Home நாடு பொதுத் தேர்தலுக்கான தேசிய முன்னணி இணையத் தளம் தொடக்கம்

பொதுத் தேர்தலுக்கான தேசிய முன்னணி இணையத் தளம் தொடக்கம்

942
0
SHARE
Ad

BN-Logo-Featureகோலாலம்பூர் – எதிர்வரும் 14-வது பொதுத் தேர்தலுக்கு தயாராகும் விதமாக தேசிய முன்னணியின் சிறப்பு இணையத் தளத்தை நாளை புதன்கிழமை மாலை தலைநகர் புத்ரா உலக வாணிப மையத்தில் பிரதமரும் தேசிய முன்னணித் தலைவருமான டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் தொடக்கி வைக்கிறார்.

நாளை நடைபெறவிருக்கும் தேசிய முன்னணியின் மிக முக்கிய உச்சமன்றக் கூட்டத்திற்கு முன்பாக இந்த இணையத் தள தொடக்க விழா நடைபெறுகிறது. தேசிய முன்னணியின் உறுப்பியக் கட்சிகளின் தலைவர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் உச்சமன்றக் கூட்டத்தில் பங்கு கொள்வர் என எதிர்பார்க்கப்படுகிறது.

நாளை நடைபெறும் தேசிய முன்னணியின் உச்சமன்றக் கூட்டம் பொதுத் தேர்தலுக்கான முன்னேற்பாடுகளை விரிவாக ஆராயும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

#TamilSchoolmychoice

பொதுத் தேர்தலை மையப்படுத்திய இந்த இணையத் தளம் ‘தெ ராக்யாட்’ (TheRakyat) என்ற பெயரில் இயங்கும். தேசிய முன்னணி சார்பாகப் போட்டியிடப் போகும் வேட்பாளர்கள், தொகுதிகளின் நிலவரங்கள் உள்ளிட்ட பல விவரங்களை இந்த இணையத் தளம் கொண்டிருக்கும்.

பொதுத் தேர்தலுக்கு முன்பாக உறுதிப்படுத்தப்பட்ட வேட்பாளர்களின் பெயர்கள் இந்தத் தளத்தில் கட்டம் கட்டமாகப் பதிவேற்றப்படும். தேசிய முன்னணியின் தேர்தல் அறிக்கையும் இந்தத் தளத்தில் பதிவேற்றப்படும்.

தேசிய முன்னணியின் நடவடிக்கைகள், தலைவர்களின் அறிக்கைகள், நேர்காணல்கள், ஆகியவற்றையும் கொண்டிருக்கப் போகும் இந்தத் தளத்தில் மலாய் மொழி, ஆங்கிலம், சீனம், தமிழ், இபான், கடசான் டுசுன் ஆகிய மொழிகளில் கட்டுரைகளும், மொழிமாற்றக் கட்டுரைகளும் இடம் பெறும்.

நாளை புதன்கிழமை இரவு 8.00 மணி முதல் கீழ்க்காணும் இணைய முகவரியில் தேசிய முன்னணியின் பொதுத் தேர்தல் சிறப்பு இணையத் தளம் செயல்படத் தொடங்கும்:

http://therakyat.com