சென்னை – பாஜக தேசியச் செயலாளர் எச்.ராஜா, பெரியார் சிலை அகற்றப்படும் எனத் தான் கூறிய கருத்துக்கு மன்னிப்புக் கேட்டிருக்கிறார்.
எனினும், சென்னை, கோவை உட்பட முக்கிய நகரங்களில் அவருக்கு எதிராக அரசியல் தலைவர்களும், மாணவ சங்கங்களைச் சேர்ந்தவர்களும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
“திரிபுராவில் லெனின் சிலை அகற்றப்பட்டதை ஒப்பிட்டு, தமிழகத்தில் பெரியார் சிலை அகற்றப்படும் என எனது முகநூல் நிர்வாகி எனது அனுமதியின்றிப் பதிவு செய்துவிட்டார். எனக்கு யார் மனதையும் புண்படுத்தும் நோக்கமில்லை; இந்த பதிவினால் யார் மனதும் புண்பட்டிருந்தால் இதயப்பூர்வமான வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன்” என எச்.ராஜா தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்துப் பதிவிட்டிருக்கிறார்.
இதனிடையே, திருப்பத்தூர் தாலுகா அலுவலகம் முன்பு இருந்த பெரியார் சிலையை சேதப்படுத்திய, சம்பவத்தில் கைதான பாஜக திருப்பத்தூர் ஒன்றிய பொதுச்செயலாளர் முத்துராமன், கட்சி அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நிரந்தரமாக நீக்கம் செய்யப்பட்டிருப்பதாக, தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தராஜன் அறிவித்திருக்கிறார்.
தற்போது இந்த விவகாரம் பெரும் சர்ச்சையாகியிருப்பதால், தமிழக முழுவதும் பெரியார் சிலைகளுக்குப் பாதுகாப்பு அளிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.