கோலாலம்பூர் – உலக சுகாதார அமைப்பான (WHO) அறிமுகப்படுத்திய புகைப்பதை தவிர்ப்போம் என்பதை உணர்த்தும் ‘ப்ளூ ரிப்பன்’ திட்டம் உலகெங்கிலும் இருப்பது அனைவரும் அறிந்த ஒன்றே.
அந்த வகையில் மலேசிய சுகாதார அமைச்சின் கீழ் செயல்படும் ‘மை சீஹாட்’ அமைப்பு மலேசியாவில் இந்த திட்டத்தை கடந்த சில ஆண்டுகளாக சிறப்பாக வழி நடத்தி வருகின்றனர்.
கடந்த ஆண்டு ‘ப்ளூ ரிப்பன்’ எனும் புகைப்பதை தவிர்ப்போம் என்ற இயக்கத்தை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தி சிறப்பாக செயலாற்றியதற்காக இவ்வியக்கத்தின் உயரிய விருதான ‘ப்ளூ ரிப்பன்’ சிறந்த அடைவு நிலை விருது, மின்னல் எஃப்எம்-மிற்கு வழங்கப்பட்டது.
கடந்த வாரம் புதன்கிழமை புத்ராஜெயாவில் நடைபெற்ற இந்த விருது விழாவில் கலந்துகொண்ட மலேசிய சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் சுப்ரமணியம் மின்னலுக்கு இந்த விருதை வழங்கினார். இந்த இயக்கத்தை வெற்றியடைய செய்த மின்னல் எஃப்எம்மிற்கும் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.
“பல்வேறு துறைகளை சேர்ந்த நிறுவனங்களும், இயக்கங்களும் இந்நிகழ்வில் நற்சான்றிதழ்கள் பெற்றன. இருப்பினும் ஒட்டுமொத்த அடைவுநிலை விருதை மின்னல் எஃப்எம் பெற்றது பெருமைக்குறியது” என அதன் தலைவர் குமரன் தெரிவித்தார்.