அப்போது நண்பர் ஒருவர் சிங்கப்பூரில் ஒரு தயாரிப்பாளரைக் குறிப்பிட்டு அவரைப் போய் சந்திக்கச் சொல்லி அனுப்பி வைக்கிறார். சிங்கப்பூர் வரும் ஹரிஸ் தனது பாஸ்போர்ட்டைத் தொலைத்துவிடுகிறார்.
இவ்வளவு பிரச்சினைகளுக்கு நடுவில் ஹரீஸ் தயாரிப்பாளரைச் சந்தித்தாரா? திரைப்படம் எடுத்தாரா? என்பதே பிற்பாதி சுவாரசியக் கதை.
இயக்குநர் அப்பாஸ் அக்பர் இயக்கத்தில், கோகுல் ஆனந்த், ராஜேஸ் பாலகிருஷ்ணன், அஞ்சு குரியன், ஷிவ் கேஷவ், எம்சி ஜேஸ் ஆகியோர் நடித்திருக்கும் இத்திரைப்படம் நேற்று சிங்கப்பூர், மலேசியாவில் வெளியீடு கண்டிருக்கிறது. தமிழ்நாட்டில் அடுத்த வாரம் தான் வெளியாகிறது.
கதாநாயகன் சினிமா இயக்குநராகும் ஆசையுடன் கூடிய கதைகள் தமிழில் ஏற்கனவே பல வந்திருந்தாலும் கூட, ‘சென்னை 2 சிங்கப்பூர்’ கதையை இயக்குநர் அப்பாஸ் அக்பர் சொல்லியிருக்கும் விதமும், காட்சியமைப்புகளும் புத்தம் புதிதாய் இளமை ததும்ப ரசிகர்களைச் சோர்வடையாமல் நகர்த்திச் செல்கிறது. கதைக்குள் கதை சொல்லும் பாணியை தனது திரைக்கதையின் வழிச் சிறப்பாகக் கையாண்டிருக்கிறார் அப்பாஸ் அக்பர்.
அடுத்ததாக, நண்பராக வரும் ராஜேஸ் பாலகிருஷ்ணன், மிக அருமையான நடிப்பு. படம் முழுவதும் விழுந்து விழுந்து சிரிக்க வைக்கிறார்.
“அடப்பாவி.. சிங்கப்பூர்லே பாஸ்போர்ட்ட தொலைக்கிறது, லேண்ட் ஆகுற பிளைட்டுக்கு ஏர்போர்ட்ட தொலைக்குற மாதிரி டா” என பல நச்சென்ற வசனங்களை ராஜேஸ் தனது பாணியில் சொல்லி ரசிகர்களைக் கலகலப்பூட்டுகிறார்.
கதாநாயகி அஞ்சு குரியனுக்கு அதிகமான வசனங்கள் இல்லையென்றாலும் கூட, தனது முகபாவணைகளால் கவர்கிறார். ரோஷினி கதாப்பாத்திரத்திற்கு சரியாகப் பொருந்துகிறார்.
அடுத்து காமெடி வில்லன்களாக வரும் ஷிவ் கேஷவ், எம்சி ஜேஸ் ஆகியோர் தங்களது பங்கிற்கு ரசிகர்களைச் சிரிக்க வைக்கிறார்கள். அதிலும் அந்தக் கிளைமாக்ஸ் காட்சி காமெடியின் உச்சம்.
கார்த்திக் நல்லமுத்துவின் ஒளிப்பதிவு, படத்தை மற்றொரு உயரத்திற்குக் கொண்டு சென்றிருக்கிறது. சிங்கப்பூரின் உயரமான கட்டிடங்கள் முதல் நள்ளிரவு சாலைகள் வரை அத்தனையும் அழகு.
‘நெஞ்சுக்குள்ளாற கொஞ்சிப் பேச வர்றியா?”, “ரோ ரோ ரோஷினி”, “போகாதே” எனப் பாடல்கள் அனைத்தும் கேட்டவுடன் மனசில் பட்டென ஒட்டிக் கொள்ளும் இரகம்.
மொத்தத்தில், ‘சென்னை 2 சிங்கப்பூர்’ – விறுவிறுப்பான, கலகலப்பான காதல் பயணம், நிச்சயமாக திரையரங்கில் பார்த்து ரசித்து வாய்விட்டுச் சிரித்துவிட்டு வரலாம்.
-ஃபீனிக்ஸ்தாசன்