Home வணிகம்/தொழில் நுட்பம் கனடா மாநாடு: மலேசியாவிலிருந்து 4 ஆய்வுக் கட்டுரைகள்!

கனடா மாநாடு: மலேசியாவிலிருந்து 4 ஆய்வுக் கட்டுரைகள்!

1596
0
SHARE
Ad

infitt-16 tamil internet conf- 537x 360தொரண்டோ – அனைத்துலக அளவில், தமிழ் மொழியைப் பொறுத்தவரையில், தகவல் தொழில் நுட்பத் துறையில் மலேசியாவின் பங்களிப்பு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததும், அளப்பரியதும் ஆகும்.

அந்த பங்களிப்பு கனடாவின் தொரண்டோ நகரில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் 16-வது உலகத் தமிழ் இணைய மாநாட்டிலும் பிரதிபலிக்கின்றது.

இந்த மாநாட்டில், படைக்கப்படத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் 34 கட்டுரைகளில் 4 கட்டுரைகள் மலேசியர்களின் படைப்புகளாகும். அனைத்துலக அளவில் பல நாடுகளில் இருந்து பெறப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட, தகவல் தொழில் நுட்பத் துறையில் தமிழ் மொழி தொடர்பான கட்டுரைகளை தலைசிறந்த அறிஞர்களைக் கொண்ட ஆய்வுக் குழு ஆராய்ந்து, வடிகட்டி இந்த 34 ஆய்வுக்கட்டுரைகளை மாநாட்டில் சமர்ப்பிக்கப்பட பரிந்துரை செய்திருக்கிறது.

#TamilSchoolmychoice

மாநாட்டின் கருப் பொருள், நடப்பு தகவல் தொழில் நுட்ப சூழ்நிலைகள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு இந்த கட்டுரைகள் தேர்ந்தெடுக்கப்பட்டன.

மலேசியர்களின் 4 ஆய்வுக் கட்டுரைகள்

ஜோகூரைச் சேர்ந்த தமிழ்ப் பள்ளி ஆசிரியையான கஸ்தூரி இராமலிங்கம் “ஊடாடல், நகர்ப்படங்கள் கலந்த மின்னூல்கள் வழிக்குழந்தைகளுக்கான தமிழ்க்கல்வி” என்ற தலைப்பிலான ஆய்வுக் கட்டுரையை உலகத் தமிழ் இணைய மாநாட்டில் நேரில் கலந்து சமர்ப்பித்து உரையாற்றுகிறார்.

மற்றொரு மலேசிய ஆய்வாளரான சாந்தி இராமலிங்கம் “The role of VLE Frog in assisting students, teacher and parents in Mlearning and usage of ICT tool such as smartphones and computational devices in school curriculum” என்ற தலைப்பிலான ஆய்வுக் கட்டுரையை மாநாட்டில் சமர்ப்பிக்கிறார்.

“இலக்கணப் பிழைகளின்றி தமிழ் எழுதிட எட்மோடோ             (Edmodo) வழி மெய்நிகர் கற்றல் கற்பித்தல் அணுகுமுறை” என்ற தலைப்பிலான கட்டுரையை மற்றொரு மலேசிய ஆய்வாளரான எஸ்.புஷ்பராணி சமர்ப்பிக்கிறார்.

சிவபாலன் திருச்செல்வம், மேனேஸ் ரூபிணி தியாகராஜன் ஆகிய இரு மலேசியர்களும் இணைந்து “தமிழ் கற்றல் கற்பித்தலில் 21ஆம் நூற்றாண்டுத் தகவல் தொழில்நுட்ப மதிப்பீடு : குயிசிஸ் (Quizizz)” என்ற தலைப்பிலான ஆய்வுக் கட்டுரையைச் சமர்ப்பிக்கின்றனர்.

மலேசியா சார்பில் சமர்ப்பிக்கப்படும் இந்த நான்கு கட்டுரைகளைத் தவிர்த்து எஞ்சிய 30 கட்டுரைகள், இந்தியா, இலங்கை, சுவிட்சர்லாந்து, அமெரிக்கா, சிங்கப்பூர், தைவான், கனடா, பிரிட்டன் ஆகிய நாடுகளின் பங்கேற்பாளர்களால் சமர்ப்பிக்கப்படுகின்றன.

முத்து நெடுமாறன் சிறப்புரை

16-வது உலகத் தமிழ் இணைய மாநாட்டில் மலேசியாவுக்கு பெருமை சேர்க்கும் மற்றொரு அங்கமாக இரண்டாம் நாளில் மலேசியாவின் கணினித் துறை வல்லுநரும், உத்தமம் அமைப்பின் தோற்றுநர்களில் ஒருவருமான முத்து நெடுமாறன் முதன்மைச் சிறப்புச் சொற்பொழிவாற்றுகிறார்.

infitt-16 tamil conference-key note speakersஇன்று ஞாயிற்றுக்கிழமை 27 ஆகஸ்ட் 2017-ஆம் நாளுடன் உத்தமம் ஏற்பாட்டில் நடைபெறும் 16-வது உலகத் தமிழ் இணைய மாநாடு நிறைவடைகின்றது.