Home நாடு திருமண,விவாகரத்து சட்டத் திருத்தங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன!

திருமண,விவாகரத்து சட்டத் திருத்தங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன!

947
0
SHARE
Ad

Malaysia-Parliamentகோலாலம்பூர் – பலத்த சர்ச்சைகளைச் சந்தித்த திருமணம் மற்றும் விவாகரத்து சட்டம் மீதான திருத்தங்கள், கடுமையான விவாதங்களுக்குப் பின்னர் நேற்று புதன்கிழமை நாடாளுமன்றத்தால் அங்கீகரித்து ஏற்றுக் கொள்ளப்பட்டன.

நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே நீடித்த பல மணி நேர விவாதங்களால், இந்த சட்டத் திருத்தம் புதன்கிழமை பின்னிரவில்தான் வாக்களிப்புக்கு விடப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்டது.

இந்த சட்டத் திருத்தம் குறித்த விளக்கங்கள் அடங்கிய பத்திரிக்கை அறிக்கை ஒன்றை மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியம் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை வெளியிட்டிருந்தார்.

#TamilSchoolmychoice

இந்த சட்டத்திருத்தங்கள் மூலம் தம்பதியரில் மதம் மாறியவர் சம்பந்தப்பட்ட திருமணத்தை இனி செல்லாது என பொது (சிவில்) நீதிமன்றங்கள் அறிவிக்க முடியும்.

திருமணமான தம்பதியரில் ஒருவர் மதம் மாறும்போது ஏற்படும் பிரச்சனைகளில் சிலவற்றைத் தீர்ப்பதற்கு இந்த சட்டத் திருத்தங்கள் இனி உதவி புரியும்.

சட்டத் திருத்தத்தில் 88A சட்டவிதியைச் சேர்க்க வேண்டும் என ஜசெகவின்  ஈப்போ பாராட் நாடாளுமன்ற உறுப்பினரும், வழக்கறிஞருமான எம்.குலசேகரன் நாடாளுமன்ற விவாதத்தின்போது வாதாடினார். எதிர்க்கட்சித் தலைவர்கள் பலரும் இதே கருத்தை வலியுறுத்தினர்.

இந்த விவகாரத்தில் தேசிய முன்னணி அரசாங்கம் 2009-ஆம் ஆண்டில் வழங்கிய உத்தரவாதத்தைச் செயல்படுத்தத் தவறிவிட்டது என்றும் குலசேகரன் குற்றம் சாட்டினார்.

தொடர்ந்து 88-ஏ சட்டத் திருத்த விதியை இணைத்துக் கொள்ள குலசேகரன் முன்மொழிந்த தீர்மானம் நாடாளுமன்ற அவைத் தலைவரால் நிராகரிக்கப்பட்டது.

நாடாளுமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்ட சட்டத் திருத்தங்கள், தம்பதியரில் ஒருவர் மதம் மாறும்போது ஏற்படும் பிரச்சனைகளுக்கு சில தீர்வுகளை வழங்குகின்றன என்றாலும், தம்பதியரில் ஒருவரால் தன்னிச்சையாக மதம் மாற்றப்படும் குழந்தையின் மதம் குறித்த வினாக்களுக்கு விடை தரவில்லை.