கோலாலம்பூர் – கோலக்கிள்ளான் இந்து இளைஞர் இயக்கம் (HYO Port Klang) கடந்த 33 ஆண்டுகளாக குமுகாய நலன் கருதி பயன்மிக்கத் திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. இவ்வியக்கத் திட்டங்களில் ஒன்றானது தித்தியான் டிஜிட்டல் திட்டமாகும்.
இத்திட்டமானது கடந்த 2009 -ம் ஆண்டு மலேசியச் சமுக கல்வி அறவாரியத்துடன் (MCEF) இணைந்து தொடங்கப்பட்டது. கடந்த 9 ஆண்டுகளாகச் செயல்படுத்தப்பட்டு வரும் இத்திட்டம், தமிழ்ப்பள்ளி மாணவர்கள் உலகமய மாறுதலுக்கேற்ப தகவல் தொடர்புத் தொழில்நுட்ப திறனறிவை (ICT) பெற்றிருப்பதை உறுதிப்படுத்தும் பொருட்டு சீரிய முறையில் செயல்வடிவம் காணப்பெற்று வருகின்றது.
(தித்தியான் டிஜிட்டல் திட்ட அதிகாரிகள்)
கடந்த 9 ஆண்டுகளில் கெடா, பினாங்கு, பேராக், சிலாங்கூர், நெகிரி செம்பிலான், ஜொகூர் ஆகிய மாநிலங்களில் 60 தமிழ்ப்பள்ளிகளில், 23,000 மாணவர்கள் தகவல் தொடர்பு தொழில்நுட்ப திறனறிவை பயின்று வருகின்றனர்.
மேலும் இத்திட்டத்தில் பயின்ற 15,000 மாணவர்கள் தொடக்கப்பள்ளியை முடித்து, இடைநிலைப்பள்ளியில் பயில்கிறார்கள். மாணவர்கள் இத்திட்டத்தில் மாணவர்கள் கட்டற்ற மென்பொருள் துணைக்கொண்டு தமிழ்மொழியில் தகவல் தொடர்பு தொழில்நுட்ப கல்வியினை பயின்று வருகின்றனர். இத்திட்டம் மிக அதிகமான கட்டற்ற மென்பொருள் பயனர்களை கொண்ட திட்டமாக மலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.
புறநகர், நகர்புற மாணவர்களிடையே அமையப்பெற்ற தகவல் தொடர்புத் தொழில்நுட்ப திறனறிவை (ICT) இடைவெளியை குறைக்க இத்திட்டம் பெரும் பங்காற்றி வருகின்றது. தித்தியான் டிஜிட்டல் திட்டம் அமைக்கப்பட்டதன் வழி மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், சுற்று வட்டார பொது மக்கள் என அனைவரும் பயன்பெறும் வகையில் இருக்கிறது.
(சிலாங்கூர் & கோலாலம்பூர் மாநில வெற்றியாளர்கள்)
தமிழ்ப்பள்ளி மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் தேசிய அளவிலான தகவல் தொடர்பு தொழில் நுட்ப போட்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கோலக்கிள்ளான் இந்து இளைஞர் இயக்கம், மலேசிய சமுக கல்வி அறவாரியமும் மலேசிய உத்தமம் அமைப்பும் இணைந்து இப்போட்டியை கடந்த 3 வருடமாக வெற்றிகரமாக வழிநடத்துகிறது. இதில் 5 போட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அதில் தகவல் தொடர்புத் தொழில்நுட்ப புதிர்ப்போட்டி மட்டுமே மாநில அளவில் நடத்தப்பட்டு, வெற்றிபெறும் மாணவர்கள் தேசிய நிலைக்கு தகுதி பெறுவர்.
(பகாங் மாநில வெற்றியாளர்கள்)
கடந்த 07 ஜூலை தொடங்கி 30 ஜூலை வரை தகவல் தொடர்புத் தொழில்நுட்ப புதிர்ப்போட்டி 7 மாநிலங்களில் வெற்றிகரமாக நடந்தேறியது. இப்போட்டியில் கலந்துக் கொண்ட மாநிலங்கள் ஜொகூர், மலாக்கா, நெகிரி செம்பிலான், கெடா, பினாங்கு, கோலாலம்பூர், சிலாங்கூர், பேராக் & பகாங் ஆகிய மாநிலங்கள் ஆகும்.
கடந்த 2 ஆண்டுகளை ஒப்பீடு செய்யும் போது, இவ்வாண்டு நடைப்பெற்ற தகவல் தொடர்புத் தொழில்நுட்ப புதிர்ப்போட்டியில் பங்கெடுத்த பள்ளிகளும், மாணவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து உள்ளது.
(பேராக் மாநில வெற்றியாளர்கள்)
மேலும் இப்போட்டியில் பங்கெடுத்த மாணவர்களின் தயார் நிலையும், தகவல் தொடர்புத் தொழில்நுட்ப ஆற்றலும் அதீத வளர்ச்சியை அடைந்துள்ளது என தித்தியான் டிஜிட்டல் திட்டத்தின் தலைவர் குணசேகரன் கந்தசுவாமி கூறினார்.
தமிழ்ப்பள்ளிகளுக்கான தேசிய நிலை தகவல் தொடர்புத் தொழில்நுட்ப போட்டியில் புதிர்ப்போட்டியை தவிர்த்து, மேலும் 4 போட்டிகள் போட்டியிட உள்ளன. அவை ஸ்க்ராட்ச் (Scratch Programming) வடிவமைத்தல் போட்டி, இருபரிமான அசைவூட்ட போட்டி (Pencil2d), அகப்பக்க வடிவமைத்தல் போட்டி (Kompozer), வரைதல் போட்டிகள் ஆகும் (KolourPaint).
இப்போட்டிகளிலும் பள்ளிகளின் எண்ணிக்கையும், மாணவர்களின் பங்கேற்பும் கடந்த ஆண்டுகளை விட அதிகரித்த வண்ணம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
(இடமிருந்து: குணசேகரன் கந்தசாமி, என். எஸ். இராஜேந்திரன், கருப்பையா ஆறுமுகம்)
நாளை 05 ஆகஸ்ட் 2017, மாலை மணி 2.00க்கு மலாயா பல்கலைகழக வளாகத்தில் உள்ள, ஐபிபிபி (IPPP) அரங்கத்தில் தேசிய நிலையிலான தகவல் தொடர்புத் தொழில்நுட்ப போட்டி, இந்திய சமூக பொருளாதார மேம்பாட்டு பிரிவு (செடிக்) ஆதரவுடன் நடக்கவிருக்கிறது.
இந்நிகழ்வை பிரதமர் துறையின் கீழ் இயங்கும் இந்திய சமூக பொருளாதார மேம்பாட்டு பிரிவின் தலைமை இயக்குநர் பேராசிரியர் டத்தோ டாக்டர் என். எஸ். இராஜேந்திரன் அவர்கள் அதிகாரபூர்வமாக திறந்து வைத்து பரிசுகளை வழங்குவார் என கோலக்கிள்ளான் இந்து இளைஞர் இயக்கத்தின் தலைவர் கருப்பையா ஆறுமுகம் தெரிவித்தார்.