri lanka

(அண்மையில் இலங்கையில் நடைபெற்ற அனைத்துலக எழுத்துரு கருத்தரங்கில் கலந்து கொண்ட, முத்து நெடுமாறன் அங்கு தொழில்நுட்பத்தில் தமிழ் தொடர்பான இரண்டு கருத்தரங்குகளில் கலந்து கொண்டு உரையாற்றினார்.  இலங்கையில் முத்து நெடுமாறன் நிகழ்ச்சிகள் குறித்து அந்நாட்டின் முன்னணி நாளிதழான வீரகேசரியில் கடந்த 4 மார்ச் 2017-இல் வெளியிடப்பட்ட கட்டுரை)

உத்தமம் எனும் பெயரில் இயங்கி வரும் உலகத் தமிழ் தகவல்  தொழில் நுட்ப மன்றம் கடந்தவாரம், ‘டிஜிட்டலில் தமிழ்’ எனும் தலைப்பிலான செயலமர்வொன்றை கொழும்பில் நடத்தியது. இக்கருத்தரங்கு கொழும்பு -06 இல் உள்ள பெண்கள் ஆய்வு நிலையத்தில் அரைநாள் செயலமர்வாக இடம்பெற்றது.

#TamilSchoolmychoice

இந்தியா, இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, வடஅமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளின் உறுப்பினர்களைக் கொண்டு செயற்படும் இந்த அமைப்பு இலங்கையில் கொழும்பு, யாழ்ப்பாணம் உட்பட பல இடங்களில் கணினியியல் சம்பந்தமான செயலமர்வுகளை நடத்தி வருகின்றது. அந்த வகையில் கடந்த வாரம் இடம்பெற்ற இச்செயலமர்வு பற்றி பார்ப்போம்.

கொழும்பு உட்பட வெளிமாவட்டங்களைச் சேர்ந்த ஆர்வமுள்ள பலர் இச்செயலமர்வில் கலந்து கொண்டனர். இலங்கையைச் சேர்ந்த உத்தமம் உறுப்பினர்  பாரதி இராஜநாயகம் தலைமையில், சரவணபவாந்தன், சிரேஷ்ட மென் பொருள் அபிவிருத்தியாளர் மயூரன் கனகராஜா ஆகியோரின் ஏற்பாட்டில் இச்செயலமர்வு இடம்பெற்றது.

muthu-nedumaran-veera kesari-pressவீரகேசரியில் வெளிவந்த கட்டுரை…

இங்கு பிரதான வனவாளராக உலகளாவிய ரீதியில் புகழ்பெற்ற மலேசியாவைச் சேர்ந்த கணினியியலாளர் முத்து நெடுமாறன் கலந்து கொண்டு ‘டிஜிட்டலில் தமிழ்’ எனும் தலைப்பில் பலதரப்பட்ட விடயங்களை எம்முடன் பகிர்ந்து கொண்டார். இச்செயலமர்வு பற்றி இங்கு குறிப்பிடுவதற்கு முன்பு முத்து நெடுமாறனைப் பற்றி சில விடயங்களை இங்கு என குறிப்பிடலாம் என நினைக்கிறேன்.

இன்றும் தமிழ் எழுத்துருக்களை, வளரும் தொழில் நுட்பங்களுக்கு இணையாக புதிதாக உருவாக்கிக் கொண்டே இருக்கிறார். முரசு தமிழ் எழுத்துருக்களை உருவாக்கியவர். கைத்தொலைப்பேசிகளில் தமிழில் முதன்முதலில் குறுஞ்செய்தி அனுப்புவதற்காக செல்லினம் என்ற குறுஞ்செயலியை உருவாக்கியவர். ஆப்பிளின் ஐபோனில் கூட தமிழைக் கொண்டு வந்துள்ளவர். கணினியில் தமிழ் என்றால் எல்லோருக்கும் ஞாபகம் வரும் முதல் பெயர் இவருடையது தான்.

2001 ஆம் ஆண்டு முதல் முரசு குழுமத்தின் தலைவராகக் கணினிகளில் தமிழை உள்ளீடு செய்யும் முரசு அஞ்சல், நகர்பேசிகளில் தமிழைப் பாவிக்கும் செல்லினம் போன்ற மென்பொருட் தயாரிப்பை முன்னின்று நடத்தியவர். புதிதாக வந்திருக்கும் ‘ஐபோன் 6’ல் தமிழில் தட்டுவது நமக்கு இப்போது சர்வ சாதாரணமாக இருக்கிறது.

ஆனால் 30 வருடங்களுக்கு முன் கணினிக்குள் தமிழைக் கொண்டு வரும் கனவு சாத்தியமாவது அத்தனை எளிதாக நடக்கவில்லை. உலகின் வெவ்வேறு மூலைகளில் இருந்த, விரல் விட்டு எண்ணக் கூடிய எண்ணிக்கையிலான தமிழ் இளைஞர்கள் சிலர் அதற்கான முயற்சியில் இறங்கியிருந்தனர். அர்ப்பணிப்பு மிக்க அசாதாரணமான உழைப்பினால் இறுதியில் அதைச் சாத்தியமாக்கினர். அவர்களில் முக்கியமான ஒருவர் முத்து நெடுமாறன்.

கணினிக்குத் தமிழ் எழுத்துரு தந்த முன்னோடிகளில் முதன்மையானவர் இவர். சுமார் 35 வருட காலமாகத் தன்னை முழுமையாக இத்துறையில் ஈடுபடுத்தி வருபவரும் தமிழ் மொழி மீது அதீத பற்று கொண்டவருமான இவர், ஆங்கிலம் தெரிந்தவர்கள் மாத்திரமே மின்னூட்டக் கருவிகளை (Digital Devices) பயன்படுத்தலாம் என்ற நிலைமை மாறி தமிழ்மொழி தெரிந்த எவரும் இலகுவாக இதனை பாவிக்கலாம் என்ற நிலைமை இப்போது உருவாகியுள்ளது என்று குறிப்பிடுகின்றார்.

தமிழ் மொழியை மின்னூட்ட சாதனங்களில் எவ்வாறெல்லாம் பயன்படுத்த முடியும் என கடந்த பல வருடங்களாக ஆராய்ந்து அதற்கான செயற்பாடுகளை தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்றோம். ஆனால் அம்மொழியின் பாவனைக்கான தேவை அதிகரிக்க வேண்டும். தமிழ் மொழியை ஒரு செல்லினமாக (Apps) செயற்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும்.

தமிழ்த் தட்டச்சு முறைக்கு ஏற்ப உருவாக்கப்பட்ட ‘பாமினி’ (Bamini) என்னும் எழுத்துரு இலங்கையில் அதிகமாகப் பயன்படுத்தப்படும் ஒரு எழுத்துருவாகும். எந்தவித உள்ளீட்டுச் செயலியும் (Input method software) இன்றி இந்த எழுத்துருவை மட்டும் கொண்டே தமிழில் எழுதிப் பழக்கப்பட்டு விட்டனர். ஆனாலும் இந்த எழுத்துருவை பயன்படுத்துபவர்கள் பல சிரமங்களையும் அவ்வப்போது எதிர் நோக்குவதாக குறிப்பிடுகின்றனர். ஆகையினால் அதனுடன் ரெங்கநாதன் விசை முகத்தையும் (Renganathan Keyboard) இணைப்பதற்கு பலரது வேண்டுகோளுக்கிணங்கி தீர்மானித்துள்ளோம் என்றார் (முத்து நெடுமாறன்).

அதுமாத்திரம், தமிழ் எழுத்துருவாக்க முறைமை அதன் பாவனை உட்பட பலதரப்பட்ட விடயங்கள் தொடர்பில் இதன் போது விளக்கமளித்தார். கலந்து கொண்டவர்களின் கேள்விகளுக்கும் இத்தருணம் பதிலளிக்கப்பட்டது. வளவாளர் இத்தருணத்தில் உத்தமத்தினால் நினைவுச்சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டார். உத்தமம் உறுப்பினர் சரவணபவானந்தனின் நன்றியுரையுடன் நிகழ்வு நிறைவடைந்தது.

-நன்றி: வீரகேசரி (இலங்கை)