ஜோர்ஜ் டவுன் – பினாங்கு அரசாங்கம் முன்மொழிந்திருக்கும் கடலடி சுரங்கப் பாதைத் திட்டம் மற்றும் மாநிலத்திலுள்ள சாலைத் திட்டங்கள் மீது எழுந்துள்ள ஊழல் புகார்களைத் தொடர்ந்து மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் இதுவரையில் குறைந்தது 10 பேர்களிடம் வாக்குமூலங்கள் பெற்றுள்ளதாகத் தெரிகிறது.
பினாங்கு மாநிலத்தின் அரசாங்கப் பொறுப்பாளர்கள் மற்றும் இந்தத் திட்டங்களில் சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் அதிகாரிகள் ஆகியோரிடம் வாக்குமூலங்கள் பெறப்பட்டிருக்கின்றன.
மேலும் பினாங்கு மாநில அரசாங்கத்தின் தலைமையகம் அமைந்துள்ள கொம்தார் கட்டடத்தில் தேடுதல் வேட்டை நடத்தி ஊழல் தடுப்பு ஆணையம் சில கோப்புகளைக் கைப்பற்றியிருக்கிறது.
பினாங்கு முதல்வர் லிம் குவான் இதன் தொடர்பில் விசாரணைக்கு அழைக்கப்பட இன்னும் தேவை ஏற்படவில்லை என்றும் ஊழல் தடுப்பு ஆணையம் தெரிவித்திருக்கிறது.
இதற்கிடையில், “துணிச்சலானவர்கள் உண்மையிலேயே துணிச்சலோடு செயல்படுவார்கள். நாளை என்ன நடந்தாலும் பினாங்கு மாநிலத்தின் உணர்வைத் தற்காப்போம்” என்ற பொருளில் தனது முகநூலில் பதிவிட்டிருக்கும் லிம் குவான் இன்று வியாழக்கிழமை மாலையில் பினாங்கு மாநிலத்தின் லெபோ கேம்பல் வட்டாரத்தில் சாலையோரத்தில் நடந்து சென்று பொதுமக்களைச் சந்தித்தார்.
அங்கு சாலையோரக் கடை ஒன்றில் அமர்ந்து லிம் குவான் காப்பியும் அருந்தினார். அந்தப் புகைப்படங்களை தனது முகநூல் பக்கத்திலும் லிம் குவான் பதிவிட்டிருக்கிறார்.
படங்கள்: நன்றி – லிம் குவான் எங் முகநூல் பக்கம்