Home நாடு முதலாம் உலகத் தமிழ்க் குழந்தை இலக்கிய மாநாடு 2018

முதலாம் உலகத் தமிழ்க் குழந்தை இலக்கிய மாநாடு 2018

1789
0
SHARE
Ad

கோலாலம்பூர் – தமிழில் குழந்தை இலக்கியத்துக்குப் புத்துயிரூட்டவும், அடுத்த கட்ட வளர்ச்சிப் பாதைக்குக் கொண்டு செல்லும் நோக்கிலும் மலேசியாவில் முதலாவது உலகத் தமிழ்க் குழந்தை இலக்கிய மாநாடு இவ்வாண்டு நடைபெறுகிறது.

“புத்துலக வளர்ச்சிக்கேற்பத் தரமான குழந்தை இலக்கிய வளர்ச்சியை நோக்கி” என்ற கருப்பொருளுடன் இந்த மாநாடு 8.6.2018 முதல் 10.6.2018 வரை (வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை) கோலாலம்பூரில் மலாயாப் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெறும்.

மலேசியத் தமிழ் பண்பாட்டு இயக்கம் மலாயாப் பல்கலைக் கழகத்தின் இந்திய ஆய்வியல் துறையின் ஆதரவுடன் நடத்தப்படும் இந்த மாநாட்டில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் எதிர்வரும் 15 மே 2018-க்குள் தங்களின் பதிவுப் பாரங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

#TamilSchoolmychoice

இந்த மாநாட்டில் கலந்து கொள்ளும் மலேசியப் பேராளர்கள் மாநாட்டு பதிவுக் கட்டணமாக 300 ரிங்கிட்டும் அயலகப் பேராளர்கள் 250 அமெரிக்க டாலரும் செலுத்த வேண்டும். இந்தியா, இலங்கை பேராளர்களுக்கான மாநாட்டுப் பதிவுக் கட்டணம் 100 அமெரிக்க டாலராக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. மாணவர்களுக்கான பதிவுக் கட்டணன் 100 ரிங்கிட் மட்டும் எனவும் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.

இக்கட்டணத்தில் மாநாட்டுப் பதிவு, உணவு, தங்குமிடம், மாநாட்டுப் பை, எழுது பொருள், மாநாட்டு மலர், ஆய்வடங்கல் ஆகியவை உள்ளிட்டிருக்கும்.

மாநாட்டில் கலந்து கொள்ள கீழ்க்காணும் வலைத் தளத்தில் பதிவு செய்து கொள்ளலாம்:

www.childtamil.com

மேற்கொண்டு விவரங்கள் பெற கீழ்க்காணும் மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளலாம்:

info@childtamil.com

மாநாட்டின் நோக்கங்கள்

தமிழ் இலக்கியத்தின் பல சிறப்புக் கூறுகளைப் பற்றி இதுவரை எத்தனையோ உலக மாநாடுகள் நடந்துள்ளன. ஆனால் தமிழ்க் குழந்தை இலக்கிய வளர்ச்சியை நோக்கமாய்க் கொண்டு இதுவரை உலக அளவில் மாநாடெதுவும் நடந்ததில்லை.

அக்குறையைப் போக்கும் நோக்கொடும் வளர்ச்சிக் குன்றிக்கிடக்கும் அதற்கு ஓர் உந்துதல் ஏற்படுத்த வேண்டுமென்னும் விழைவொடும் இம்மாநாட்டைக் கூட்ட, மலாயாப் பல்கலைக்கழக இந்திய ஆய்வியல்துறை ஆதரவுடன் மலேசியத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கம் முன்வந்துள்ளது.

எதிர்காலத் தலைமுறையினரான குழந்தைகள், தாய்மொழிப் பற்றொடும், இலக்கிய நாட்டமுடனும், பண்பாட்டுச் செழுமையொடு, விழுமியங்களைப் போற்றி வளர வேண்டுமென்பதனைக் கருத்தில் கொண்டு இயக்கம் இப் பணியை மேற்கொண்டுள்ளது.

முதலாவது குழந்தைகள் இலக்கிய மாநாட்டுக்கான நோக்கங்களாக பின்வரும் அம்சங்கள் ஏற்பாட்டாளர்களால் குறிப்பிடப்பட்டிருக்கின்றன:

  • நலிந்துவரும் குழந்தை இலக்கிய வளர்ச்சிக்குப்  புத்துயிரூட்டல்
  • கற்றல் கற்பித்தல் முறைகளில் கவிதை, கதை, கட்டுரை, நாடகம் போன்ற குழந்தை இலக்கியங்களைப் பயன்படுத்தும் உத்திகளை ஆராய்தல்.
  • கணினி ஊழிக்கு ஏற்ற முறையில் குழந்தை இலக்கிய வடிவம், உள்ளடக்கம் போன்றவற்றில் மாற்றம் கொண்டுவந்து, மின்னூல் வடிவில் இப்படைப்புகள் வருதலை ஊக்கப்படுத்தல்.
  • புலம் பெயர்ந்த நாடுகளில் தமிழ்க் குழந்தை இலக்கியத்தின் நிலையை ஆராய்தல்.
  • பள்ளிகளிலும், பள்ளி நூலகங்களிலும் இடம்பெற வகைசெய்யும் வண்ணம் குழந்தைகளின் அகவளர்ச்சியைத்தூண்டும் தரமான குழந்தை – சிறுவர்” இலக்கிய நூல்கள் உருவாக ஊக்கம் நல்குதல்”.
  • பள்ளிகளிலும் வீட்டிலும் குழந்தைகள் தாமே வாசித்து மகிழும் பழக்கத்தை ஏற்படுத்தும் வழிகளை ஆராய்தல்.

ஆய்வுக் கட்டுரைகள்

இந்த மாநாட்டுக்கு பின்வரும் தலைப்புகளைத் தழுவியமைந்த கட்டுரைகள் பெரிதும் வரவேற்கப்படுகின்றன:

  1. நலிந்துவரும் குழந்தை இலக்கிய வளர்ச்சிக்குப் புத்துயிரூட்டும் வழிமுறைகள்.
  2. நாட்டுப்புறச் சிறுவர் பாடல்களும் புதிய குழந்தைப் பாடல்களும்.
  3. குழந்தைகளுக்கான கதைப்பாடல்கள், காவியங்கள் – ஒரு நோக்கு.
  4. அழ.வள்ளியப்பாவிற்கு முன்பும் பின்பும்.
  5. கணினிக் காலத்திற்கேற்ற குழந்தை இலக்கியத் தோற்றத்திற்குரிய வழிவகைகளை ஆராய்தல்.
  6. புலம் பெயர்ந்த நாடுகளில் குழந்தை இலக்கியத்தின் நிலை.
  7. கற்றல் கற்பித்தலில் கவிதையைப் பயன்படுத்தும் உத்திகள்.
  8. தமிழ் மழலையர்க்கான கதை, கட்டுரை, நாடக நூல்கள் – ஒரு பார்வை.
  9. உலக மொழிகளில் குழந்தை இலக்கியம்.
  10. குழந்தை இலக்கியங்களில் உடல் நலம், மருத்துவம் தொடர்பான செய்திகள்.
  11. வானொலி, தொலைக்காட்சி, திரைத் துறைகளில் குழந்தைமை பதிவுகள்.
  12. குழந்தைகள் தங்களுக்காகத் தாங்களே படைத்துக் கொள்ளும் இலக்கியம்.
  13. நன்னெறி, பண்பாட்டியல் நோக்கில் குழந்தை இலக்கியம்.
  14. குழந்தைகளும் குறும் படங்களும்.

ஆய்வுக் கட்டுரைகளுக்கான நிபந்தனைகள்

கட்டுரைகள் 15 மணித்துளிகளுக்குள் படிக்கப்படும் வண்ணம் அமைதல் வேண்டும்.

ஆய்வுக் கட்டுரையின் சுருக்கத்தை 150 சொற்களுக்கு மேற்போகாதவாறு ஒருங்குறி (UNICODE) முறையில் தட்டச்சு செய்து (1.5 இடைவெளி ; 12 புள்ளி எழுத்தளவு ) 31.03.2018 ஆம் நாளுக்குள் பின்வரும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புதல் வேண்டும்.

(மின்னஞ்சல் :info@childtamil.com) வலைத்தளம் : www.childtamil.com)

கட்டுரைத் தேர்வுக்குழுவின் முடிவுகள் தொடர்புடைய பேராளர்களுக்கு 15.04.2018 ஆம் நாளுக்குள் தெரிவிக்கப்படும்.

முழுவடிவம் கொண்ட ஆய்வுக் கட்டுரையை (A4 தாளில் ) 6 பக்கங்களுக்கு மிகாதவாறு தட்டச்சு செய்து 30.04.2018 ஆம் நாளுக்குள் மாநாட்டுக் குழுவினருக்குக் கிடைக்குமாறு அனுப்பி வைத்தல் வேண்டும்.

மலேசியாவின் முதலாவது குழந்தைகள் இலக்கிய மாநாடு குறித்த விவரங்கள் பெற கீழ்க்காணும் முகவரியிலும், இணையம் மூலமும் தொடர்பு கொள்ளலாம்:

முகவரி:

ICOCIT Secretarieat: No.50A,FirstFloor,Jalan 1/19,Seksyen 1, 46000 Petaling Jaya,Selangor Darul Ehsan,Malaysia.

தொலைபேசி: +60377721714

இணையம்:

மின்னஞ்சல்: info@childtamil.com

வலைத்தளம்: www.childtamil.com