Home நாடு சரவாக்: யார் இந்த ‘பாரு பியான்’?

சரவாக்: யார் இந்த ‘பாரு பியான்’?

1071
0
SHARE
Ad
baru bian-pkr-sarawak
பாரு பியான் – பிகேஆர் கட்சியின் சரவாக் மாநிலத் தலைவர்

கூச்சிங் – எதிர்வரும் பொதுத் தேர்தலில் பக்காத்தான் ஹரப்பான் – தேசிய முன்னணி கூட்டணிகளின் அரசியல் போராட்டம், எதிர்த் தாக்குதல்கள், மோதல்கள் – இப்படி எந்தவித சலனங்களும் இன்றி தனித்து நிற்கிறது சரவாக் மாநிலம்!

மலேசியாவின் ஒரு மாநிலம்தான் சரவாக் என்றாலும், மேற்கு மலேசிய அரசியலின் தாக்கங்கள், வெப்பச் சூழல்கள் சரவாக் மாநிலத்தை மட்டும் எப்போதும் அவ்வளவாகப் பாதிப்பதில்லை – பொதுத் தேர்தல்களிலும் கூட!

அதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன. அவை என்னவென்று பிறிதொரு நாளில் கண்ணோட்டமிடுவோம்.

#TamilSchoolmychoice

எதிர்வரும் 14-வது நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் ஒரே ஒரு தலைவரின் பெயர் மட்டும் சரவாக் மாநிலத்தின் எல்லா இடங்களிலும் அடிக்கடி உச்சரிக்கப்படுவதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அவர்தான் பாரு பியான்!

மேற்கு மலேசியர்களுக்கு, குறிப்பாக இந்தியர்களுக்கு அவ்வளவாகப் பரிச்சயமில்லாதப் பெயர்!

ஆனால், சரவாக் மாநிலத்தின் உட்புறக் குக்கிராமங்களிலும் பாரு பியான் பிரபலமானவர். ஒரு வழக்கறிஞரான அவர் பல்லாண்டுகளாக சரவாக் மக்களின் பூர்வீக நிலம், கலாச்சாரம், மீதிலான உரிமைகளுக்காகப் போராடி வருவதால்தான் இந்த அளவுக்குப் பிரபலம்!

சரவாக் பிகேஆர் கட்சியின் மாநிலத் தலைவராகவும் அரசியல் அரங்கில் பணியாற்றி வருகிறார் பாரு பியான்.

Ba'Kelalan-sarawak-state assembly-2016 results
பக்காலெலான் சட்டமன்றத் தொகுதிக்கான 2016 சரவாக் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள்

பக்காலெலான் (Ba’kelalan) சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினராக கடந்த 2016 சட்டமன்றத் தேர்தலில் பியான் வென்றிருக்கிறார். ஆனால், 2013 பொதுத் தேர்தலில் லிம்பாங் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டு சரவாக்கின் ஆளும் கட்சியான பார்ட்டி பெசாகா பூமிபுத்ரா பெர்சாத்து வேட்பாளரிடம் 8,301 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார் பியான்.

இருந்தாலும், பூர்வீகக் குடிமக்களுக்காகத் தொடர்ந்து போராடி வரும் பாரு பியானின் செயல்பாடுகள் அவரை சரவாக் அரசியலில் முன்னணியில் வைத்திருக்கின்றன. சரவாக் பிகேஆர் கட்சியின் வெற்றி முகமாகவும் பியான் பார்க்கப்படுகிறார்.

எதிர்வரும் பொதுத் தேர்தலில் சரவாக் மாநிலத்தில் பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி வகுக்கப் போகும் வியூகங்களைச் செயல்படுத்தும் ஆற்றல் வாய்ந்த நம்பிக்கை நட்சத்திரமாகவும் திகழ்கிறார் 59 வயதான பியான் பாரு.

சபா மாநிலத்தில் எதிர்க்கட்சி அரசியலில் பல பிரபல முகங்கள் களத்தில் முன் நின்று பணியாற்றி வந்தாலும், அந்த அளவுக்கு சரவாக் மாநிலத்தில் எதிர்க்கட்சி முகங்களைப் பார்க்க முடிவதில்லை.

அந்த வகையில் சரவாக் மாநில அரசியலில் குறிப்பிடத்தக்க – மிகுந்த எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தும் – எதிர்க்கட்சி அரசியல்வாதியாக தீவிரமாகச் செயலாற்றி வருபவர் பியான்.

பாரு பியான் பின்னணி என்ன?

baru biyan-pkr-sarawak
பாரு பியான்

ஒரு கிறிஸ்துவ பாதிரியாரின் மகனாக சரவாக் மாநிலத்தின் மிகவும் பின்தங்கிய, வடக்குப் பகுதியின் உட்புறத்தில் – இந்தோனிசியாவின் கலிமந்தான் பகுதியை எல்லையாகக் கொண்ட லாவாஸ் பிரதேசத்தில் பிறந்து வளர்ந்தவர் பியான்.

பின்னர் லிம்பாங் இடைநிலைப் பள்ளியில் கல்வியைத் தொடர்ந்தவர் மிரி நகரிலுள்ள கல்லூரியில் பயின்றுவிட்டு, மாரா தொழில்நுட்பப் பல்கலைக் கழகத்தில் கல்வி கற்றார். ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் பல்கலைக் கழகத்தில் சட்டம் படித்துவிட்டு, சரவாக்கில் வழக்கறிஞராகப் பணியாற்றத் தொடங்கிய காலத்தில் சரவாக் பூர்வீக மக்களின் அடிப்படை உரிமைகள், பாரம்பரியமாக அவர்கள் பின்பற்றி வந்த கலாச்சாரங்கள் கொஞ்சம் கொஞ்சமாக பறிக்கப்படுவதை – அழிக்கப்படுவதைக் கண்டு, அந்தப் பிரச்சனையைக் கையில் எடுத்துக் கொண்டு போராடி வருகிறார்.

அந்தப் போராட்டங்களின் மூலம், சரவாக் பூர்வீக மக்களின் இல்லங்கள் தோறும் உச்சரிக்கப்படும் ஒரு பெயராக உருவாகி இருக்கிறார் பாரு பியான்.

PKRஅவரது பிரபலத்தையும் ஆளுமையையும், அறிவாற்றலையும் உணர்ந்த பிகேஆர் கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் அவரை பிகேஆர் கட்சிக்குள் இழுத்துக் கொண்டு வந்து, தற்போது சரவாக் மாநிலத்தின் பிகேஆர் கட்சியின் தலைவராகவும் நியமித்து இருக்கிறார்.

சரவாக் பக்காத்தான் கூட்டணியின் தொகுதி பங்கீடுகள்

தற்போது, பக்காத்தான் ஹரப்பான் சார்பில் டான்ஸ்ரீ மொகிதின் யாசினுடன் கூட்டணி ஒத்துழைப்பு தொகுதி பங்கீடுகளுக்கான பேச்சு வார்த்தைகளில் பங்கெடுத்து வருகிறார் பாரு பியான்.

பக்காத்தான் கூட்டணிக் கட்சிகளுக்கிடையிலான தொகுதி உடன்பாடுகள் கூடியவிரைவில் முடிவடைந்த பின்னர், பாரு பியான் போட்டியிடப் போகும் நாடாளுமன்றத் தொகுதியும் என்னவென்பது தெளிவாகும்.

2016-இல் தான் சரவாக் மாநிலத்துக்கான சட்டமன்றத் தொகுதிகளுக்கான தேர்தல்கள் நடைபெற்றதால் இந்த முறை சரவாக் மாநிலத்தில் நாடாளுமன்றத் தேர்தல்கள் மட்டுமே நடைபெறும்.

pakatan harapan-logoசரவாக்கில் மொத்தமுள்ள 31 நாடாளுமன்றத் தொகுதிகளில் தற்போது 6 மட்டுமே எதிர்க்கட்சிகள் வசமிருக்கின்றன.

தற்போது இருக்கும் எண்ணிக்கையைக் குறைந்த பட்சம் தற்காத்துக் கொள்ள தேசிய முன்னணி மும்முரமாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

பக்காத்தான் ஹரப்பான் கூட்டணியோ, தற்போது இருக்கும் 6 தொகுதிகளை விடக் கூடுதலாக எத்தனை தொகுதிகளைக் கைப்பற்றலாம் என வியூகம் வகுத்துக் கொண்டிருக்கின்றது.

அந்த வியூகங்களின் மையப் புள்ளி பாரு பியான்!

அதற்குக் காரணம் பூர்வீக மக்களின் உரிமைகளுக்கான அவரது போராட்டங்கள்! அதன் காரணமாக அவருக்குக் கிடைத்திருக்கும் அரசியல் பிரபல்யம்!

14-வது பொதுத் தேர்தல்களின் முடிவுகள் வெளியாகும்போது, பக்காத்தான் கூட்டணி தற்போது கொண்டிருக்கும் நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கை அதிகரித்தால், அதற்குக் காரணமாக அனைவரின் விரல்களும் சுட்டிக் காட்டப் போகும் நபர் பாரு பியானாகத்தான் இருக்கும்!

அதே வேளையில், 14-வது பொதுத் தேர்தலில் பக்காத்தான் கூட்டணி அடுத்தகட்டத்திற்குச் செல்ல முடியாமல் தடுமாறினாலோ, அல்லது சரவாக் மாநிலத்தில் பக்காத்தான் கூட்டணி மோசமான முறையில் தோல்வியடைந்தாலோ, அதற்கான பல காரணங்களில் ஒன்றாக இருக்கப் போவதும் பாரு பியான் என்ற பெயராகத்தான் இருக்கும்!

-இரா.முத்தரசன்