கோலாலம்பூர், மார்ச் 26- சிலாங்கூர் மாநில சட்டமன்றம் நாளை கலைக்கப்படக் கூடும் என்று சிலாங்கூர் மாநில அரசியல் வட்டாரங்களில் செய்திகள் கசியத் தொடங்கியுள்ளன.
புதன்கிழமை தோறும் கூடும் ஆட்சிக் குழுக் கூட்டம் நாளை நடைபெற்று முடிந்தவுடன் சட்டமன்றம் கலைக்கப்படுவதற்கான அறிவிப்பும் வெளியாகும் என நம்பப்படுகிறது.
நாளை சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டான்ஶ்ரீ காலிட் இப்ராஹிம் (படம்) சட்டமன்றம் கலைக்கப்படுவதற்கான அறிவிப்பைச் செய்வாரா என்ற பரபரப்பு தற்போது சிலாங்கூர் மாநில அரசியல் வட்டாரங்களில் பரவி வருகின்றது.
எதிர்வரும் ஏப்ரல் 21ஆம் தேதி சிலாங்கூர் மாநில சட்டமன்றத்தின் தவணைக் காலம் முடிவுறுகின்றது. ஏப்ரல் 22ஆம் தேதி சிலாங்கூர் சட்டமன்றம் இயல்பாகவே கலைந்து விடும்.
இதற்கிடையில் நாளை (மார்ச் 27) சிலாங்கூர் மாநில சட்டமன்றம் கலைக்கப்பட்டால் அதன் பிறகு 60 நாட்களுக்குள் சிலாங்கூர் மாநில தேர்தலை தேர்தல் ஆணையம் நடத்தியாக வேண்டும்.
அதன்படி பார்த்தால் மே மாதம் 27ஆம் தேதிக்குள் சிலாங்கூர் மாநில சட்டமன்றத் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும். தற்போதைய அரசியல் சூழ்நிலையில் சிலாங்கூர் மாநிலத் தேர்தல்களை தனியாக நடத்த தேசிய முன்னணி முன்வராது என்பதால், மே 27ஆம் தேதிக்குள் பொதுத் தேர்தலையும் நடத்துவதற்கு ஏதுவாக நாடாளுமன்றத்தை தேசிய முன்னணி அரசாங்கம் கலைக்கக்கூடும்.
இதனால் மே 27ஆம் தேதிக்குள் பொதுத் தேர்தலை தேசிய முன்னணி பொதுத்தேர்தலை அறிவிக்க நெருக்குதல் வழங்கும் வகையில் சிலாங்கூர் சட்டமன்றம் நாளை கலைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மேலும் மார்ச் 27ஆம் தேதியோடு நெகிரி செம்பிலான் சட்டமன்றமும் இயல்பாகவே காலாவதியாகி விடும் என்பதும் குறிப்பிடத்தக்கது.