Home நாடு ‘பேயோட்டி’ திகில் நாவல் குறித்து நாவலாசிரியர் கோ.புண்ணியவானுடன் நேர்காணல்!

‘பேயோட்டி’ திகில் நாவல் குறித்து நாவலாசிரியர் கோ.புண்ணியவானுடன் நேர்காணல்!

1631
0
SHARE
Ad

Peyottiகோலாலம்பூர் – மலேசியாவைச் சேர்ந்த பிரபல எழுத்தாளர் கோ.புண்ணியவான் ‘வனதேவதை’ என்ற சிறுவர் நாவலுக்குப் பிறகு, தன்னுடைய இரண்டாவது சிறுவர் திகில் நாவலான ‘பேயோட்டி’யைக் கொண்டு வந்திருக்கிறார்.

பெரியவர்களுக்கான சிறுகதைகள், நாவல் கட்டுரைகள் படைத்துவந்த  கோ.பு, தற்சமயம் சிறுவர் நாவல் துறையில் ஈடுபாடு காட்டி வருகிறார்.  சிறுவர் வாசிப்பு மீதான அக்கறை  ஏன் வந்தது என்ற வினாவோடு அவரோடு ஓர் நேர்காணலை நிகழ்த்தினோம்.

கேள்வி:  உங்களின் சிறுவர் நாவலான வனதேவதை கொடுத்த உற்சாகமா இன்னொரு நாவலான பேயோட்டியை எழுத வைத்தது?

#TamilSchoolmychoice

பதில்: வனதேவதை நூல் 4000 பிரதிகள் விற்றன. மாணவர்கள் மிகுந்த உற்சாகத்தோடு வாங்கி வாசித்தனர். வாசித்தவர்களில் மிகச் சிலர் என்னோடு தங்களின் வாசிப்பு அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டனர். அதில் ஒரு சிலர் இன்னொரு நாவலை எப்போது எழுதுவீர்கள் என்று ஆர்வத்தோடு  வினவினர்.  இது எனக்கு உற்சாக மிகுதியைக் கொடுத்தது.  அந்த முதல் நாவலை எழுதும் போது நான் அதன் வரவேற்பு எப்படியிருக்கும் என்று கொஞ்சம் தயங்கினேன். ஆனால் அத்தயக்கத்தை சில சிறந்த வாசக மாணவர்களின் ஆர்வமூட்டலால் கடந்து வந்துவிட்டேன்.

கேள்வி: பெரியவர்களுக்குச் சிறுகதைகள் நாவல்கள் எழுதி வந்த நீங்கள் ஏன் சிறுவர் இலக்கியப் பக்கம் உங்கள் கவனத்தைத் திருப்பியுள்ளீர்கள்?

பதில்: இன்றைக்கான சிறுவர் உலகம் பெற்றோரால், ஆசிரியர்களால் கண்டுகொள்ளப் படாமல் இருப்பது மனதுக்குள் கவலையை உண்டு பண்ணியது. அவர்களின் உலகம் தனி உலகம். கதைகளால்  கற்பனைகளால் நிறைந்தது. அவற்றையெல்லாம் கிஞ்சிற்றும் பொருட்படுத்தாத  நிலை வலிமையாக வளர்ந்துவிட்டிருக்கிறது. எந்நேரமும் சோதனைக்காகப் படிக்கவேண்டும் என்ற கட்டாயத்தை அவர்கள் மீது  வலிந்து சுமத்துவதைக் காண்கிறோம்.  பள்ளிக் கல்வி நேரம் முடிந்த கையோடு டியூசன் வகுப்புகள். அதனை அடுத்து கராத்தே, பிறகு ஸ்குவாஷ் பயிற்சி , தொடர்ந்து வீட்டில் பாடம் போதித்தல் என பெற்றோர் விருப்பத்திற்பப் பிள்ளைகளை  வலியுறுத்தும் மனப்போக்கு பெருவாரியாக வளர்ந்துவிட்டிருக்கிறது. மாணவ உலகத்தை அவர்களிடமிருந்து வன்மமாகப் பிடுங்குவதற்குச் சமமாகும் இது.  நான் ஒரு கல்வியாளன் என்ற முறையில் இந்தப் போக்கு சகிக்க முடியாத , கண்டிக்கத் தக்க ஒன்றாகக் கருதுகிறேன். என் மனதளவில் இதனைக் கடந்து வர நான் திகில் கதை கொண்ட நாவல்கள் எழுதி வருகிறேன். மாணவர்கள் என் முதல் நாவலை ஆவலோடு வாங்கி வாசித்ததை அவதானித்தபோது அவர்களுக்குள்ள மன அழுத்தத்தை சிறிதளவேனும் நீக்கிய மகிழ்ச்சியை அடைந்தேன். அதனால்  இந்த இரண்டாவது நாவலை எழுதிப் பதிப்பித்தேன்.

கேள்வி: பெற்றோர்கள் தன் பிள்ளைகள் வளர்ச்சிக்காகவும், சிறந்த வருங்காலத்துக்காவும் தானே கல்வி மீது அக்கறை காட்டுகிறார்கள், இதில் என்ன தப்பு இருக்கிறது?

பதில்: அதில் தவறில்லை. நல்ல பெற்றோர்களின் கடமை அது. ஆனால் பிள்ளைகள் அவற்றையெல்லாம் விரும்பிச் செய்கிறார்களா? என்று ஒரு கணம் சிந்திக்க மறுத்துவிடுகிறார்கள்.  தங்கள் சொந்த எதிர்காலத்தை உருவாக்கும் முயற்சியில் தோல்வி கண்ட பெற்றோர்களே, அந்த ஆசைகளை தங்களின் குழந்தை மீது திணிப்பந்தாகத்தான் கருத வேண்டியிருக்கிறது. ‘நீ டாக்டராக வேண்டும்’, ‘நீ வழக்கறிஞராக வேண்டும்’ என்ற அதிகாரத் திணிப்புகள் குழந்தைகளுக்குக் கல்வி ஊட்டும் முறையான வழியல்ல. ஒவ்வொரு குழந்தைக்கும் அவர்களுக்குள் சில பிரத்தியேக ஆற்றல்கள் புதைந்திருக்கும். அதனை வெளிக்கொணர முயற்சி செய்யாத பெற்றோர்களே இன்று அதிகம். அவர்களின் ஆற்றல்களை உற்றுணர்ந்து வளர்த்தெடுத்திருந்தால் எத்தனையோ மேதைகளை நாம் உருவாக்கியிருக்கலாம். அது அவர்களுக்கான பாதை ,பயணம், எதிர்காலம் என்பதை உற்று நோக்காத பெற்றோர்களால் சிறந்த டாக்டரையோ, வழக்கறிஞர்களையோ உருவாக்க முடியாது. சராசரி டாக்டராகவோ மருத்துவராகவோதான் இருப்பார்கள். பல்லாயிரத்தில் ஒருவராக இருக்க முடியும், அதாவது பத்தோடு பதினொன்றாக இருப்பார்கள்.  மேதைகளாக ஆக வழியில்லை. ஏனெனில் அது பிள்ளைகளின் தனித்துவ தேர்வாக இருந்ததில்லை என்ற காரணத்தால்.  நம் பிள்ளைகளைப் பொருள் சேர்க்கும் பிள்ளைகளாக வளர்த்து ஆளாக்கவே பெரும்பாடு படுகிறோம். பணம் பொருள் எல்லாவித பரவசத்தையும் கொடுத்துவிடுவதில்லை  என்பது பொதுவான உண்மை. அதைவிட மேலான வாழ்க்கையை வாழ பெற்றோர்கள் வழி வகுத்துத் தரவேண்டும்.

Punniyavan Featureகேள்வி : கதை வாசித்தல் இந்தச் சிக்கலை எப்படிப் போக்கும்? கதைக்கும் நீங்கள் சொல்வதற்கும் என்ன சம்பந்தம் ?

பதில்: நம் மொழி கதைகளால் நிறைந்தது. வாய்மொழிக்கதைகள், தொண்மக் கதைகள், சங்ககாலக் கதைகள், பக்திக் கதைகள், தற்காலத் தமிழ்க்கதைகள் என ஏராளமாகக் கொட்டிக் கிடக்கின்றன நம் மொழியில். இவை நமக்கு வாழ்க்கையை எதிர் கொண்டு  சந்திக்கக்கூடிய அறத்தை அடிப்படையாகக் கொண்டவை. சிறு வயதில் மறைமுகமாக மனதில் ஏறிய கதை கூறும் அறத்தால் அல்லது நன்னெறியால் ஒருவன் சிறந்த வாழ்வை வாழ முடியும். அவன் வாசித்த அல்லது கேட்ட கதைகள் மெல்ல மெல்ல அவன் ஆளுமையை உருவாக்குகிறது.  ராமர் நாடு துறக்கும் கதை  நல்லறத்தைப்  போதிக்கிறது.  காகம், தாகம் தீர்க்க செய்யும் முயற்சிகள் அதன் புத்தி கூர்மையை, விடா முயற்சியை போதித்து விடுதலை உணர்வைப் போதிக்கிறது. நம் வாய்மொழிக் கதைகளில் நரித் தந்திரம் நேர்மையாக பிழைக்க வேண்டிய நெறியைக் புகட்டுகிறது. இவ்வாறு நன்னெறிகள் ஒரு சிறுவனை ஆளாக்கி பெரியவனானது நல்லவனாக, வாழ்வின் இன்பத்தைச் சுவைப்பவனாக  ஆளாக்குகிறது.  தான் சம்பாதிக்கும் பெரும் பொருள் அவனுக்கு  நிரந்தரமான மகிழ்ச்சியைக் கொடுத்துவிடுவதில்லை. அவன் கற்ற அறமே அவனுக்கு மகிழ்ச்சியான வாழ்வைக் கையளிக்கும்.  மகிழ்ச்சியாக வாழ்வதே சாதனைதான்! கதைகள் வழி வரும் நன்னெறியை அறியாத பெற்றோர்கள் இந்த அவசர வாழ்வில் தன் பிள்ளைகளுக்கு ஓரிரு வார்த்தை புத்திமதி சொல்லித் திருத்தப் பார்க்கிறார்கள். “இதைச் செய்யாதே! அப்படி நடக்காதே !”என்றெறெல்லாம் கட்டளை இடுவதால் பெரிதாய் ஒன்றும் நடந்துவிடப் போவதில்லை.  பெற்றோர் மட்டும் இதனை செய்வதில்லை. ஆசிரியர், மாமா, அத்தை, தாத்தா , பாட்டி, அண்ணன் என திரும்பத் திரும்ப பிள்ளைகளுக்கு சலிக்கும் அளவுக்கு சொல்லி , புத்திமதியைப் பாகற்காய் அளவுக்குக் கசக்க வைத்துவிடுகிறாம். அதற்குப் பதிலாக கதை சொல்வதன் மூலமாகவும் வாசிக்கும் பழக்கம் ஏற்படுத்துவதன் மூலமாகவும் வாழைப் பழத்தில் மருந்திட்டு கொடுக்கும் நிலை உருவாகும். நான் அதற்கொரு உதாரணம் சொல்கிறேன், நான் ஆசிரியர் பயிற்சி காலத்தில் படித்த சமயம்,  போதைப்பொருளுக்கு அடிமையாகி , பின்னர் புனர்வாழ்வு பெற்று திருந்திய ஒருவரை போதைப் பொருள் உட்கொண்டு சிரழிந்த தன் உண்மைச் சுய சரிதையை எங்களிடம் சொல்ல அழைத்து வந்திருந்தனர். அவர் போதைப்பொருளுக்கு ஈர்த்த தொடக்க காலத்தைத் தொட்டு பின்னர் அதற்கு முற்றிலும் அடிமையானது, அதைத் தொடர்ந்து போதைப்பொருளை வாங்க சொந்தப் பெற்றோரிடம் பணம் களவாடியது, பின்னர் பிற இடத்தில் புகுந்து திருடியது , பல முறை போலிசில் சிக்கியது,  கடைசியாக புனர்வாழ்வு மையத்தில் தன்னை மீண்டும் சீரமைத்துக் கொண்டது என சொல்லிக் கொண்டே போனார். இடையிடையே போதைப் பொருளால் தான் கடந்து வந்த இம்சைகளையும் தொட்டுப் பேசினார். ஆனால் எங்கேயும் போதைப்பொருளால் கடுமையான பாதிப்பு உண்டாகும், அதில் ஈடுபடாதீர்கள் என புத்திமதி சொல்லவே இல்லை. அவரின் கதை உள்ளத்தைத் தைத்தது. அது நெடு நாட்களுக்கு என் மனதில் பதிவாகிவிட்டிருந்தது. கதைகள் இவ்வாறுதான் மறைமுகமாக நமக்கு அறத்தைப் போதிக்கின்றன. நேரடி குறுக்குவழி அறிவுரைகள் பலனைத் தந்துவிடாது.

கேள்வி: இப்போதுள்ள பெற்றோர்கள் கதைகள் சொல்லும் திறன் பெற்றவர்களாக இருக்கிறார்களா என்ன?

பதில்: இல்லை! ஆனால் நம் காலத்தில் கதை சொல்லி வந்த தாத்தாக்கள்,பாட்டிகள். பெற்றோர்கள் சமூகம் இப்போது இல்லாமல் ஆகிவிட்டது.  இந்தத் தலைமுறையினர் சீரியல் பார்க்கும் கலாச்சாரத்துக்கு அடிமையாகிவிட்டார்கள். தாத்தா பாட்டி, அம்மா அப்பா கதை சொல்லும் காலத்தில் நம் குழந்தைகளின் குற்றச் செயல்கள் இன்றைக்கு இருக்கும்  வருத்தம் தரும் அளவுக்கா இருந்தது? கண்டிப்பாய் இல்லை அல்லவா? எனவே குறைந்தபட்சம் கதைகள் வாசிக்கும் பழக்கத்தையாவது தன் பிள்ளைகளுக்குப் பழக்க  பெற்றோர்கள் முயல வேண்டும். பள்ளிகளில் கூட கதைக்கு முறையான நேரம் ஒதுக்குவதில்லை! பள்ளிப் பாடம் கூட எப்படி நடக்கிறது. மனனம் செய்து ஒப்புவித்து மார்க் வாங்கினால் போதும் என்ற அவல நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டது. இந்த வகைக் கல்வி சிறந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களை உருவாக்கலாம். ஆனால் மேதைகளை,  நல்ல மனிதர்களை உருவாக்க  எந்த விதத்திலும் கைகொடுக்காது. இன்னொன்று சிறு வயதிலிருந்தே கதை நூல்கள் வசிக்கும் பழக்கம் இல்லாத மாணவர்கள் பெரும்பாலானோர் சினிமாப் பக்கமும், மின் ஊடகப் பக்கமும் போய்ச் சீரழிவதைப் பார்க்கிறோம். வாசிக்கும் வழக்கம்  தப்பான வழிக்கு செல்வதைத்  தடுத்திருக்கும் என்பது உறுதி.

கேள்வி:வாசிக்கும்  பழக்கக்கதை எப்படி உருவாக்குவது?

பதில்: மேல் நாடுகளில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்குத்  தூங்குவதற்கு முன்பான வேளையில்  கதை சொல்வார்கள். பின்னர் படங்கள் நிரம்பிய புத்தகங்களை அறிமுகம் செய்வார்கள். அதனை அடுத்து சுயமாக வாசித்து இன்புறும் குழந்தைகளைப் பார்க்கலாம். பள்ளியில் இது தொடரும். பின்லாந்து, ஜப்பான் போன்ற நாடுகளில் ஆண்டு மூன்று வரை ஏட்டுக் கல்வி சோதனை எதுவும் இருக்காதாம். இந்த மூன்று ஆண்டுகளில் கதைகள் சொல்லுதல், கலைப்பாடம் நடத்துதல், நன்னெறி புகட்டுதல் நடக்கிறதாம். உலகத்திலிலேயே சிறந்த கல்வி முறையைக் கொண்ட நாடு பின்லாந்து என்று யுனெஸ்கோவின் (ஐக்கிய நாட்டுச் சபையின் கல்விப்பிரிவு )சொல்கிறது.  ஆனால் ஆசிய நாடுகள் பல,  தங்கள் அரசியல் பலத்தை தற்காத்துக்கொள்ள சோதனை முடிவுகளைக் காட்டி பெற்றோர்களின் காதில் பூசுற்றுகிறது. மேலை நாடுகளில் எல்லா வயதினரும் வாசிக்கும் பழக்கத்தை மேற்கொள்வதைப் பார்க்கலாம்.  வாசிக்கும் தருணம் அறிவின் கதவுகள் திறக்கும்  பரவச கணம் என்பதை காலந்தோறும் அனுபவிக்கும் மக்கள் அவர்கள். ஆர்.கே ரவ்லிங்கின் ஹேரி போட்டர் நாவல் உலகம் முழுதும் உள்ள சிறுவர்களால் வாசிக்கப் படுகிறது. ஆங்கில மொழி தெரியாதவர்களுக்கு  மொழிமாற்றம் செய்யப்பட்டு வாசிப்புக்குத் தருகிறார்கள். சீறார் மனநிலைக்கு ஏற்றார் போல, மாயஜாலமும், கற்பனை வளமும் கொண்ட புதிய கதை வடிவில் தருகிறார் ரவ்லிங். சிறார்களின் நாடியைப் பிடித்து எழுதப்பட்ட கதைநூல்கள் அவை. அவர்களின் கற்பனை வளத்தைப் பெருக்க இந்நூல்கள் பெரிதும் உதவுகின்றன. இந்தக் கற்பனை திறன்தான்  அவர்களின் பள்ளிக் கல்வி மேம்பாட்டுக்குப் பெரிதும் உதவுகின்றது.  கிட்டதட்ட 800 லிருந்து 1000 பக்கங்கள் கொண்ட  ஹேரி போட்டர் நாவல்களை சலைக்காமல் வாசிக்கும் லட்சக்கனக்கான சிறுவர்கள் உலகம் முழுதும் இருக்கிறார்கள். இவர்கள்தான் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கி எதிர்காலத் தலைவவர்களாகவும் மேதைகளாகவும் ஆகிறார்கள். வாசிப்பைத் தீவிரமாக மேற்கொண்ட  இச்சிறுவர்கள்தான் பின்னாளில் அறிவியல் கண்டுபிடிப்புகளைக் கொடுத்து நவீன உலகை படைக்கிறார்கள். நாம் இன்று அனுபவிக்கும் நவீனக் கருவிகள் பெரும்பாலனவை மேல் நாட்டவர் சாதனைகளே.

கேள்வி: சரி உங்கள் புதிய நாவலான ‘பேயோட்டி’ பற்றிச் சொல்லுங்கள்.

பதில்: வனதேவதை போலவே இந்நாவலும் திகில் கதையம்சம் கொண்டதுதான். பேய் அச்சம் கொண்டு நடுங்கும் ஒரு மாணவியின் பயத்தை அவளின் பள்ளிதோழன் தன் கண்டுபிடிப்பால் அந்த அச்சத்தை நிரந்தரமாகப் போக்குவதே கதைக் கரு. இதற்காக அவள் அச்சம் கொள்ளும் தருணங்களும், அப்படி நடப்பதற்குச் சாத்தியமில்லை என்ற நிரூபனத்தையும் ஆராய்ந்து காட்டி அம்மாணவன் அவளைத் தெளிவுறச் செய்கிறான். அதற்காக அவன் எதிர்கொள்ளும் சாகசங்கள் கதையைச் சுவாரஸ்யமாக்குகிறது. இது 108 பக்கங்கள் கொண்ட நாவல். பல பக்கங்களில் வண்ண ஓவியங்கள் அலங்கரிக்கின்றன. இவ்வோவியங்கள் மாணவர்கள் ஆர்வம் குறையாமல் வாசிக்க உதவும். ஒரு நூலின் விலை 10 ரிங்கிட். தாங்கள் படித்த பள்ளிகளுக்கு நன்கொடை செய்யும் அன்பர்களைப் பெரிதும் வரவேற்கிறேன்.

10 நூல்கள் அடங்கிய ஒரு கட்டு என்பது 80 ரிங்கிட் ஆகும். என்னோடு தொடர்பு கொண்டால் நான் அவற்றை தபால் முலம் உங்களுக்கு அனுப்பி வைப்பேன். என் தொடர்பு எண் 0195584905. இல்ல முகவரி, 3203 Lorong 9, Taman Ria, 08000 Sungai Petani Kedah.

-செல்லியல் ஆசிரியர் குழு