கோலாலம்பூர் – சங்கங்களின் பதிவிலாகா உத்தரவின் படி, நேற்று ஞாயிற்றுக்கிழமை ஜசெக மத்தியச் செயலவைக்கான மறுதேர்தல் நடைபெற்றது.
இத்தேர்தலில், 1,199 வாக்குகள் பெற்று ஜசெக மூத்தத் தலைவர் லிம் கிட் சியாங் முதலிடத்தையும், 1, 198 வாக்குகள் பெற்று, 1 வாக்கு வித்தியாசத்தில் கர்பால் சிங்கின் மகனான பூச்சோங் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரான கோபிந்த் சிங் இரண்டாவது இடத்தையும், 1,180 வாக்குகள் பெற்று பினாங்கு முதல் லிம் குவான் எங் மூன்றாவது இடத்தையும் பெற்றனர்.
அதேவேளையில், காலஞ்சென்ற கர்பால் சிங்கின் பெயரும் இந்தத் தேர்தலில் இடம்பெற்றிருந்தது. அவர் 43 வாக்குகள் பெற்று 54-வது இடத்தை பெற்றார்.
மேலும், ஈப்போ பாராட் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் எம்.குலசேகரன் 826 வாக்குகள் பெற்று 14-வது இடத்திலும், முன்னாள் பேரா மாநில சட்டமன்ற சபாநாயகர் வி.சிவகுமார் 586 வாக்குகள் பெற்று 20-வது இடத்திலும் தேர்வாகினர்.
2012-ம் ஆண்டு ஜசெக தேர்தலில், மத்தியச் செயலவையில் குளறுபடிகள் ஏற்பட்டதாக எழுந்த புகார்களையடுத்து, 2013-ம் ஆண்டு மத்தியச் செயலவைக்கு மறுதேர்தல் நடத்தப்பட்டது. ஆனால் அதிலும் உறுப்பினர்கள் சிலர் பல புகார்களைக் கூறவே, சங்கங்களின் பதிவிலாகா உத்தரவின் படி, நேற்று மீண்டும் மறுதேர்தல் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.