இலண்டன் – அறுதிப் பெரும்பான்மை பெறாவிட்டாலும், அதிகமான நாடாளுமன்றத் தொகுதிகளை வென்ற கட்சி என்ற முறையில், கன்சர்வேடிவ் கட்சியே மீண்டும் ஆட்சி அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கின்றது என்றும், தெரசா மே மீண்டும் பிரதமராகத் தொடரவிருக்கிறார் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
தொடர்ந்து புதிய அமைச்சரவையை அமைக்கும் பணியில் தெரசா மே தற்போது ஈடுபட்டிருக்கிறார். இன்று வெள்ளிக்கிழமை எலிசபெத் மகாராணியாரைச் சந்தித்த தெரசா ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.
பிரிட்டனில் ஆட்சி அமைக்க 326 இடங்கள் நாடாளுமன்றத்தில் தேவைப்படுகின்றது. ஆனால், நேற்று நடந்த தேர்தலில் கன்சர்வேடிவ் கட்சி 318 இடங்களை மட்டுமே கைப்பற்றியிருக்கிறது. பெரும்பான்மையைப் பெற மேலும் 8 நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினர்களின் ஆதரவு கன்சர்வேடிவ் கட்சிக்குத் தேவைப்படுகிறது.
முக்கிய எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி 261 தொகுதிகளை வென்றிருக்கிறது.
10 தொகுதிகளை வென்றிருக்கும் வட அயர்லாந்து கட்சியான டியுபி (DUP) எனப்படும் டெமொக்ரடிக் யூனியனிஸ்ட் பார்ட்டி (Democratic Unionist Party) கட்சி தெரசா மே மீண்டும் பிரதமராக ஆதரவு தர முன்வந்திருக்கிறது.