Home நாடு மீண்டும் ஒரு தடுப்புக்காவல் மரணம்: 29 வயது ஜி.கணேஸ்வரனுக்கு நடந்தது என்ன?

மீண்டும் ஒரு தடுப்புக்காவல் மரணம்: 29 வயது ஜி.கணேஸ்வரனுக்கு நடந்தது என்ன?

821
0
SHARE
Ad

malaysian police-logoகிள்ளான் – புக்கிட் திங்கியில் நடந்த திருட்டுச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த 29 வயதான ஜி.கணேஸ்வரன்,நேற்று திங்கட்கிழமை மர்மமான முறையில் மரணமடைந்தார்.

ஷா ஆலமில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த கணேஸ்வரன், சிஐடி அலுவலகத்திற்குக் கொண்டு செல்லும் வழியில் காலை 11.15 மணியளவில் தனக்கு நெஞ்சு வலிப்பதாகக் கூறியிருக்கிறார்.

பின்னர், அவசர ஊர்தி கொண்டு வரப்பட்டு மதியம் 12.15 மணியளவில், தெங்கு அம்புவான் ரஹிமா மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டிருக்கிறார்.

#TamilSchoolmychoice

ஆனால் போகும் வழியிலேயே சுமார்12.40 மணியளவில் கணேஸ்வரன் மரணமடைந்துவிட்டதாகக் காவல்துறை தெரிவித்திருக்கிறது.

மாலை 6.45 மணியளவில் நடந்த முதற்கட்ட விசாரணையில் கணேஸ்வரன் மரணத்தில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை என்றும், அவரது உடலில் காயங்கள் எதுவும் இல்லை என்றும் கிள்ளான் சிலாத்தான் காவல்துறைத் தலைமை துணை ஆணையர் சம்சுல் அமர் ரம்லி தெரிவித்திருக்கிறார்.

திருட்டுக் குற்றம் ஒன்றிற்காக சந்தேகத்தின் பேரில் கடந்த வியாழக்கிழமை கைது செய்யப்பட்ட கணேஸ்வரன், வெள்ளிக்கிழமை நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டிருக்கிறார்.

அப்போது தன்னைப் பார்க்க வந்த குடும்பத்தினரிடம் காவல்துறைத் தன்னைக் கடுமையாகத் தாக்கியதாகக் கூறியிருக்கிறார்.

காவல்துறையினர் தனது கழுத்தில் மிதித்ததால், தன்னால் சாப்பிட முடியவில்லை என்றும் கணேஸ்வரன் குறிப்பிட்டிருக்கிறார்.

இந்நிலையில், கணேஸ்வரனின் திடீர் மரணம் அவரது குடும்பத்தினருக்கு கடும் அதிர்ச்சியையும், சந்தேகத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.

இதனிடையே, தனது சகோதரனின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி கணேஸ்வரனின் சகோதரி, வழக்கறிஞர் சிவமலர் கணபதி மூலம் மலேசிய மனித உரிமை ஆணையத்திடம் புகார் அளித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.