கோலாலம்பூர் – இந்தியாவால் தேடப்பட்டு வரும் மதபோதகர் ஜாகிர் நாயக்கிற்கு மலேசிய அரசாங்கம் அடைக்கலம் கொடுத்து நிரந்தர வசிப்பிட அந்தஸ்து வழங்கியிருப்பதற்கு எதிராக ஹிண்ட்ராப் தலைவர் பொன்.வேதமூர்த்தி உள்ளிட்ட 19 பேர் தொடுத்த வழக்கை இன்று புதன்கிழமை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
19 பேரும் தங்களது வழக்கில் அரசாங்கத்தோடு, ஜாகிர் நாயக்கின் பெயரையும் சேர்த்திருக்க வேண்டும் என நீதிபதி அசிசா நவாவி தீர்ப்பு வழங்கியதாக ஹிண்ட்ராப் வழக்கறிஞர் கார்த்திகேசன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
மேலும், இந்த வழக்கிற்காக 19 பேரும் அரசாஙத்திற்கு 5000 ரிங்கிட் வழங்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டிருக்கிறார்.
இதனிடையே, 19 பேரும் இந்த வழக்கை இன்றே மேல்முறையீடு செய்யவிருப்பதாகவும் கார்த்திகேசன் தெரிவித்தார்.