Home நாடு பண்டான் தொகுதியில் மக்களின் ஆரவாரத்துடன் மேடை ஏறிய நூருல் இசா!

பண்டான் தொகுதியில் மக்களின் ஆரவாரத்துடன் மேடை ஏறிய நூருல் இசா!

1231
0
SHARE
Ad

கோலாலம்பூர் – வழக்கு காரணமாக 14-வது பொதுத்தேர்தலில் பிகேர் பண்டான் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ரபிசி ரம்லி போட்டியிட முடியாததால், அவரது தொகுதியில் மூத்தத் தலைவர் நிறுத்தப்படுவார் என பிகேஆர் அறிவித்திருக்கிறது.

நேற்று திங்கட்கிழமை இரவு, பண்டான் தொகுதியில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் பேசிய பிகேஆர் பொதுச்செயலாளர் சைபுடின் நசுசியான், நிச்சயமாக ரபிசிக்கு இணையான அனுபவம் வாய்ந்த ஒரு தலைவர் பண்டான் தொகுதியில் நிறுத்தப்படுவார் என அங்கு கூடியிருந்த 300-க்கும் மேற்பட்ட பண்டான் தொகுதி மக்களிடம் உறுதியளித்தார்.

“ரபிசியால் இங்கே மீண்டும் போட்டியிட முடியாமல் போனதை, கடவுள் விருப்பப்படி பிகேஆர் ஏற்றுக் கொள்கிறது. நாங்கள் இன்னும் வேட்பாளரை முடிவு செய்யவில்லை. இத்தொகுதியில் ரபிசி போல் ஒரு உயர்ந்த நிலையில் இருந்த வேட்பாளரைக் கொண்டு வருவது கடினம் தான். பிகேஆர் பண்டான் தொகுதி மக்களுக்கு வணக்கத்தையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறது” என்று சைபுடின் கூறினார்.

#TamilSchoolmychoice

இதனிடையே, பிகேஆர் உதவித் தலைவரும், லெம்பா பந்தாய் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான நூருல் இசா அன்வார் தான் ரபிசிக்குப் பதிலாக பண்டான் தொகுதியில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதனை உறுதிப்படுத்தும் விதமாக, நேற்று இரவு, கூட்டத்தில் கலந்து கொண்ட ரபிசி, நூருல் இசாவை மேடைக்கு அழைத்து, அங்கு கூடியிருந்த மக்களை ஆராவாரம் செய்யும் படி கேட்டுக் கொண்டார்.

என்எஃப்சி (National Feedlot Corporation) ஊழல் தொடர்பான இரகசிய வங்கி ஆவணங்களை வெளியிட்ட குற்றத்திற்காக பாண்டான் நாடாளுமன்ற உறுப்பினர் ரபிசி ரம்லிக்கு அமர்வு நீதிமன்றம் 30 மாத சிறைத் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தது.

அரசியல் சாசனத்தின் படி, ஓராண்டுக்கு மேலாக சிறைத் தண்டனை பெறுபவர்கள் தேர்தலில் போட்டியிட முடியாது என்பதால், 14-வது பொதுத்தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை ரபிசி இழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.