Home நாடு “சமூகப் பணிகளுக்கு முக்கியத்துவம் வழங்கிய ஆன்மீகத் தலைவர்” – டாக்டர் சுப்ரா அனுதாபம்

“சமூகப் பணிகளுக்கு முக்கியத்துவம் வழங்கிய ஆன்மீகத் தலைவர்” – டாக்டர் சுப்ரா அனுதாபம்

1186
0
SHARE
Ad

கோலாலம்பூர் – காஞ்சி சங்கராச்சாரியார் ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி அவர்களின் மறைவு குறித்து மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்பிரமணியம், தனிப்பட்ட முறையிலும், மலேசிய இந்துக்களின் சார்பிலும் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்திருக்கிறார்.

“மகான் ஆதிசங்கரர் இந்தியாவில் நிறுவிய ஐந்து இந்து மடங்களில் ஒன்றான காஞ்சி சங்கர மடத்தின் ஆன்மீகத் தலைவராக நீண்ட காலம் தனது சமயப் பணிகளை ஆற்றி வந்த காஞ்சி சங்கராச்சாரியார் ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி அவர்கள் இன்று காலமானார் என்ற செய்தி அனைத்துலக அளவில் இந்து சமூகத்தினரை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. பாரம்பரிய முறைப்படி காஞ்சி சங்கர மடத்தின் இளைய மடாதிபதியாக 1954-ஆம் ஆண்டில் தனது 19-வது வயதில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜெயேந்திர சரஸ்வதி, அந்தப் பொறுப்பில் 40 ஆண்டுகள் இருந்த பின்னர் மடத்தின் 69-வது பீடாதிபதியாக 1994-இல் பொறுப்பேற்றார். அவரது நீண்ட கால ஆன்மீகச் சேவையில், காஞ்சி சங்கரமடத்தைக் கொண்டு பல்வேறு மக்கள் பணிகளுக்கும், சமூகப் பணிகளுக்கும், மருத்துவப் பணிகளுக்கும் முக்கியத்துவம் தந்தார் என்ற வகையில் அவர் என்றும் இந்துப் பெருமக்களால் நினைவு கூரப்படுவார்” என நேற்று புதன்கிழமை வெளியிட்ட பத்திரிக்கை அறிக்கையில் டாக்டர் சுப்ரா தெரிவித்தார்.

மலேசிய இந்துக்களின் சார்பில் அன்னாரின் மறைவுக்கு தனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்வதோடு, அன்னாரின் ஆன்மா சாந்தியடையவும் இறைவனைப் பிரார்த்திப்பதாக சுகாதார அமைச்சருமான டாக்டர் சுப்ரா தனது அறிக்கையில் தெரிவித்திருக்கிறார்.