Home வணிகம்/தொழில் நுட்பம் செல்லினம்: ஆண்டிராய்டில் மட்டும் 1 மில்லியனுக்கும் மேற்பட்ட பயனர்களைத் தாண்டியது

செல்லினம்: ஆண்டிராய்டில் மட்டும் 1 மில்லியனுக்கும் மேற்பட்ட பயனர்களைத் தாண்டியது

1992
0
SHARE
Ad

Sellinam-promo-Imageகையடக்கக் கருவிகளிலும், செல்பேசிகளிலும் தமிழ் மொழியை உள்ளீடு செய்து பயனர்களிடையே பகிர்ந்து கொள்ளச் செய்வதில் உலக அளவில் முன்னணி வகித்து வரும் செல்லினம் தற்போது கூகுள் நிறுவனத்தின் அண்டிரோய்டு தொழில்நுட்பத் தளத்தில் மட்டும், 1 மில்லியனுக்கும் (10 இலட்சத்துக்கும்) மேற்பட்டபயனர்களைப் பெற்றுச் சாதனை புரிந்துள்ளது.

இது தவிர,ஆப்பிள் கையடக்கக் கருவிகள் மற்றும் ஐபோன்கள் பயனர்களில் சுமார் 1 இலட்சம் பயனர்கள் செல்லினம் குறுஞ்செயலியைப் பயன்படுத்திவருகின்றனர்.

தமிழில் இயங்கும் உள்ளீட்டுச் செயலிகளில், ஆண்டிராய்டு, ஐஓஎஸ் ஆகிய முதன்மையானத் திறன்பேசித் தளங்களில் ஒருங்கே இயங்கும் ஒரேக் குறுஞ்செயலியாக செல்லினம் உருவெடுத்துள்ளது.

#TamilSchoolmychoice

உலகம் முழுவதிலும் கையடக்கக் கருவிகளில் தமிழின் பயன்பாடு அதிகரித்து வருவதற்கான முக்கியக் காரணங்களில் ஒன்றாகச் செல்லினம் செல்லினம் செயல்பட்டு வருகிறது.

இதில் மற்றொரு பெருமை என்னவென்றால், செல்லினம் தொடக்கமுதல் மலேசியாவில் – ஒரு மலேசியத் தமிழரால் – உருவாக்கப்பட்டது என்பதுதான்.

இணையப் பயன்பாட்டிலும், கையடக்கக் கருவிகளின் பயன்பாட்டிலும் தமிழ் இன்று அதிக அளவில் பயன்படுத்தப்படுவதற்கான முக்கியக் காரணிகளில் ஒருவராகத் திகழும் கணினித் துறை தொழில்நுட்ப வல்லுநர் முத்து நெடுமாறனின் கைவண்ணத்தில் உருவானதுதான் செல்லினம்.

2003ஆம் ஆண்டு நோக்கியா, சோனி எரிக்சன் போன்ற சாதாரனக் கைப்பேசிகளில் தொடங்கி, இன்று கூகுள் நிறுவனத்தின் ஆண்டிராய்டு, ஆப்பிள் நிறுவனத்தின்ஐஓஎஸ் என இரு திறன்பேசித் தளங்களிலும் இயங்கி வரும் செல்லினம் தொடர்ந்து தனது உள்ளடக்கங்களில் பல்வேறு தொழில் நுட்ப மேம்பாடுகளையும் தொடர்ந்து கொண்டு வந்திருக்கிறது.

சொற்களுக்கான பரிந்துரைப் பட்டியல், திருக்குறள் உள்ளீடு, பிழை திருத்தங்கள் போன்றவை செல்லினத்தின் பயனர்கள் விரும்பிப் போற்றும் அம்சங்களில் குறிப்பிட்டத் தக்கவையாகும்.

செல்லினம் உருவாக்கப்பட்டு முதன் முதலில் 2005ஆம் பொங்கல் அன்று பொதுப் பயனீட்டிற்காக வெளியிடப் பட்டது. அப்போது ஆண்டிராய்டும் ஐஓஎசும் புழக்கத்தில் இல்லை. 2009ஆம் ஆண்டு முதன் முதலில் ஐ.ஓ.எசிலும் அதனைத் தொடர்ந்து ஆண்டிராய்டிலும் செல்லினம் இலவசமாக வெளியிடப்பட்டது.

அதன் பின்னர் இதன் தொழில்நுட்ப அம்சங்கள், பயனர்களின் தேவைகளுக்கேற்ற உள்ளடக்கங்கள், பயன்படுத்தும் முறைகளில் எளிமை ஆகிய அணுகுமுறைகள் காரணமாக ஆண்டு தோறும் செல்லினம் பயனர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வந்திருக்கிறது.

எந்த விளம்பரமும் இல்லாமல், பயனர்களின் பகிர்வுகளைக் கொண்டே இந்த எண்ணிக்கையை செல்லினம் அடைந்துள்ளது என்பதே இதனை எவ்வாறு பயனர்கள் விரும்பிப் பயன்படுத்துகிறார்கள் என்பதனைக் காட்டுகிறது.

தற்போது இந்த எண்ணிக்கை அண்டிரோய்டு தளத்தில் மட்டும் 10 இலட்சத்தையும் கடந்து சாதனை புரிந்திருக்கிறது.