ரியாத் – சவுதி அரேபியாவில் புதிதாக அமைக்கப்பட்ட ஊழல் தடுப்புக் குழு, அதிரடியாக அந்நாட்டின் 17 இளவரசர்களையும், மற்றும் முன்னாள் அமைச்சர்கள், நடப்பு அமைச்சர்கள், அதிகாரிகள் என ஒரு கூட்டத்தையே கைது செய்து நாட்டை உலுக்கியுள்ளது.
கைது செய்யப்பட்ட முன்னாள், இந்நாள் அமைச்சர்கள் மற்றும் துணையமைச்சர்களின் எண்ணிக்கை 38 ஆக இருக்கும் என கணிக்கப்படுகிறது.
இந்த நடவடிக்கையின் பின்னணியில் பட்டத்து இளவரசர் முகமட் பின் சல்மான் செயல்படுகிறார் என்றும் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. நாட்டை ஆளும் மன்னர் சல்மான் பின் அப்துல் அசிஸ் அல்-சவுட் தொடக்கி வைத்த ஊழலுக்கு எதிரானப் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக இந்தக் கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.
மேலும் 3 அமைச்சர்கள் தங்களின் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருக்கிறார்கள்.
பட்டத்து இளவரசரான 32 வயதே ஆன, முகமட் பின் சல்மான் நாட்டில் பல்வேறு சீர்திருத்தங்களைக் கொண்டு வரவும், நாட்டை மிதவாத அரசியல் பாதையில் கொண்டு செல்லவும் பாடுபட்டு வருகின்றார்.
அவர் பொறுப்புக்கு வந்த பின்னர்தான் பெண்களுக்கு கார் ஓட்டும் உரிமை சவுதி அரேபியாவில் வழங்கப்பட்டது. இதற்கு முன்னர் பெண்கள் கார் ஓட்டுவதற்கு அந்நாட்டில் தடை விதிக்கப்பட்டிருந்தது.
புதிய ஊழல் ஒழிப்புக் குழுவிற்கும் பட்டத்து இளவரசர் முகமட் பின் சல்மான் பொறுப்பேற்றுள்ளார். அவரது உத்தரவின் அடிப்படையில்தான் இந்த கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. புதிய ஊழல் ஒழிப்புக் குழு, ஊழலில் ஈடுபட்டிருப்பதாக நம்பப்படுபவர்களைக் கைது செய்யவும், தடுப்புக் காவலில் வைக்கவும், சொத்துக்களை முடக்கவும், அவர்கள் வெளிநாடுகளுக்குச் செல்வதற்குத் தடை விதிக்கவும் அதிகாரம் கொண்டிருக்கிறது.