புதுடில்லி – 2-ஜி வழக்கில் இன்று வியாழக்கிழமை வெளியிடப்பட்ட தீர்ப்பில் குற்றவாளிகள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டாலும், அந்தத் தீர்ப்பை எதிர்த்து உயர் நீதிமன்றத்திற்கு சிபிஐ மேல் முறையீடு செய்யும் என சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தின் கண்காணிப்பின் கீழ் நியமிக்கப்பட்ட சிறப்பு நீதிமன்றத்தால் விசாரிக்கப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட்டதால், இதற்கு அடுத்த கட்ட மேல்முறையீடு உயர் நீதிமன்றத்தில் செய்யப்பட வேண்டும். எனவே, வழக்கு தொடுத்து நடத்திய சிபிஐ உயர் நீதிமன்றத்திற்கு மேல்முறையீடு செய்யப் போவதாக அறிவித்திருக்கிறது.
உயர் நீதிமன்றத் தீர்ப்புக்குப் பின்னரும் சம்பந்தப்பட்ட தரப்பினர் அதிருப்தி கொண்டால் இறுதிக் கட்ட மேல்முறையீடாக புதுடில்லியிலுள்ள உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய முடியும்.
எனினும் உயர்நீதிமன்றத்திற்கான மேல்முறையீடு குறித்து இதுவரையில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை.
அவ்வாறு மேல்முறையீடு செய்யப்பட்டால் கடந்த 6 ஆண்டுகளாக இந்திய அரசியல் மேடைகளை அலங்கரித்து வந்த 2-ஜி வழக்கு விவகாரம் இன்னும் தொடரும் கதையாக நீண்டு கொண்டே போகும்.