புதுடில்லி – கேரளாவின் பிரபல ஆலயமான சபரிமலைக்கு 10 வயது முதல் 50 வயது வரையிலான பெண்கள் செல்லக் கூடாது என நடைமுறையில் இருக்கும் தடையை எதிர்த்துத் தொடுக்கப்பட்ட வழக்கு புதுடில்லியிலுள்ள உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசனப் பிரிவுக்கு மாற்றப்பட்டிருக்கிறது.
பாரம்பரியமாகப் பின்பற்றப்படும் இந்த நடைமுறையை இரத்து செய்யப்பட வேண்டுமென செய்து கொள்ளப்பட்ட விண்ணப்பத்தை இன்று வெள்ளிக்கிழமை விசாரித்த உச்ச நீதிமன்றம், இந்த விவகாரத்தை ஐந்து நீதிபதிகளைக் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டது.
மாநில அரசாங்கத்தால் சட்டத்தின் மூலம் உருவாக்கப்பட்ட திருவாங்கூர் தேவஸ்தான வாரியம் பல்லாண்டு காலமாகப் பின்பற்றும் இந்த பாரம்பரிய நடைமுறை தொடர வேண்டுமா, இல்லையா என்பதை இனி உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு முடிவு செய்யும்.