சென்னை,மார்ச் 25-தமிழ்நாட்டின் சட்டப் பேரவையில் இருந்து தேசிய முற்போக்கு திராவிடர் கழக சட்டமன்ற உறுப்பினர்கள் ஆறு பேரை ஓராண்டு இடைநீக்கம் செய்வதாக சட்டப்பேரவைத் தலைவர் தனபால் திங்களன்று அறிவித்தார்.
தே.மு.தி.க. அதிருப்தி எம்.எல்.ஏக்களைத் தாக்கிய விவகாரம் தொடர்பாக, தே.மு.தி.க. எம்.எல்.ஏக்கள் 6 பேர் அடுத்த ஓராண்டுக்கு சட்டப் பேரவைக் கூட்டங்களில் பங்கேற்க தடை விதித்து தமிழக சட்டப் பேரவை கூட்டத்தின்போது அவைத் தலைவர் தனபால் உத்தரவிட்டார்.
கடந்த தொடரில் பிப்ரவரி 8 ஆம் நாளன்று சட்டப்பேரவை நடைபெற்றுக்கொண்டிருந்தபோதே அதிருப்தி தேமுதிக உறுப்பினர் தமிழழகன் மற்றும் மைக்கேல் ராயப்பனைத் தாக்கியதாக கட்சியின் கொறடா சந்திரகுமார் உள்ளிட்ட ஆறு பேரின் நடவடிக்கை குறித்து விசாரித்த சட்டமன்ற உரிமைக் குழு அந்த அறுவரையும் ஓராண்டுக்கு இடைநீக்கம் செய்வதென முடிவெடுத்ததாக தனபால் தெரிவித்தார்.
சட்டமன்ற மாண்பினைக் காப்பாற்றும் வகையிலேயே அப்படி ஒரு முடிவு எனவும் தனபால் விளக்கினார்.
சந்திரகுமார், முருகேசன், பார்த்தசாரதி, நல்லதம்பி, செந்தில்குமார், அருள்செல்வன் ஆகியோர் இவ்வாறு இடைநீக்கம் செய்யப்படுகின்றனர்.
அவைத்தலைவரின் இந்த அறிவிப்புக்கு அனைத்து எதிர்க்கட்சி உறுப்பினர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
ஒரு வருட கால நீக்கம் என்பது மிகவும் அதிகம் என்றும், ஒரு மாதம் வரை இருந்திருக்கலாம் என்றும் கருத்து தெரிவித்த சட்டமன்ற உறுப்பினர்கள், இது அவை உறுப்பினர்களின் தொகுதி நடவடிக்கைகளைக்கூட மேற்கொள்ள முடியாத சூழ்நிலையை அவர்களுக்கு ஏற்படுத்தி விடும் என்று கருத்து தெரிவித்தனர்.
இடைநீக்கத்தைக் கண்டித்து தே.மு.தி.க., தி.மு.க., காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.