கோலாலம்பூர் – தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பிக்கப்பட்ட தொகுதி எல்லைகள் மீதான சீர்திருத்தங்களின் தாக்கங்கள் கொஞ்சம் கொஞ்சமாக வாக்காளர்கள் மத்தியில் விவாதங்களாக எழுந்து வருகின்றன. அரசியல் கட்சிகள் தங்களின் தொகுதிகள், வேட்பாளர்கள் எவ்வாறு பாதிக்கப்படுவார்கள் என்பதை இன்னும் கட்டம் கட்டமாக ஆராய்ந்து வருகின்றன.
இந்தத் தொகுதிகள் எல்லை சீர்திருத்தங்களால் பெரிதும் முக்கியத்துவத்தை இழந்து நிற்பவர்கள் இந்திய வாக்காளர்கள்தான். பல தொகுதிகளில் அதிகரித்துள்ள மலாய், சீன வாக்குகளின் எண்ணிக்கையால் இந்திய வாக்காளர்களின் எண்ணிக்கையும், அரசியல் முக்கியத்துவமும் பின்தள்ளப்பட்டுவிட்டது.
உதாரணம், பிரிக்பீல்ட்ஸ்!
கோலாலம்பூரின் லிட்டல் இந்தியா என அழைக்கப்படும் இந்தத் தொகுதியில் ஏராளமான இந்திய வாக்காளர்கள் இருக்கின்றனர். இதுநாள் வரையில் லெம்பா பந்தாய் நாடாளுமன்றத் தொகுதியின் கீழ் இருந்து வந்தது பிரிக்பீல்ட்ஸ் வட்டாரம்.
புக்கிட் பிந்தாங் தொகுதியோடு இணைந்த பிரிக்பீல்ட்ஸ்
லெம்பா பந்தாய் தொகுதியைப் பற்றிக் கூற வேண்டியதில்லை. கடந்த இரண்டு தவணைகளாக அன்வார் இப்ராகிமின் மகள் நூருல் இசா போட்டியிட்ட தொகுதி என்பதால், ஒவ்வொரு பொதுத் தேர்தலிலும் இங்கு அனல் பறக்கும் பிரச்சாரங்கள் அரங்கேறும். அதன் காரணமாக, பிரிக்பீல்ட்ஸ் இந்தியர்களை கவர்வதற்கு தேசிய முன்னணி, பக்காத்தான் கூட்டணி என இரண்டு தரப்புகளும் முனைப்புடன் செயல்பட்டன.
பிரிக்பீல்ட்ஸ் இந்தியர்கள் பெரும்பாலும் நூருல் இசாவுக்குத்தான ஆதரவளித்து வந்தனர் என லெம்பா பந்தாய் தொகுதியைச் சேர்ந்த பிகேஆர் கட்சியின் அரசியல் பணியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
ஆனால் இந்தத் தேர்தலில் முன்புபோல் பிரிக்பீல்ட்ஸ் வட்டார இந்திய வாக்காளர்களை நோக்கி பெரிய அளவிலான பிரச்சாரங்கள் எதுவும் நடக்கப் நடக்கப் போவதில்லை. காரணம், பிரிக்பீல்ட்ஸ் வட்டாரத்தைத் தூக்கி புக்கிட் பிந்தாங் நாடாளுமன்றத் தொகுதியோடு தற்போது இணைத்து விட்டார்கள்.
இதன் காரணமாக, பிரிக்பீல்ட்ஸ் இந்தியர்களின் வாக்குகளின் முக்கியத்துவமும் இழக்கப்பட்டு விட்டது.
காரணம், புக்கிட் பிந்தாங் என்பது முழுக்க முழுக்க சீன வாக்காளர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட தொகுதி என்பதால், இதில் இந்திய வாக்காளர்கள் உள் நுழைந்து ஒன்றையும் சாதிக்கப் போவதில்லை.
எப்படிப் பார்த்தாலும், ஜசெக வேட்பாளர்தான் புக்கிட் பிந்தாங் தொகுதியில் வெற்றி வாகை சூடப்போகிறார்.
இவ்வாறுதான் பல தொகுதிகளில் இந்திய வாக்காளர்கள் நகர்த்தப்பட்டதால் அந்தத் தொகுதிகளில் தங்களின் முக்கியத்துவத்தை இழந்திருக்கின்றனர் என முதற்கட்டத் தகவல்கள் கூறுகின்றன.
தொகுதி மாறும் நூருல் இசா
இதன் காரணமாகத்தான் லெம்பா பந்தாய் பகுதியை தனது செயலாளரும், பிகேஆர் கட்சியின் லெம்பா பந்தாய் தொகுதியின் இளைஞர் பிரிவுத் தலைவருமான பாமி பாட்சிலுக்கு விட்டுக் கொடுத்துவிட்டு, நூருல் இசாவும் வேறு தொகுதிக்கு மாறிச் செல்கிறார்.
நூருல் பண்டான் தொகுதியில் போட்டியிடக் கூடும் என ஆரூடங்கள் தெரிவிக்கப்பட்டிருக்கின்றன.
நூருல் லெம்பா பந்தாய் தொகுதியை விட்டு விலகியதற்கான மற்றொரு காரணம், புக்கிட் அமான் காவல்துறை தலைமையக வாக்காளர்களை இங்கே கொண்டு வந்து சேர்த்ததும்தான் என்றும் கூறப்படுகிறது.
கடந்த 2013 பொதுத் தேர்தலில் புக்கிட் அமான் காவல்துறை தலைமையகத்தை உள்ளடக்கிய தாமான் தாசிக் பெர்டானா (லேக் கார்டன்ஸ்) வாக்களிப்பு மையம் சிகாம்புட் நாடாளுமன்றத் தொகுதியின் கீழ் வந்தது. தற்போது இது லெம்பா பந்தாய் தொகுதிக்குள் கொண்டுவரப்பட்டிருக்கிறது. இதன் காரணமாக, 6,598 புதிய வாக்காளர்கள் தாமான் தாசிக் வாக்களிப்பு மையம் மூலம் லெம்பா பந்தாய் தொகுதியில் வாக்களிப்பர். இவர்கள் அனைவரும் பெரும்பாலும் காவல் துறை பணியாளர்கள் என்பதால் தேசிய முன்னணி அரசாங்கத்திற்கே வாக்களிப்பர் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் காரணமாக, இந்த முறை லெம்பா பந்தாய் தொகுதியில் தேசிய முன்னணி சார்பில் போட்டியிடும் ராஜா நோங் சிக் வெற்றி பெற வாய்ப்புள்ளது என்றும் கணிக்கப்படுகிறது.
2013-இல் 1,847 வாக்குகளில் ராஜா நோங் சிக் நூருல் இசாவிடம் தோல்வியடைந்தார்.
மீண்டும் ராஜா நோங் சிக் தேசிய முன்னணி சார்பில் லெம்பா பந்தாய் தொகுதியில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இந்த முறை அவர் சந்திக்கப் போவது பாமி பாட்சிலை!
இம்முறை மேற்குறிப்பிட்ட வாக்காளர் மாற்றங்களால் ராஜா நோங் சிக் லெம்பா பந்தாய் தொகுதியை வெல்லும் வாய்ப்புகள் பிரகாசமடைந்துள்ளன என அரசியல் பார்வையாளர்கள் தெரிவிக்கின்றனர்.