கோலாலம்பூர் – தைப்பூசத் திருவிழாவின் போது பக்தப் பெருமக்கள் இந்து சமய நெறிமுறைகளுக்கேற்ப பால் குடம் காவடி காணிக்கை செலுத்துவதற்கு வழிகாட்டும் வகையில் “தர்மவேல்” எனும் திட்டத்தை மலேசிய இந்துதர்ம மாமன்றம் நாட்டில் பிரதான இந்து சமய இயக்கங்கள் ஆலயங்கள் ஆதரவோடு கடந்த மூன்று ஆண்டுகளாக நடைமுறைப்படுத்தி வருகின்றது.
‘தர்மவேல்’ திட்டம் நாடளவில் விரிவாக்கம் பெறவும் இந்துகளிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த 2017 ஆண்டு நவம்பர் மாதம் தொடங்கி நாடு தழுவிய அளவில் “தைப்பூசமும் முறையான பால் குடக் காவடி காணிக்கை செலுத்தலும்“ எனும் தலைப்பில் சமயப் பேருரை நடைபெற்று வருகிறது.
இன்றளவில் இச்சமய பேருரை கெடா சுங்கை பட்டாணி ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி தேவஸ்தானம், பேரா ஈப்போ அருள்மிகு மஹா மாரியம்மன் ஆலயம், ஜொகூர் ஸ்கூடாய் அருள்மிகு ஸ்ரீ பாலசுப்பிரமணியர் ஆலயம், நெகிரி செம்பிலான் சிரம்பான் ஸ்ரீ பாலதண்டாயுதபாணி ஆலயம், சிலாங்கூர் கிள்ளான் ஸ்ரீ மஹா மாரியம்மன் ஆலயம், சிலாங்கூர் கோலாசிலாங்கூர் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி, குவாந்தான் கம்போங் திராம் ஸ்ரீ முருகன் ஆலயம், பினாங்கு வாட்டர் ஃப்ஹால் அருள்மிகு ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயம், சிலாங்கூர் பண்டார் சன்வே ஸ்ரீ சுப்ரமணியர் ஆலயம் ஆகிய இடங்களில் சிறப்பாக நடந்தேறியது குறிப்பிடத்தக்கது.
இச்சமய பேருரையில், மாமன்ற அறங்காவலரும் ஆலோசகரும் சனாதன தர்ம அறவாரியத்தின் தலைவருமாகிய தர்ம பூஷணம் சிவஸ்ரீ அ.ப.முத்துக்குமார சிவாச்சாரியார் தெளிவான விளக்கங்களை அளித்து வருகிறார்.
இப்பேருரைகளுக்கெல்லாம் முத்தாய்ப்புப் பேருரை ஒன்றை மிகவும் சிறப்பாக சனாதன தர்ம அறவாரியம் (ஸ்ரீ சக்தி தேவஸ்தானம், புக்கிட் ரோத்தான்) மற்றும் கோலாலம்பூர் பிரிக்பீல்ட்ஸ் ஸ்கோட் ரோட் ஸ்ரீ கந்தசுவாமி ஆலய ஆதரவோடு மலேசிய இந்துதர்ம மாமன்றம் ஏற்பாடு செய்திருக்கிறது.
தேசிய அளவிலான இந்த முத்தாய்ப்புப் பேருரையின் விவரங்கள் பின்வருமாறு:
இடம் : கலாமண்டபம், கோலாலம்பூர்
திகதி : 07 ஜனவரி 2018 (ஞாயிற்றுக்கிழமை)
நேரம் : இரவு மணி 7.30 முதல் 10.30 வரை
காவடி என்றால் என்ன? காவடி எடுத்து வழிபடுவது ஏன்? காவடி எடுப்பது ஏன் தொடங்கியது? அதற்குப்பின்னால் இருக்கும் மகத்துவமும், கருத்தும் என்ன? இதுபோன்ற பல கேள்விகள் உங்களுக்குள் உள்ளதா? நம் வேண்டுதலை நிறைவேற்றிய திருமுருகனுக்கு முறையாகக் காவடி காணிக்கை செலுத்துவது எப்படி? அதன் விளக்கங்களைக் கேட்டு, முறைப்படி நடந்து திருமுருகனின் பேரருளைப் பெற இப்பேருரையில் கலந்து கொள்ளலாம்.
இது குறித்த மேல் விவரங்களுக்கு தனபாலன் (012-2311049), ரிஷிகுமார் (012-2016115) ஆகியோரைத் தொடர்பு கொள்ளலாம்.