கோலாலம்பூர் – எப்போதுமே இரகசியமாகவும் மர்மமாகவும் இருந்து வந்துள்ள சவுதி அரேபியாவின் அரச குடும்பத்தின் தகவல்கள் தற்போது அனைத்துலக ஊடகங்களால் பகிரங்கமாக விவாதிக்கப்படுகின்றன.
புதிய பட்டத்து இளவரசர் சல்மான் எடுத்து வரும் அதிரடி நடவடிக்கைகளால் பல அரச குடும்பத்து வாரிசுகள் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு, ஊழல் காரணமாக அவர்களின் சொத்துகளும் பறிமுதல் செய்யப்படுகின்றன.
இந்நிலையில், சவுதி அரச குடும்பத்தில் நடந்து வரும் உட்பூசல்கள், போராட்டங்கள் குறித்த ஆவணப் படத்தொடர் ஒன்றை பிரிட்டிஷ் ஊடகமான பிபிசி தற்போது ஒளிபரப்பி வருகிறது.
இந்த ஆவணப் படத்தில் மலேசியாவின் 1எம்டிபி ஊழல் விவகாரங்களும், அதில் பிரதமர் நஜிப் தலைமைத்துவத்தின் பங்கு குறித்த தகவல்களும் இடம் பெற்றுள்ளன.
1எம்டிபி விவகாரம் வெளிச்சத்துக்கு வந்த பின்னர் அமெரிக்கா, 1எம்டிபி சொத்துகளை மீட்க எடுத்து வரும் நீதிமன்ற நடவடிக்கை குறித்தும், இந்த ஆவணப் படம் விளக்குகிறது. தொடராக ஒளிபரப்பாகும் இந்த ஆவணப் படத்தின் இரண்டாவது பாகத்தில் இந்தத் தகவல்கள் இடம் பெற்றுள்ளன.
1எம்டிபி நிறுவனம், 5 பில்லியன் ரிங்கிட் முதலீட்டைக் கொண்டிருந்த 2009 காலகட்டத்தில் பெட்ரோ சவுதி இண்டர்நேஷனல் என்ற நிறுவனத்தில் 1 பில்லியன் அமெரிக்க டாலர் முதலீடு செய்ததைத் தொடர்ந்து இந்த விவகாரத்தை சில அனைத்துல இணைய ஊடகங்கள் வெளியிட்டன.
அதைத் தொடர்ந்து பிரதமர் நஜிப்பின் மலேசிய வங்கிக் கணக்குக்கு 2.6 பில்லியன் மலேசிய ரிங்கிட் வந்தது பெரும் சர்ச்சையானது. அந்தப் பணம் சவுதி அரேபிய அரச குடும்பத்திலிருந்து வழங்கப்பட்ட தொகை என அவர் விளக்கம் அளித்தார்.
இந்த விவகாரங்களை உள்ளடக்கிய தகவல்களை பிபிசி தற்போது ஒளிபரப்பத் தொடங்கியுள்ளது.