சியோல் – நேற்று புதன்கிழமை காலை, ஜப்பானை நோக்கி வடகொரியா சில ஏவுகணைகளை ஏவியதாக அஞ்சப்படுகின்றது. வோன்சன் என்ற இடத்தின் கிழக்குப் பகுதியில் இருந்து அந்த ஏவுகணைகள் வீசப்பட்டதாகவும், ஆனால் அவை தோல்வியடைந்துவிட்டன என்றும் ஜப்பானின் கியோடோ செய்தி நிறுவனம் கூறியிருக்கிறது.
எனினும், அவை எந்த மாதிரியான ஏவுகணைகள் என்பதை அச்செய்தி நிறுவனம் தெரிவிக்கவில்லை.
இது குறித்து தென்கொரிய தற்காப்பு அமைச்சு கூறுகையில், அந்த ஏவுகணைச் சோதனை வெற்றிகரமாக அமையவில்லை என்றும், அது குறித்து தாங்கள் மேல்விவரங்களை ஆய்வு செய்து வருவதாகவும் தெரிவித்திருக்கிறது.
இந்த மாதத் தொடக்கத்தில், வடகொரியா, ஜப்பானின் வடமேற்கு கடற்பகுதியில், தொலைதூரம் செல்லும் நான்கு ஏவுகணைகளை வீசியது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்க – தென்கொரிய கூட்டு இராணுவப் பயிற்சி, போருக்குத் தயாராவது போல் தெரிவதாகக் கூறி, தாங்கள் அந்த ஏவுகணைகளை செலுத்தியதாக வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் தெரிவித்தார்.