கோலாலம்பூர் – சர்ச்சைக்குரிய மதபோதகர் ஜாகிர் நாயக்கிற்கு எதிராக மலேசியாவில் ஹிண்ட்ராப் தலைவர் பொன்.வேதமூர்த்தி உள்ளிட்டவர்களால் தொடரப்பட்ட பொதுநல வழக்கு நாளை புதன்கிழமை விசாரணைக்கு வருகின்றது.
இது குறித்து வேதமூர்த்தி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் தகவலில் கூறியிருப்பதாவது:-
“தேசிய பாதுகாப்பிற்கும் மலேசிய மக்களிடையே நிலவும் நல்லிணக்கத்திற்கும் மிரட்டலாக இருக்கும் ஜாகிர் நாயக்கிற்கு அளிக்கப்பட்டிருக்கும் நிரந்தர வசிப்பிடத் தகுதியை இரத்து செய்யக் கோரியும் அவரை நாட்டைவிட்டு வெளியேற்றக் கோரியும் பொது நல ஆர்வலர்களால் தொடரப்பட்ட வழக்கு, ஜனவரி முதல் வாரத்தில் விசாரணக்கு வர இருக்கிறது.”
“இவ்வழக்கு நாளை ஜனவரி 3, 2018, புதன்கிழமை, கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில், பிற்பகல் 2 மணியளவில் நடைபெறவிருக்கிறது.”
“மலேசிய மக்கள் காலந்தோறும் போற்றி வரும் இன-சமய சகிப்புத்தன்மை, கூட்டுணர்வு, இறையாண்மை ஆகியவற்றில் அக்கறைக் கொண்டவர்கள், நிந்தனை சமயப் பிரச்சாரகர்களை புறந்தள்ளும் சிந்தனை கொண்டவர்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் இந்த வழக்கை செவிமடுக்க வரும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.அத்துடன், தேசியப் பாதுகாப்பு மற்றும் இறையாண்மை வலுப்பெறவும் துணைநிற்கும்படி அன்புடன் அழைக்கின்றோம்.” – இவ்வாறு வேதமூர்த்தி தெரிவித்திருக்கிறார்.