கூச்சிங் – சரவாக் மாநிலத்திற்குள் நுழைவதற்கு மேற்கு மலேசிய அரசியல்வாதிகளை – குறிப்பாக எதிர்க்கட்சித் தலைவர்களை – தடை செய்யும் நடவடிக்கை தொடர்ந்து கொண்டிருக்கிறது.
இன்று சனிக்கிழமை காலை 11.00 மணியளவில் சரவாக் தலைநகர் கூச்சிங் வந்தடைந்த பிஎஸ்எம் எனப்படும் சோஷலிஸ்ட் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் கே.எஸ்.பவானி விமான நிலையத்திலேயே தடுத்து நிறுத்தப்பட்டு, கோலாலம்பூருக்குத் திருப்பி அனுப்பப்பட்டார்.
தனது நண்பர் ஒருவரின் திருமணத்தில் கலந்து கொள்ள கூச்சிங் வந்ததாகவும், அப்போதுதான் குடிநுழைவுத் துறை அதிகாரிகள் 2016 முதல் சரவாக்கில் நுழையத் தன் மீது தடை இருப்பதாகத் தெரிவித்ததாகவும், பவானி ஸ்டார் இணைய செய்தித் தளத்திடம் தெரிவித்திருக்கிறார்.
இது குறித்து காவல் துறையில் புகார் செய்யவும் தனக்கு அனுமதி மறுக்கப்பட்டதாகவும், அதற்குக் காரணம் விமான நிலையத்தில் தடைசெய்யப்பட்ட பகுதியைத் தாண்டிய பகுதியில்தான் காவல் நிலையம் அமைந்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டதாகவும் பவானி கூறியிருக்கிறார்.