Home கலை உலகம் பிக் பாஸ்: ஆரவ் வெற்றி பெற்றதற்கான காரணங்கள் என்ன?

பிக் பாஸ்: ஆரவ் வெற்றி பெற்றதற்கான காரணங்கள் என்ன?

1262
0
SHARE

big boss-finalists-கோலாலம்பூர் – மலேசியா உள்ளிட்ட உலகம் முழுமையிலுமான தமிழ் தொலைக்காட்சி இரசிகர்கள் கடந்த 100 நாட்களாக தங்கள் மனதோடும், எண்ணங்களோடும், கருத்துப் பரிமாற்றங்களோடும் ஒரே அலைவரிசையில் பின்னிப் பிணைந்து கிடந்த ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சி நேற்றுடன் பிரம்மாண்டமான விழாவாக ஒரு நிறைவுக்கு வந்தது.

100 நாட்கள் தாக்குப் பிடித்து இறுதிச் சுற்று வரை வந்து ஆரவ் வெற்றி பெற்றிருக்கிறார்.

இப்போதெல்லாம் ரியலிடி ஷோ என்ற பெயரில் நடைமுறை வாழ்க்கையை இயல்பாகச் சித்தரிக்கும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வெற்றியாளர் அறிவிக்கப்படும்போது, நிச்சயமாக அந்த முடிவில் சர்ச்சைகள் எழத்தான் செய்கின்றன. பலர் ஒப்புக் கொள்வதில்லை. முரண்படுகிறார்கள்.

arav-big boss-participantஇரசிகர்களின் வாக்குகள் மூலம் ஆரவ் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பதை வைத்துப் பார்க்கும்போது, ஒரு கண்ணோட்டத்தில் இரசிகர்களின் முடிவும் மிகச் சரியாகத்தான் இருக்கிறது என்றுதான் எண்ணத் தோன்றுகிறது.

சரி! ஆரவ், வெற்றி பெற்றதற்கான காரணங்கள் என்னவாக இருக்கும் என்பதைக் கொஞ்சம் ஆராய்வோமா?

போட்டியாளர்களில் அதிகம் பயனடைந்தவர் ஆரவ்

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க வந்தவர்களில், நேற்றைய நிகழ்ச்சி முடிவடைந்தபோது அதிகம் பலனடைந்தவர்கள் யார் என்று பார்த்தால் அதிலும் ஆரவ்தான் சந்தேகமின்றி முதலிடத்தைப் பிடிக்கிறார்.

இரண்டாவது இடத்தை ரெய்சாவுக்கு வழங்கலாம்!

raizabigbossகாரணம், நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் ஏதோ ஒரு விதத்தில் மக்களோடும், சினிமா, தொலைக்காட்சி இரசிகர்களோடும் பரிச்சயம் இருந்தது. பிரபல்யம் இருந்தது.

ஆனால் அப்படி எதுவும் இல்லாமல், யார் இவர் என்ற கேள்வியோடு உள்ள நுழைந்த ஆரவ், இன்று அடைந்திருக்கும் புகழ், உலக அளவிலான அறிமுகம், கற்பனை கூட செய்து பார்க்க முடியாதது.

ரெய்சாவும் அதேபோலத்தான்! அரைகுறைத் தமிழில் கொஞ்சிப் பேசியது, அழகாக இருந்தது, யார் இவர் என்பதே தெரியாமல் நிகழ்ச்சிக்குள் காலடி எடுத்து வைத்தது, என்பது போன்ற சில பின்னணிகளை மட்டுமே கொண்டிருந்த ரெய்சாவும் இறுதியில் வெளியேறியபோது, மிகப் பெரிய புகழை அடைந்திருந்தார்.

indian 2-bigg-boss-kamal-shankar-நேற்றைய நிகழ்ச்சியில் இந்தியன் -2 படத் தொடக்கத்தை இயக்குநர் ஷங்கர் அறிவித்தபோது…

சினிமா அறிமுகம் எதுவும் இல்லாமல் உள்ளே வந்தவர் ஆரவ். இத்தனைக்கும் இஸ்லாமிய மதப் பின்னணியைக் கொண்டவர். தொடக்கம் முதலே அந்தத் தகவல் மக்கள் முன்னிலையிலும் வைக்கப்பட்டது.

இருப்பினும், ஒருமுறை கூட இரசிகர்கள் அவரைக் கைவிடவில்லை. வெளியேற்றப்பட வாக்களிக்கவும் இல்லை. இறுதிச் சுற்றில் கூட வென்றிருப்பதன் மூலம், தமிழர்கள் அனைவரும் மத, இன வித்தியாசங்களைக் கடந்து செயல்படுகிறார்கள் என்பது இன்னொரு முறை நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

மதங்களை வைத்து அரசியல் நடத்துபவர்கள்தான் இந்து, முஸ்லீம் என்ற பிரிவினைகளைப் பேசுகிறார்களே தவிர, தமிழ் மக்கள் அதனை எப்போதும் ஒரு பொருட்டாகவே – தாங்கள் எடுக்கும் முடிவுகளுக்கான இடையூறாகப் பார்ப்பதே இல்லை – என்பதற்கான மற்றொரு எடுத்துக் காட்டாக நடந்து முடிந்த ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சி திகழ்கிறது.

பொய்முகம் காட்டாத ஆரவ்

ஆரவ் தோற்றத்திலும் அவ்வளவு அழகனில்லை. கணேஷ் வெங்கட்ராம் போன்ற பளிச்சென்ற நிறமில்லை. சிநேகன் போன்று அழகு தமிழில் கவிதை பாடும் திறமையில்லை.

big boss-kamalhassan-ஆனாலும், கட்டுமஸ்தான உடலோடு, மாநிறத்தோடு, கவர்ச்சியான, ஈர்ப்பு சக்தி கொண்ட – சாதாரணமாகச் சாலையில் நம்மைக் கடந்து போகும் – ஒரு தமிழனைப் பிரதிபலித்தார் ஆரவ். அதுவும் அவருக்கு கிடைத்த இரசிகர்களின் அமோக ஆதரவுக்கான ஒரு காரணமாக இருக்கலாம்.

பங்கேற்பாளர்களில் இறுதிவரை மிக இயல்பாக, நேர்மையாக, பொய்முகம் காட்டாமல் இருந்தவர் ஆரவ். அவரது வலிமையான உடல் அமைப்பு, கடுமையான சில போட்டிகளில் விட்டுக் கொடுக்காமல், கணேஷ் போன்றவர்களின் ஆஜானுபாக உடல்களோடு எதிர்த்துப் போட்டியிட உதவியது.

அதைவிட முக்கியமாக, அவர் அதிகமாக எடுத்ததுக்கெல்லாம் அழவில்லை. சின்னச் சின்ன முரண்பாடுகளுக்காக கோபப்படவில்லை. தேவையற்ற வாக்கு வாதங்களில் ஈடுபடவில்லை. நான் இறுதிவரை இருந்தாக வேண்டும் என அடம் பிடிக்கவில்லை. இதையும் இரசிகர்கள் கவனித்திருப்பார்களோ – மற்ற போட்டியாளர்களுடன் ஒப்பிட்டுப் பார்த்திருப்பார்களோ – என்று தோன்றுகிறது.

ஓவியா பிரச்சனைதான் ஒரே பின்னடைவு

oviya biggbosstamilஓவியாவுடன் காதல், மருத்துவ முத்தம், ஓவியாவைக் காதலிப்பது போல் ஏமாற்றுகிறார் என்பதுபோன்ற எண்ணங்கள் இரசிகர்கள் மத்தியில் பரவிய தருணங்களில், ஆரவ்வின் ஆதரவு நிலைமை அதல பாதாளத்துக்கு சென்றது என்றுதான் கூற வேண்டும்.

ஆனால், அடுத்த சில தினங்களில், ஓவியாவுக்கு இருந்த உடல், மனநலக் குறைவு, அதனால் அவர் நடந்து கொண்ட விதம், ஆரவ்வை ஓவியா ஆக்கிரமிப்பு செய்ய முற்பட்ட விதம், அவரை விரட்டி விரட்டிக் கேலி செய்தவிதம், இவற்றால் ஆரவ் பக்கம் மீண்டும் அனுதாபம் திரும்பியது.

snehan-big boss-தனது நிலைப்பாடு குறித்து அவர் தொடர்ந்து தந்த விளக்கங்கள், பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து கொண்டு, வெளியில் இருக்கும் பெற்றோர்களுடனான தொடர்பில்லாமல் இருக்கும் நிலைமையில், காதல், கல்யாணம் போன்ற வாழ்க்கையின் முக்கிய முடிவுகளை எடுக்க முடியாது என அவர் தற்காத்துப் பேசியது அவர் மீதான மதிப்பைக் கூட்டியது. அவரது வாதங்களில் ஒருவித நியாயம் இருந்ததாகவே இரசிகர்கள் உணர்ந்தார்கள்.

ஓவியாவைத் திருப்தி செய்யவே, அவரைச் சாந்தப்படுத்தும் முயற்சியாகவே, ‘மருத்துவ முத்தம்’ தந்தேன் என்ற விளக்கம், அதற்காக தான் வெளியேற்றப்பட்டாலும் ஏற்றுக் கொள்வேன் என்ற பக்குவம் – இப்படிப் பல காரணங்களால் ஆரவ்வின் ஆதரவு விகிதாச்சாரம் மெல்ல மெல்ல இரசிகர்களிடையே மீண்டும் ஏறத் தொடங்கியது.

இறுதியில் அவரே வெற்றியாளர் என்ற நிலைமை வரை அவரைக் கொண்டு வந்து சேர்த்திருக்கின்றன, பிக் பாஸ் நிகழ்ச்சியின் பல்வேறு சம்பவங்கள்!

மூவரில் யாருக்கு என்ன குறை?

Bigboss-Bannerஇறுதிச் சுற்றில் சிநேகன், கணேஷ், ஆரவ் என மூவரில் ஒருவர்தான் வெற்றி பெறுவார் என்பது கடைசி சில நாட்களில் தெளிவாகவே தெரிந்து விட்டது.

சிநேகன்தான் வெற்றி பெறுவார் என நடிகர் சதீஷ் போன்று அடித்துச் சொன்னவர்களும் உண்டு. ஆனால், எதற்கெடுத்தாலும் அழுது கொண்டே இருந்தது, சிநேகனுக்கு பின்னடைவை ஏற்படுத்தியது எனலாம். கொஞ்சம் கூடுதலாக சீன் போடுகிறாரோ என்ற எண்ணத்தை சில கட்டங்களில் ஏற்படுத்தியது. அதிலும் குறிப்பாக இன்னும் இரண்டு நாட்களில் நிகழ்ச்சி முடியப் போகிற தருணத்தில் கூட, 50 நாட்களே உடனிருந்த பிந்து மாதவி வெளியேறியபோது, அடுத்த இரண்டு நாட்களில் வெளியில் சந்தித்துக் கொள்ளலாம் என்ற நிலைமையிலும், சிநேகன் அழுததை இரசிக்க முடியவில்லை.

அதுபோன்ற தருணங்களில் ஆரவ் காட்டிய ஆண்மைத் தனம், எதையும் ஏற்றுக் கொள்ளும் பக்குவம் அவரை வித்தியாசப்படுத்திக் காட்டியது.

bigg-boss-kamal-hassanஅப்பா வந்தபோது, சிநேகன் அழுதது மட்டும்தான் உண்மை. அவர் மட்டுமல்லாமல், சுற்றியிருந்தவர்களையும் அழவைத்துவிட்டார் சிநேகன். கமல் கூட கண்கலங்கி நின்றார், அந்தக் காட்சிகள் காட்டப்பட்டபோது!

100 நாள் இருந்து விட வேண்டும் என்ற வைராக்கியத்தை சிநேகன் காட்ட, ஆரவ்வோ வருவதை ஏற்றுக் கொள்கிறேன் என்ற பக்குவத்தை எடுத்துக்காட்டினார்.

மற்றவர்கள் வெளியேற்றப்படும் தருணங்கள் வந்தபோது, ஆரவ் ஓடிச் சென்று உதவி செய்தாரே தவிர, வருத்தப்பட்டாரே தவிர, ‘ஓ’வென்று அழவில்லை. இது ஒரு போட்டி என்ற நிலைப்பாட்டை, வித்தியாசத்தை நன்கு உணர்ந்திருந்தார் – அதைத் தக்க முறையில் வெளிப்படுத்தவும் செய்தார்.

Bigbossகணேஷ்  வெங்கட்ராம், தனது சுய நோக்கங்களுக்காக மட்டுமே செயல்படுகிறார் என்பதும், எதையும் கண்டு கொள்வதில்லை, பிரச்சனைகளில் மாட்டிக் கொள்ளாமல் நடந்து கொள்கிறார் என்பதும் அடிக்கடி மற்ற பங்கேற்பாளர்களால் வெளிச்சத்துக்குக் கொண்டுவரப்பட்டது – இதுவும் அவரை வெற்றியாளர் நிலையிலிருந்து பின்னுக்குத் தள்ளியது.

இப்படியாக, கடந்த நூறு நாட்களாக,உலகத் தமிழர்கள் மத்தியில் ஒரே அலைவரிசையில் நாள்தோறும் விவாதிக்கப்பட்ட – கருத்து முரண்பாடுகளால் தமிழர்களை ஒன்றிணைத்த – அண்மைய நிகழ்வு எதுவும் இல்லை எனலாம், ஜல்லிக்கட்டைத் தவிர!

உலகத் தமிழர்களிடையே பல கலாச்சார விவாதங்களை அரங்கேற்றிய  பிக் பாஸ், அடுத்து வரும் நூறு நாட்களுக்கும், ஏன் அடுத்தாண்டு பிக் பாஸ் -2 தொடங்கிய பின்னரும் ஒப்பீடுகளோடு பேசப்படும் என்பது திண்ணம்.

  • இரா.முத்தரசன்
Comments