கோலாலம்பூர் – உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடி வழியாக சிங்கப்பூருக்குள் நுழையும் அனைத்து வாகனங்களுக்கான டோல் கட்டணம் வரும் பிப்ரவரி 1-ம் தேதி முதல் நீக்கப்படுவதாக சிங்கப்பூர் நிலப்போக்குவரத்து அதிகார மையம் நேற்று வெள்ளிக்கிழமை அறிவித்திருக்கிறது.
மேலும், உட்லண்ட்ஸ் வழியாக சிங்கப்பூரை விட்டு வெளியேறும் வாகனங்களில் மோட்டார் சைக்கிளைத் தவிர்த்து மற்றவைகளுக்கான டோல் கட்டணங்கள் குறைக்கப்படுவதாகவும் அந்த அறிக்கை கூறுகின்றது.
தற்போது நடைமுறையில் 3.80 (11.50 ரிங்கிட்) சிங்கப்பூர் டாலர் டோல் கட்டணம் 1 டாலராகக் (3 ரிங்கிட்) குறைக்கப்படுகின்றது.
வேன்கள் போன்ற இலகு இரக வாகனங்களுக்கான கட்டணம் 5.80 சிங்கப்பூர் டாலர், 1.50 சிங்கப்பூர் டாலராகவும், கனரக வாகனங்களுக்கான கட்டணமான 7.70 சிங்கப்பூர் டாலர் (23.20 ரிங்கிட்) தற்போது 2 டாலராக (6 ரிங்கிட்) ஆகக் குறைக்கப்படுவதாகவும் சிங்கப்பூர் நிலப்போக்குவரத்து அதிகார மையம் தமது அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறது.
மலேசியப் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக், அண்மையில் இடிஎல் (Eastern Dispersal Link) இணைப்பிற்கு டோல் கட்டணங்களை நீக்கியதையடுத்து, சிங்கப்பூர் இம்முடிவை எடுத்திருக்கிறது.