Home நாடு வழக்கத்திற்கு மாறான, பெரிய அளவிலான காவடிகளுக்குத் தடை – பத்துமலை நிர்வாகம் அறிவிப்பு!

வழக்கத்திற்கு மாறான, பெரிய அளவிலான காவடிகளுக்குத் தடை – பத்துமலை நிர்வாகம் அறிவிப்பு!

1041
0
SHARE
Ad
Thaipusam 2015 - Kavadi
கோப்புப் படம்

கோலாலம்பூர் – தைப்பூசத் திருநாள் அன்று, பெரிய அளவிலான காவடிகளையோ, தடை செய்யப்பட்ட சின்னங்களையோ அல்லது இதற்கு முன்பு ஆலயத்திற்குள் அனுமதிக்கப்படாத பொருட்களையோ எடுத்து வருபவர்கள் பத்துமலை ஆலயத்தில் முதன்மை நுழைவு வாயிலிலேயே தடுத்து நிறுத்தப்படுவார்கள் என தைப்பூசம் சிறப்புப் பணிக்குழு அறிவித்திருக்கிறது.

மேலும், கத்தி, திரிசூலம் மற்றும் பாராங் உள்ளிட்ட பொருட்களோடு, துரியன், மிளகாய் மற்றும் ஆப்பிள் போன்றவற்றையும் எடுத்து வரக்கூடாது என்றும் அச்சிறப்புப் பணிக்குழு கூறியிருக்கிறது.

அதேவேளையில், காற்பந்து குழுவின் சின்னங்கள், குண்டர் கும்பலின் குறியீடுகள் மற்றும் அமைப்புகளின் சின்னங்கள் ஆகியவற்றையும் காவடிகளில் பதித்து வரக்கூடாது என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

#TamilSchoolmychoice

இது குறித்து ஸ்ரீமகா மாரியம்மன் தேவஸ்தான கமிட்டியின் தலைவர் டான்ஸ்ரீ ஆர்.நடராஜா நேற்று ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “வழக்கத்திற்கு மாறான காவடிகளை தயவு செய்து எடுத்து வராதீர்கள். அது காவடி ஏந்தி வருவதற்கான நோக்கத்தை மட்டும் கெடுக்கவில்லை, சிலருக்கு அது பொழுதுபோக்காகவும் அமைந்துவிடுகின்றது” என்று தெரிவித்திருக்கிறார்.

மேலும், பெரிய அளவிலான காவடிகள், பத்துமலை குகைளின் நுழைவு வாயிலில் நுழைய முடியாது, இது போன்ற காவடிகளை அன்றைய நாளில் ஆற்றங்கரையில் இருந்து எடுத்துவரலாமென்று பக்தர்கள் நினைக்கலாம். ஆனால் ஆலய நுழைவு வாயிலில் அதனை நாங்கள் நிறுத்திவிடுவோம்” என்று நடராஜா குறிப்பிட்டிருக்கிறார்.

அதேவேளையில், பக்தர்கள் தங்கள் உடம்பில், பாதுக்கப்பு பின்களை (Safety Pins) கொண்டு குத்திக் கொள்வது, சாஹசங்கள் செய்வது, கூர்மையான ஆயுதங்களைக் கொண்டு நடனம் ஆடுவது, உடம்பில் கொக்கிகளைக் குத்திக் கொண்டு தேரை இழுப்பது, புகைப்பிடிப்பது, கத்தியின் மீது நடப்பது, சவுக்கடி கொடுப்பது மற்றும் மதுபானப் புட்டிகளைக் கொண்டு வருவது போன்றவற்றையும் தவிர்க்குமாறு நடராஜா பக்தர்களைக் கேட்டுக் கொண்டிருக்கிறார்.

அதுமட்டுமின்றி, பக்தர்கள் பெரிய அளவிலான மேளங்களை இசைப்பது, சம்பந்தமேயில்லாத நடனங்களையும், பாடல்களையும் ஒலியேற்றச் செய்வது போன்றவற்றையும் தவிர்க்கும்படி நடராஜா குறிப்பிட்டிருக்கிறார்.

அலகு குத்தும் பக்தர்கள், 1 அங்குலத்திற்கு அதிகமான அலகுகளைக் குத்த வேண்டாம் என்றும், பால் காவடி, மயில் காவடி மற்றும் பூ காவடி ஆகிய மூன்று காவடிகள் மட்டுமே புனிதமாகக் கருதப்படும் என்றும் நடராஜா தெரிவித்திருக்கிறார்.