கோலாலம்பூர் – பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியோடு இணைந்து செயல்பட ஹிண்ட்ராப்புக்கு அக்கூட்டணியைச் சேர்ந்த மூன்று கட்சிகள் சம்மதம் தெரிவித்திருப்பதாக ஹிண்ட்ராஃப் தலைவர் பொன்.வேதமூர்த்தி தெரிவித்திருக்கிறார்.
என்றாலும், தேர்தலில் போட்டியிட ஹிண்ட்ராஃபுக்கு இருக்கும் ஒரே பிரச்சினை, அது இன்னும் சங்கங்களின் பதிவிலாகாவில் (ஆர்ஓஎஸ்) அதிகாரப்பூர்வமாக அரசியல் கட்சியாகப் பதிவு செய்யவில்லை என்றும் வேதமூர்த்தி குறிப்பிட்டிருக்கிறார்.
இதற்காகக் கடந்த வாரம், சங்கங்களின் பதிவிலாகா அதிகாரிகளைத் தான் சந்திக்க முயற்சி செய்ததாகவும், ஆனால் அது முடியாமல் போய்விட்டது என்றும் வேதமூர்த்தி தெரிவித்தார்.
“இதற்கு முன்னர், எங்களது கட்சிப் பதிவு குறித்து பல முறை அவர்களுக்குக் கடிதம் எழுதியிருக்கிறோம். ஆனால் அவர்களிடமிருந்து எந்த பதிலும் இல்லை. எங்களை அவர்கள் தவிர்க்கிறார்கள் என்பது இதிலிருந்து அப்பட்டமாகத் தெரிகின்றது” என வேதமூர்த்தி கூறியதாக எப்எம்டி தெரிவிக்கின்றது.
மேலும், ஹிண்ட்ராப்பை அரசியல் கட்சியாக ஆர்ஓஎஸ் அனுமதியளித்தால், பக்காத்தான் ஹராப்பானுடன் கூட்டணி அமைத்து இந்தியர்களின் பிரதிநிதியாக தேர்தலில் செயல்பட்டு, அடித்தட்டு இந்திய மக்களின் 65 விழுக்காடு வாக்குகளை ஹிண்ட்ராப்பால் பெற்றுத்தர முடியும் என்றும் வேதமூர்த்தி உறுதியாகத் தெரிவித்திருக்கிறார்.