Home நாடு தொகுதிகள் எல்லை சீர்திருத்தம்: சிலாங்கூர் அரசின் போராட்டம் தொடர்கிறது

தொகுதிகள் எல்லை சீர்திருத்தம்: சிலாங்கூர் அரசின் போராட்டம் தொடர்கிறது

822
0
SHARE
Ad

Court of Appeal 440 x 215புத்ரா ஜெயா – தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ள சிலாங்கூர் மாநில தொகுதிகளின் எல்லைகள் மீதான சீர்திருத்தங்களுக்கு எதிராக சிலாங்கூர் மாநில அரசாங்கம் தொடுத்துள்ள வழக்கு இன்று வெள்ளிக்கிழமை மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் (கோர்ட் ஆப் அப்பீல்) விசாரணைக்கு வந்தது.

இந்த வழக்கை கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் ஏற்கனவே கடந்த ஆண்டு டிசம்பரில் தள்ளுபடி செய்துவிட்டது. மலேசிய அரசியல் சாசனப்படி தேர்தல் ஆணையம் மேற்கொள்ளும் சட்டப்படியான பணிகளில் நீதிமன்றம் தலையிட முடியாது என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது.

அந்தத் தீர்ப்பை எதிர்த்து சிலாங்கூர் அரசாங்கம் மேல் முறையீட்டு நீதிமன்றத்தில் தனது மேல்முறையீட்டை சமர்ப்பித்திருந்தது. அந்த மேல்முறையீடு இன்று விசாரணைக்கு வந்தபோது, அந்த வழக்கை விசாரிக்க நியமிக்கப்பட்ட மூன்று நீதிபதிகளில் இருவர் இந்த வழக்கைத் தொடர்ந்து விசாரிக்கக் கூடாது என சிலாங்கூர் மாநில அரசாங்கத்தின் சார்பில் வழக்காடிய வழக்கறிஞர் சைரஸ் தாஸ் ஆட்சேபம் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

சவாவி சாலே, கமாருடின் ஹிஷாம், வெர்னோன் ஓங் ஆகிய மூன்று நீதிபதிகள் சிலாங்கூர் அரசாங்கத்தின் மேல்முறையீட்டை விசாரிக்க இன்று நியமிக்கப்பட்டிருந்தனர். இவர்களில் சவாவி சாலே மற்றும் கமாருடின் ஹிஷாம் ஆகிய இருவரும் மேல்முறையீட்டை விசாரிக்கக் கூடாது என சிலாங்கூர் அரசு சார்பாக ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது.

இதே போன்ற மற்ற வழக்குகளை ஏற்கனவே விசாரித்த அந்த நீதிபதிகள் சாதகமற்ற தீர்ப்புகளை வழங்கியிருப்பதன் காரணத்தால், அவர்களே இந்த வழக்கை மீண்டும் செவிமெடுத்தால், சாதகமற்ற தீர்ப்பையே வழங்குவார்கள் என்ற அடிப்படையில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது.

நீதிமன்றத்தின் நடைமுறைகளில் மக்களுக்கு நம்பிக்கை ஏற்பட வேண்டும் என்றும் வழக்கறிஞர் சைரஸ் தாஸ் இன்று நீதிமன்றத்தில் வாதாடினார்.

இதனைத் தொடர்ந்து மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சுல்கிப்ளி அகமட் மக்கினுடின் மூன்று நீதிபதிகளைக் கொண்ட புதிய அமர்வினை அறிவிப்பார் என்றும், விசாரணை எதிர்வரும் மார்ச் 27-ஆம் தேதி தொடரும் என்றும் நீதிமன்றம் அறிவித்தது.

புதிய அமர்வு மே 27-ஆம் தேதிக்குள் நிர்ணயம் செய்யப்பட்டு அன்றே மேல்முறையீட்டு விசாரணை நடைபெறும் என்றும் நீதிபதி சவாவி அறிவித்தார்.

எனினும் தொகுதிகள் எல்லைகள் மீதான சீர்திருத்தங்கள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட இடைக்காலத் தடை விதிக்க முடியாது என மேல்முறையீட்டு நீதிமன்றம் கடந்த மார்ச் 2-ஆம் தேதி ஏற்கனவே தீர்ப்பளித்திருக்கிறது.

இதற்கிடையில், எதிர்வரும் புதன்கிழமை மார்ச் 28-ஆம் தேதி தேர்தல் ஆணையத்தின் எல்லை சீர்திருத்தங்கள் மீதான மசோதா நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

தொகுதி எல்லைகளுக்கான சீர்திருத்தங்கள் நீதிமன்ற விசாரணையில் இருப்பதால், இந்த சீர்திருத்தங்களை நாடாளுமன்றத்தில் விவாதிக்கவோ, சமர்ப்பிக்கவோ முடியாது என ஜசெக தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.