Home நாடு வரவு செலவுத் திட்டம்: இந்தியர்களுக்குக் கிடைத்தவை என்ன?

வரவு செலவுத் திட்டம்: இந்தியர்களுக்குக் கிடைத்தவை என்ன?

1334
0
SHARE
Ad

subra-private-general practitioners-meet-sell-24072017 (2)கோலாலம்பூர் – நேற்று வெள்ளிக்கிழமை பிரதமரும், நிதியமைச்சருமான டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் தான் அறிவித்த 2018-ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் எதிர்பார்த்தது போலவே இந்தியர்களுக்கு பல்வேறு சலுகைகளையும், பயனான திட்டங்களையும் அறிவித்தார்.

உரையைத் தொடங்கிய சில நிமிடங்களிலேயே “இது தீபாவளி தருணமாக இருப்பதால், அனைவருக்கும் எனது தீபாவளி வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதாக நஜிப் கூறினார்.

பின்னர் தமிழிலேயே ‘தீபாவளி வாழ்த்துகள்’ என கூறிய பிரதமர் தனது வரவு செலவுத் திட்ட உரையைத் தொடர்ந்தார்.

#TamilSchoolmychoice

பின்னர் தனது உரையின் நடுவில், இந்த நாடும் நமது எதிர்காலமும் அனைத்து மலேசியர்களுக்கும் பொதுவானது, எந்த ஓர் இனத்துக்கு மட்டும் உரியதல்ல என்று கூறினார். அப்போது தமிழில் ‘நாளை நமதே’ என சில முறை உரக்கக் கூறி, நாடாளுமன்ற உறுப்பினர்களில் பலத்த கைத்தட்டலைப் பெற்றார்.

வரவு செலவுத் திட்டம் – டாக்டர் சுப்ராவின் கருத்து

najib-presenting-budget-2018
பிரதமர் நஜிப் நேற்று நாடாளுமன்றத்தில் வரவு செலவுத் திட்டத்தைச் சமர்ப்பித்தபோது…

நஜிப் துன் ரசாக் அறிவித்த 2018-ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் இந்திய சமுதாயத்திற்கான பல்வேறு நலத் திட்டங்கள் அடங்கியிருப்பதாகவும், இந்திய சமுதாயம் நீண்ட காலமாக வற்புறுத்தி வந்த பல முக்கிய கோரிக்கைகள் ஏற்றுக் கொள்ளப்பட்டிருப்பதாகவும் மஇகா தேசியத் தலைவரும், சுகாதார அமைச்சருமான டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்பிரமணியம் தெரிவித்தார்.

  • 7 சதவீத கல்வி மற்றும் அரசாங்க வேலை வாய்ப்பு

“குறிப்பாக உள்நாட்டுப் பொது பல்கலைக் கழகங்களில் 7 சதவீத கல்வி வாய்ப்புகள் இந்திய சமுதாயத்திற்கு ஒதுக்கீடு செய்யப்படுவதாகவும் மேலும் அரசாங்க சேவைகளில் இந்தியர்களுக்கு 7 சதவீத வேலை வாய்ப்புகள் வழங்கப்படும் என்றும் பிரதமர் விடுத்திருக்கும் அறிவிப்பு பாராட்டுக்குரியதாகும். கடந்த பல ஆண்டுகளாக ஒவ்வொரு மஇகா மாநாட்டிலும் இந்தக் கோரிக்கைகள் மஇகா பேராளர்களால் தொடர்ந்து விடுக்கப்பட்டு வந்திருக்கின்றன” என்றும் டாக்டர் சுப்ரா சுட்டிக் காட்டினார்.

  • தமிழ்ப் பள்ளிகளுக்காக 5 கோடி ரிங்கிட்

“இது தவிர தமிழ்ப் பள்ளிகளின் மேம்பாட்டுக்காக 5 கோடி ரிங்கிட்டும் தெக்கும் கடனுதவிக்காக 5 கோடி ரிங்கிட்டும் ஒதுக்கப்பட்டிருக்கிறது. நமது சமுதாயத்தில் சேமிப்பு கலாச்சாரம் மேலோங்க வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டு, இந்திய சமுதாயத்திற்கென பிரத்தியேகமாக பிஎன்பி எனப்படும் பெர்மோடலான் நேஷனல் பெர்ஹாட்டின் சிறப்பு அமானா சாஹாம் யூனிட் டிரஸ்ட் பங்குகள், 1.5 பில்லியன் என்ற எண்ணிக்கையில் ஒதுக்கப்பட்டிருக்கின்றன. ஒவ்வொரு விண்ணப்பதாரருக்கும் அதிகபட்சம் 30 ஆயிரம் ரிங்கிட் பெறுமானமுள்ள பங்குகள் இந்தத் திட்டத்தின் மூலம் ஒதுக்கப்படும். இந்த முதலீடுகளில் பங்கு பெறுவதற்கு வசதி இல்லாதவர்களுக்கு கடன்வசதிகளும் செய்து தரப்படும். பண வசதி கொண்டவர்கள் நேரடியாக இந்தத் திட்டத்தில் பங்கு கொள்ள முடியும். இதன் மூலம் இந்தியர்களின் சேமிப்பு விகிதாச்சாரம் உயரும்” என்றும் டாக்டர் சுப்ரா மேலும் தெரிவித்தார்.

பிரதமர் நஜிப் 2018-ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை அறிவித்த பின்னர், நாடாளுமன்ற வளாகத்தில் பத்திரிக்கையாளர்களைச் சந்தித்தபோது டாக்டர் சுப்ரா இவ்வாறு தெரிவித்தார்.

  • இந்திய சமூக மேம்பாட்டுக்காக 5 கோடி ரிங்கிட்

மேற்குறிப்பிட்ட அறிவிப்புகள் தவிர இந்தியர்களின் சமூக ரீதியான மேம்பாடுகளுக்கு 50 மில்லியன் ரிங்கிட் வழங்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்த டாக்டர் சுப்ரா, இவையெல்லாம் மஇகா முன் வைத்த கோரிக்கைகள் என்றும் வேறு சில கோரிக்கைகள் இன்னும் ஏற்றுக் கொள்ளப்படவில்லை என்றாலும், அவை நிறைவேற்றப்பட மஇகா தொடர்ந்து வலியுறுத்தி வரும் என்றும் கூறினார்.

2018 ஜனவரி முதல் 2022-ஆம் ஆண்டு வரை பிறக்கும் ஒவ்வொரு மலேசியக் குழந்தையும் 200 ரிங்கிட்டுக்கான யூனிட் டிரஸ்ட் போன்று சேமிப்புக் கணக்கில் பெறும் என்றும் பிரதமர் அறிவித்திருந்தார். அந்தக் குழந்தைகளின் பெற்றோர்கள் இந்த வங்கிக் கணக்கிலேயே தொடர்ந்து தங்களின் பிள்ளைகளுக்காக சேமிக்கலாம். 2050-ஆம் ஆண்டில் இந்த சேமிப்புகளை அந்தக் குழந்தைகள் பெரியவர்களானதும் பெற்றுக் கொள்ளலாம்.

இதன் மூலமும் பல இந்தியக் குழந்தைகள் பயன்பெறுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.