Home நாடு “திருமண, விவாகரத்து சட்டத் திருத்தங்கள் – சிறந்த வழியாகும்” – டாக்டர் சுப்ரா

“திருமண, விவாகரத்து சட்டத் திருத்தங்கள் – சிறந்த வழியாகும்” – டாக்டர் சுப்ரா

946
0
SHARE
Ad

kulim-mic-dinner-09072017 (7)கோலாலம்பூர்- திருமணங்கள் மற்றும் விவாகரத்து சட்டம் மீதான திருத்தங்கள் நாடாளுமன்றத்தில் முன்மொழியப்பட்டுள்ள நிலையில், சில சட்டவிதிகளை அதில் சேர்க்க முடியாதது குறித்த விளக்கங்களை நேற்று செவ்வாய்க்கிழமை (8 ஆகஸ்ட் 2017) வெளியிட்ட பத்திரிக்கை அறிக்கை ஒன்றில் மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியம் விரிவாக வெளியிட்டிருக்கிறார்.

அந்த அறிக்கையின் முழுவடிவம் பின்வருமாறு:

“தம்பதியரில் ஒருவர் இஸ்லாம் மதத்துக்கு மதம் மாறுவதால் ஏற்படும் சில பிரச்சனைகளுக்குத் தீர்வு காணும் முயற்சியாக  1976-ஆம் ஆண்டு திருமணம் மற்றும் விவாகரத்து சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படுவது குறித்து கடந்த சில ஆண்டுகளாக விரிவான கருத்துப் பரிமாற்றங்களும், ஆலோசனைகளும் பரிசீலிக்கப்பட்டு வந்தன.

#TamilSchoolmychoice

அண்மையில் இந்த விவகாரங்களை மீண்டும் மறு ஆய்வு செய்து நீண்ட விவாதங்களுக்குப் பின்னர், செய்யப்பட வேண்டிய திருத்தங்களைக் கொண்ட பட்டியல் ஒன்றைத் தயார் செய்தோம். இந்த திருத்தங்களின் மூலம் திருமணத்திற்குப் பின்னர் ஏற்படும் மத மாற்றத்தால் நிகழக் கூடிய பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பதற்கு எளிதாக இருக்கும் என்றும் நம்பினோம்.

இந்தத் திருத்தங்கள் மீதான மசோதா வரையப்பட்டபோது அதில் சில அம்சங்களை அரசாங்கத் தலைமை வழக்கறிஞர் (அட்டர்னி ஜெனரல்) ஒப்புக் கொள்ளவில்லை. சில திருத்தங்கள் நாட்டின் அரசியல் சாசனத்தின் சில சட்டவிதிகளுக்கு முரணாக இருந்தன என்றும் ஏற்கனவே நாட்டின் உச்ச நீதிமன்றங்களால் வழங்கப்பட்ட தீர்ப்புகளுக்கு முரணாக அவை இருக்கின்றன என்றும் அவர் கருதினார்.

இதனைத் தொடர்ந்து இந்த விவகாரத்தில் ஒரு தேக்கநிலை ஏற்பட்டது. ஒட்டுமொத்த திருத்தங்களையும் அப்படியே நாடாளுமன்றத்தில் முன்மொழிந்து ஏற்றுக் கொள்ள வைக்கும் முயற்சி நிலைகுத்தியது. நடப்பிலிருக்கும் திருமணம் மற்றும் விவாகரத்து சட்டத்தின் பல்வேறு பிரிவுகளிலும் இந்தத் திருத்தங்கள் மாற்றங்களைக் கொண்டுவரும் என்பதால், திருமணத்திற்குப் பின்பு நிகழும் மதமாற்றங்களால் ஏற்படக் கூடிய பல பிரச்சனைகளுக்கு இந்தத் திருத்தங்களைக் கொண்டு தீர்வுகள் காண முடியும்.

தற்போது முன்மொழியப்பட்டிருக்கும் சட்டத் திருத்தங்கள் நடப்பு சட்டத்தின் 6 வெவ்வேறு பிரிவுகளில் ஒட்டு மொத்தமாக மாற்றங்களை ஏற்படுத்தும். அவை பின்வருமாறு:

  1. திருமணமான தம்பதியரில் ஒருவர் இஸ்லாம் மதத்துக்கு மாறும்போது அந்தத் திருமணத்தை ஒரு பொது (சிவில்) நீதிமன்றத்தில் செல்லாததாக அறிவிக்க முடியும். தற்போதுள்ள சட்ட நடைமுறைகள் இதற்கு அனுமதியளிக்கவில்லை.
  2. கணவருக்கோ அல்லது மனைவிக்கோ தேவையான உதவிகளை வழங்குவதற்கும், இத்தகைய திருமணத்தின் மூலம் பிறந்த குழந்தைகளுக்கு யார் ஆதரவளிப்பது, யார் பாதுகாப்பில் அவர்களை வளர்ப்பது போன்ற விவகாரங்களிலும் நீதிமன்றங்கள் தீர்ப்புகள் வழங்க முடியும்.
  3. மதம் மாறிய தம்பதியரில் ஒருவர், அவர் சம்பந்தப்பட்ட திருமணம் நீதிமன்றத்தால் செல்லாதது என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படுவதற்கு முன்னரே மரணமடைந்தால் அதனால் ஏற்படக் கூடிய விளைவுகள் குறித்தும் இந்தச் சட்டத் திருத்தங்கள் தீர்வுகள் வழங்குகின்றன.
  4. திருமண பந்த காலத்தின்போது தம்பதியரால் இணைந்து சேர்க்கப்பட்ட சொத்துகள் எவ்வாறு பிரிக்கப்பட வேண்டும் என்பது குறித்தும் தெளிவான நடைமுறைகளை முன்மொழியப்பட்டுள்ள இந்தச் சட்டத் திருத்தங்கள் தெளிவாகக் குறிப்பிடுகின்றது.
  5.  சம்பந்தப்பட்ட குழந்தை உயர் கல்வியை முடிக்கும்வரை அந்தக் குழந்தைக்கான பராமரிப்பு செலவினங்கள் எவ்வாறு மேற்கொள்ளப்பட வேண்டும் என்பது குறித்த தெளிவான விளக்கங்களையும் இந்தச் சட்டத் திருத்தங்கள் வரையறுக்கின்றன.

தற்போது சர்ச்சைக்கும் கருத்து வேறுபாட்டுக்கும் காரணமாக இருப்பது புதிதாக முன்மொழியப்பட்டிருக்கும் சட்டவிதி 88A – ஆகும். இத்தகைய திருமணங்கள் மூலம் பிறக்கும் குழந்தைகளின் மதம் என்னவாக இருக்க வேண்டும் என்பது குறித்த தீர்வுகளை இந்தச் சட்டத் திருத்தப் பிரிவு 88A வழங்குகிறது.

இந்தப் புதிய சட்டவிதியினால், அரசியல் சாசனம் குறித்த சில விவாதங்கள் எழும் என்பதால், முதலில் இந்த அரசியல் சாசன விவாதங்கள் குறித்த முடிவுகள் முதலில் எடுக்கப்பட்டு அதன்பின்னர் இந்தப் புதிய சட்டவிதித் திருத்தம் கொண்டுவரப்பட வேண்டும் என்பது அரசாங்கத் தலைமை வழக்கறிஞரின் கருத்தாக இருக்கிறது.

எனவே, இந்தப் புதிய 88A விதி இல்லாமல் இந்த சட்டதிருத்தங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்பதும் மற்ற திருத்தங்களால் ஏற்படக் கூடிய பலன்களை பொதுமக்கள் முதலில் அனுபவிக்க அவர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்பதும் நாம் இப்போது மேற்கொண்டிருக்கும் முயற்சியாகும்.

இருப்பினும் தம்பதியரில் ஒருவர் மட்டும் மதம் மாறுவதால் ஏற்படும் பிரச்சனைகள் குறித்து தொடர்ந்து தீர்க்கமாக தீர்வு காண்பதற்கான சட்டதிருத்தங்களைக் கொண்டு வருவதற்கு சற்றும் பின்வாங்காமல் நாம் தொடர்ந்து முயற்சி செய்வோம்.

மதமாற்றம் என்ற பெயரில் தாயின் முலைப்பால் அருந்தும் குழந்தைகள்கூட தாயிடமிருந்து பிரிக்கப்படும் கொடுமைகள் மீண்டும் மீண்டும் நிகழக் கூடாது என்பதுதான் அனைத்து மதங்களையும் சார்ந்த தெளிவான சிந்தனை கொண்ட மலேசியர்களின் முடிவாகும்.

இந்தச் சட்டத் திருத்தங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டு சட்டமாக்கப்பட்டால் நாம் ஒன்றுபட்ட ஒரு நாடு என்ற முறையில் இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் இருப்பதை உறுதி செய்ய முடியும் என நான் நம்புகிறேன்.

பொது (சிவில்) நீதிமன்றங்களும் இதுபோன்ற பிரச்சனைகளில் தீர்வு காண மேலும் வலுவான கண்ணோட்டத்துடன் இந்த விவகாரங்களில் சிலவற்றை அணுக முடியும்.

தற்போது ஏற்பட்டிருக்கும் பிரச்சனைகளில் சிலவற்றுக்கு இந்தச் சட்டத்திருத்தங்கள் மூலம் தீர்வு காண முடியும் எனவும் நாங்கள் நம்புகிறோம்.

88A என்ற புதிய சட்டவிதி, திருத்தங்களில் சேர்க்கப்படாமல் தவிர்க்கப்பட்டதால் பலரும் தெரிவித்திருக்கும் ஏமாற்றங்கள், கருத்துகள், அறிக்கைகள் ஆகியவற்றில் பொதிந்திருக்கும் உணர்வுகளை நானும் பகிர்ந்து கொள்கிறேன். சில கருத்துகளை நானும் ஏற்றுக் கொள்கிறேன்.

அதே வேளையில் நமது நாட்டின் மத, இன ஒற்றுமைக்கும், நல்லிணக்கத்திற்கும் ஒரு முள்ளாகத் தொடர்ந்து கொண்டிருக்கும் இந்தப் பிரச்சனைக்கு நிரந்தரமான இறுதி முடிவு காண்பதில் எனது போராட்டம் தொடர்ந்து நீடிக்கும் என்ற உறுதி மொழியையும் இவ்வேளையில் வழங்க விரும்புகிறேன்.”