கோலாலம்பூர் – சர்ச்சைக்குரிய மத போதகர் ஜாகிர் நாயக்கிற்கு எதிராக ஹிண்ட்ராப் தொடுத்துள்ள வழக்கை நீதிமன்றம் நிராகரிக்க வேண்டும் என மலேசிய அரசாங்கம் எதிர்மனுவைத் தொடுத்துள்ளது.
ஹிண்ட்ராப் தலைவர் பி.வேதமூர்த்தி மற்றும் 16 சமூக இயக்கவாதிகளும் இணைந்து இந்த வழக்கைத் தொடுத்தனர். அவர்களின் சார்பாக வழக்கறிஞர்கள் ஆர்.கங்காதரன் மற்றும் கார்த்திகேசன் ஆகியோர் வாதாடினர்.
வழக்கு தொடுத்த வாதிகளில் சபா மாநிலத்தின் பிங்கோர் சட்டமன்ற உறுப்பினரும், ஜோசப் பைரின் கித்திங்கானின் சகோதரருமான ஜெப்ரி கித்திங்கான்னும் ஒருவராவார்.
அரசாங்கத்தின் சார்பில் வழக்காடிய அரசு தரப்பு வழக்கறிஞர்கள் இந்த வழக்கைத் தொடுக்க 17 பேருக்கும் தகுதி இல்லை என்றும், ஜாகிர் நாயக் பிரதிவாதிகளில் ஒருவராகப் பெயர் குறிப்பிடப்படாத காரணத்தால் வழக்கை நிராகரிக்க வேண்டும் என்றும் வாதிட்டனர்.
பிரதிவாதிகளாகப் பெயர் குறிப்பிடப்பட்டிருக்கும் உள்துறை அமைச்சர், குடிநுழைவுத் துறை, காவல் துறைத் தலைவர் (ஐஜிபி), மற்றும் தேசிய பதிவிலாகா ஆகியவை செய்த முடிவுகளினால் வழக்கு தொடுத்திருக்கும் 17 பேரும் எவ்வாறு பாதிக்கப்பட்டார்கள் என்பதை வாதிகள் தங்களின் வழக்கில் தெரிவிக்கத் தவறி விட்டார்கள் என்றும் அரசு தரப்பு வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
ஜாகிர் இந்தியாவில் தேடப்படும் குற்றவாளி என்பதால் அவர் மலேசியாவில் தொடர்ந்து இருப்பது நாட்டு பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகும் என்பதால்தான் தாங்கள் இந்த வழக்கைத் தொடுப்பதாக 17 பேரும் குறிப்பிட்டிருக்கின்றனர்.
இந்த வழக்கில் பெர்காசா அமைப்பு மூன்றாம் தரப்பாக சேர்த்துக் கொள்ளும்படி விண்ணப்பித்து மனு செய்திருக்கிறது.
நீதிபதி அசிசா நவாவி வழக்கை எதிர்வரும் பிப்ரவரி 13-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.