Home நாடு கெட்கோ: “நெகிரி அரசாங்கம் விசாரணையில் துணை நிற்கும்” மந்திரி பெசார்!

கெட்கோ: “நெகிரி அரசாங்கம் விசாரணையில் துணை நிற்கும்” மந்திரி பெசார்!

918
0
SHARE
Ad

HASSANimageசிரம்பான் – கெட்கோ நிலத்திட்டப் பிரச்சனையில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் விசாரணையில் இறங்கியிருப்பதைத் தொடர்ந்து, செவ்வாய்க்கிழமை (29 ஆகஸ்ட் 2017) இந்த விவகாரம் சம்பந்தப்பட்ட நிறுவனங்களில் அதிரடி சோதனைகள் நடத்தப்பட்டன.

கெட்கோ நிலத்திட்டத்தைக் கையகப்படுத்திய தாமரை ஹோல்டிங்ஸ் நிறுவனம், மற்றும் நெகிரி செம்பிலான் மாநில அரசாங்க அலுவலகம் ஆகிய இடங்களில் சோதனைகள் நடத்தப்பட்டு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.

இதனைத் தொடர்ந்து, நெகிரி செம்பிலான் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ முகமட் ஹசான், இந்த விவகாரத்தில் விசாரணை நடத்துவது ஊழல் தடுப்பு ஆணையத்தின் பொறுப்பு என்றும் இந்த விசாரணையில் நெகிரி மாநில அரசாங்கம் முழு ஒத்துழைப்பை வழங்கும் என்பதோடு, இந்தப் பிரச்சனைக்கு ஊழல் தடுப்பு ஆணையம் தீர்வு கண்டால் அதனைத் தாங்கள் வரவேற்பதாகவும் முகமட் ஹசான் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

நேற்று நெகிரி மாநில அரசாங்கத்தின் ஆட்சிக்குழுக் கூட்டத்திற்குப் பின்னர் பத்திரிக்கையாளர்களைச் சந்தித்தபோது அவர் மேற்கண்டவாறு கூறினார்.

“இது நீண்ட காலம் நீடித்துக் கொண்டிருக்கும் பிரச்சனை. மாநில அரசாங்கம் தங்களால் இயன்ற அளவுக்கு இதில் உதவி புரியவே விரும்புகிறது. அனைத்தையும் நாங்கள் வெளிப்படையாகவே கையாளுவோம்” என்றும் முகமட் ஹசான் உறுதியளித்தார்.

கெட்கோ நில விவகாரம்

கெட்கோ நில விவகாரத்திற்கான நடவடிக்கைக் குழுவினர் வழங்கிய தகவல்களின் அடிப்படையில் ஊழல் தடுப்பு ஆணையம் சிறப்பு விசாரணைக்குழு ஒன்றை அமைத்து கெட்கோ விவகாரத்தை விசாரித்து வருகிறது.

பல ஆண்டுகளுக்கு முன்னர் தேசியத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் முயற்சியால் 1500 ஹெக்டர் நிலப்பரப்பில் கரும்புத் தோட்டத் திட்டமாகத் தொடங்கப்பட்ட இந்த நிலத் திட்டம் கால ஓட்டத்தில் தோல்வியில் முடிந்தது.  முதலில் இதில் முதலீடு செய்தவர்களுக்கு தலா 0.4 நிலப்பரப்பிலான வீடும் கரும்பு பயிரிட 3.2 ஹெக்டர் நிலமும் ஒதுக்கப்பட்டது.

பின்னர் நிலத் திட்டம் தோல்வியில் முடிந்ததைத் தொடர்ந்து, இந்தத் திட்டத்திற்கு நிதி பராமரிப்பாளர்கள் (Liquidators) நியமிக்கப்பட்டனர்.

நிதி பராமரிப்பாளர்கள் இந்த நிலத் திட்டத்தை 2006-ஆம் ஆண்டில் தாமரை ஹோல்டிங்ஸ் நிறுவனத்திடம் விற்பனை செய்தனர்.

இந்த நில விற்பனையில் முறைகேடுகள் நிகழ்ந்ததாக கெட்கோ நிலத் திட்ட நடவடிக்கைக் குழுவினர் புகார்கள் அளித்ததைத் தொடர்ந்து ஊழல் தடுப்பு ஆணையம் விசாரணைகளைத் தொடக்கியிருக்கிறது.

இதற்கிடையில் தாமரை ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ரெனா இராமலிங்கம் ஊழல் தடுப்பு ஆணையத்தின் விசாரணையைத் தாங்கள் வரவேற்பதாகவும், அதற்கான முழு ஒத்துழைப்பை வழங்குவோம் என்றும் உறுதியளித்தார்.

ஊழல் தடுப்பு ஆணையத்தின் விசாரணைகளின் மூலம் உண்மைகள் வெளிவரும் எனத் தாங்கள் நம்புவதாகவும் இராமலிங்கம் மேலும் தெரிவித்தார்.