புத்ராஜெயா – கிளந்தானில் எச்5என்1 பறவைக் காய்ச்சல் பரவியிருப்பதைத் தொடர்ந்து, மலேசியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு அனுப்பப்படும் பறவைக் கூடு ஏற்றுமதியில் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது.
குறிப்பாக சமையலுக்குப் பயன்படுத்தும் வகையில் சுத்தீகரிக்கப்பட்ட பறவைக் கூடுகள் மலேசியாவில் இருந்து சீனாவிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. அங்கு அதனை சூப் வகைகளில் பயன்படுத்துகிறார்கள்.
இந்நிலையில், பறவைக் காய்ச்சல் பரவியிருப்பதை அறிந்த சீனா, மலேசியாவில் இருந்து இறக்குமதியாகும் பறவைக் கூடுகளுக்குத் தற்காலிகத் தடை விதித்திருக்கிறது.
இதனையடுத்து, மலேசியாவில் இருக்கும் சுகாதாரத்துறை அதிகாரிகள் இங்குள்ள நிலைமை குறித்து சீன சுகாதாரத்துறைக்குக் கடிதம் எழுதி வருகின்றனர்.
கிளந்தானில் கோத்தா பாரு, பாச்சோக், டிரம்பட், பாசிர் மாஸ், பாசிர் பூத்தே, தானா மேரா ஆகிய இடங்களில் பறவைக் காய்ச்சல் பரவியிருப்பதைக் கண்டறியப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.