Home நாடு காவல் துறையில் புகார்: “நான் அவ்வாறு கூறவில்லை” – கமலநாதன் விளக்கம்

காவல் துறையில் புகார்: “நான் அவ்வாறு கூறவில்லை” – கமலநாதன் விளக்கம்

1232
0
SHARE
Ad

vasanthapriya-father-police report-kamalanathan-ஜோர்ஜ் டவுன் – பினாங்கிலுள்ள செபராங் பிறை காவல் நிலையத்தில் மரணமடைந்த மாணவி வசந்தபிரியாவின் தந்தை ஆர்.முனியாண்டி, கல்வி துணையமைச்சர் டத்தோ ப.கமலநாதனுக்கு எதிராக திங்கட்கிழமை (12 பிப்ரவரி 2018) புகார் ஒன்றை செய்துள்ளார். ஊடகச் செய்தி ஒன்றில் இரண்டு வருடங்களுக்கு முன்பாக (மரணமடைந்த) வசந்தபிரியா தனது கரங்களின் மணிக்கட்டை அறுத்துக் கொண்டதாக கமலநாதன் கூறியதாக வெளிவந்திருக்கும் செய்தி தொடர்பில் முனியாண்டி இந்த காவல் துறை புகாரை செய்திருக்கிறார்.

எனினும், கமலநாதன் இதுகுறித்து இன்று புதன்கிழமை அளித்த விளக்கத்தில், தான் அவ்வாறு கூறவில்லை என மறுத்துள்ளார். “மரணமடைந்த மாணவியின் மனநலன் குறித்து ஆலோசகர் ஒருவரின் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டிருப்பதாகத் தான் கேள்விப்பட்டதாக ஒரு பத்திரிக்கையாளர் என்னிடம் தெரிவித்தார். அதைக் கேட்டதும், நானும் அவ்வாறுதான் கேள்விப்பட்டேன். அதைத் தொடர்ந்து பினாங்கு கல்வி இலாகா தங்களின் விசாரணை குறித்த அனைத்து ஆவணங்களையும் காவல் துறையிடம் சமர்ப்பித்து, காவல் துறை தங்களின் புலனாய்வைத் துரிதமாக முடிக்க ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என உத்தரவிட்டிருக்கிறேன் என்று கூறினேன்” என கமலநாதன் (படம்) கூறியதாக ஸ்டார் ஆங்கில இணைய ஊடகம் தெரிவித்திருக்கிறது.

Kamalanathan-feature-“கல்வி அமைச்சின் சார்பில் எந்த ஊழியராவது தவறாக நடந்து கொண்டது நிரூபிக்கப்பட்டால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க நாங்கள் தயங்கமாட்டோம் என்றும் கமலநாதன் கூறியிருக்கிறார்.

#TamilSchoolmychoice

நிபோங் திபால் இடைநிலைப் பள்ளியில் இரண்டாம் படிவம் படித்து வந்த மாணவி வசந்தபிரியா ஐபோன் செல்பேசி ஒன்றைத் திருடினார் என அவரது ஆசிரியர் குற்றம் சாட்டியதைத் தொடர்ந்து, தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். எனினும், அவரது குடும்பத்தினரால் காப்பாற்றப்பட்டு செபராங் ஜெயா மருத்துவமனையில் ஏழு நாட்களாக சிகிச்சை பெற்று வந்த அவர் கடந்த பிப்ரவரி 1-ஆம் தேதி மரணமடைந்தார்.

தனது காவல் துறை புகார் குறித்துக் கருத்துரைத்த வசந்தபிரியாவின் தந்தை முனியாண்டி கமலநாதனின் கருத்து குறித்து தான் ஏமாற்றமடைவதாகவும், தனது மகள் ஏற்கனவே தற்கொலைக்கு முயன்றிருக்கிறார் என்ற தகவல் அவருக்கு எப்படி கிடைத்தது என்றும் கேள்வி எழுப்பியிருந்தார். தனது மகள் கடந்த காலத்தில் தற்கொலைக்கு முயன்றதே இல்லை எனவும், எனது மகளின் மனநல நிலைமை குறித்து விவாதிக்க வேண்டிய நிலையில் கமலநாதன் இல்லை எனவும் முனியாண்டி மேலும் கூறியிருக்கிறார்.