ஹராரே – ஜிம்பாப்வே நாட்டில் இராணுவப் புரட்சி ஏற்பட்டிருப்பதைத் தொடர்ந்து, 93 வயதான அந்நாட்டு அதிபர் ராபர்ட் முகாபே தற்போது வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டிருக்கிறார் என தென்னாப்பிரிக்காவின் அதிபர் ஜேக்கப் சுமா அறிவித்திருக்கிறார். முகாபே முழுமையான உடல் நலத்துடன் இருக்கிறார் என்றும் சுமா தெரிவித்திருக்கிறார்.
இதற்கிடையில், உள்நாட்டுப் பிரச்சனையால் நாட்டை விட்டு வெளியேறி வெளிநாட்டில் இருந்த எதிர்க்கட்சித் தலைவர் மோர்கன் ட்ஸ்வங்கிரை (Morgan Tsvangirai) தற்போது நாடு திரும்பியிருக்கிறார். இவர் ஜிம்பாப்வேயின் புதிய அரசாங்கத்தை அமைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
நேற்று புதன்கிழமை இராணுவம் நாட்டின் அரசாங்கத்தைக் கைப்பற்றியதிலிருந்து, இதுவரையில் முகாபே தரப்பிலிருந்து எந்தவித அறிக்கையும் விடுக்கப்படவில்லை.
அவரது 52 வயதான மனைவி கிரேஸ் முகாபேயின் நிலைமை என்னவாயிற்று என்ற விவரமும் இதுவரை தெரியவில்லை. தனது மனைவியை முன்னிறுத்தி, அவரை ஆட்சியில் அமர்த்தும் முயற்சியில் முகாபே ஈடுபட்ட காரணத்தால், கட்சியின் மூத்த தலைவர்களுக்கு அதிருப்தி ஏற்பட்டதாகவும், அதுவே இராணுவப் புரட்சிக்கு வழிவகுத்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நீண்ட காலமாக, தனது இரும்புப் பிடியின் கீழ் ஜிம்பாப்வே நாட்டை ஆண்டு வந்த முகாபேயின் அதிகாரம் ஒரு வழியாக முடிவுக்கு வந்துள்ளது.
அவர் மூன்றாம் நாடு ஒன்றில் அரசியல் அடைக்கலம் கோரி தஞ்சம் புகுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.