Home நாடு “சொந்த நலன்களுக்கு முக்கியத்துவம் தராமல் கட்சிக்கு முன்னுரிமை தாருங்கள்” டாக்டர் சுப்ரா!

“சொந்த நலன்களுக்கு முக்கியத்துவம் தராமல் கட்சிக்கு முன்னுரிமை தாருங்கள்” டாக்டர் சுப்ரா!

1072
0
SHARE
Ad

கோலாலம்பூர் – பொதுத் தேர்தல் இன்று செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து மஇகா கட்சி வட்டாரங்களில் எப்போது வேட்பாளர் அறிவிப்பு – யார் வேட்பாளர்கள் – என்ற பரபரப்பு சூழ்ந்திருக்கும் நிலையில், கட்சியினர் தங்களின் சொந்த நலன்களுக்கு முக்கியத்துவம் தராமல், கட்சி நலனை முன்னிறுத்தி செயல்பட வேண்டுமென மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்பிரமணியம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

“எதிர்வரும் பொதுத் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு அதிக வாய்ப்புள்ள வேட்பாளர்களை அடையாளம் கண்டு மஇகா நிறுத்தவிருக்கிறது என்பதைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். அடிமட்டத் தொண்டர்களிடையே ஒரு வேட்பாளருக்கு கிடைக்கக் கூடிய ஆதரவு குறித்த கருத்துத் திரட்டு, தொலைபேசி அழைப்புகளின் மூலம் திரட்டப்படும் கருத்துகள், தேசிய முன்னணி தேர்தல் நடவடிக்கை அறைகளின் ஆய்வுகளின் மூலம் கிடைக்கும் தகவல்கள் போன்ற பல முனைகளிலும் வேட்பாளர்கள் பரிசீலிக்கப்பட்டுத் தேர்வு செய்யப்படுவர்” என இன்று பத்திரிக்கைகளில் விடுத்துள்ள அறிக்கையில் டாக்டர் சுப்ரா தெரிவித்தார்.

“தேர்தலில் வெற்றி பெற குறைவான வாய்ப்புள்ள வேட்பாளர்கள் மாற்றம் செய்யப்பட்டு அவர்களுக்குப் பதிலாக அதிக வெற்றி வாய்ப்புள்ள வேட்பாளர்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்படும். இத்தகைய நடவடிக்கைகளின் முக்கிய நோக்கம் இறுதியில் இயன்றவரையில் அதிகமான அளவுக்கு கூடுதலானத் தொகுதிகளை வெல்வதுதான்! போட்டியிடும் வாய்ப்புள்ள வேட்பாளர்களும், மஇகா தலைவர்களும் இந்த அணுகுமுறையை உணர்ந்து புரிந்து கொள்வார்கள் என்றும் நம்புகிறேன்” என்றும் தனது அறிக்கையில் டாக்டர் சுப்ரா தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

தனிப்பட்ட நபர்கள் ஒவ்வொருவரும் முக்கியம்தான் என்றாலும், தனிநபர்களை விட, கட்சி என்ற அடிப்படைதான் நமக்கெல்லாம் முக்கியமாகும் என்ற அவர், மஇகா தனது அரசியல் போராடங்களை வெற்றிகரமாகத் தொடர எதிர்வரும் பொதுத் தேர்தலில் குறிப்பிடத்தக்க வெற்றிகளைக் கட்சி பதிவு செய்ய வேண்டியது மிகவும் அவசியமாகும் என்றும் வலியுறுத்தினார்.

“மஇகா தலைவர்கள் அனைவரும் இதனை உணர்வார்கள் என்று நம்புகிறேன். இதனை உணர்ந்து, தங்களின் தனிப்பட்ட நலன்களுக்கு முக்கியத்துவம் தராமல் கட்சிக்கு முன்னுரிமையையும் முக்கியத்துவத்துவத்தையும் அந்தத் தலைவர்கள் வழங்குவார்கள் என்றும் நம்புகிறேன். இந்த முடிவுகளைத் தொடர்ந்து, இனியும் யாருக்குத் தொகுதிகள் வழங்கப்பட வேண்டும் என தனிநபர்களும், குழுக்களும், அமைப்புகளும் பகிரங்கமாக அறிக்கைகள் விடுக்கும் போக்கு உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்” என்றும் டாக்டர் சுப்ரா தனது அறிக்கையில் மேலும் கூறினார்.

எதிர்ப்பாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்

வேட்பாளர் நியமனங்களில் கட்சியின் தலைமைத்துவம் எடுக்கும் முடிவுகளுக்குக் கட்டுப்படாதவர்கள், எதிர்ப்புத் தெரிவிப்பவர்கள் மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் டாக்டர் சுப்ரா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

“அதே போன்று தேர்தல் பிரச்சாரங்களில் ஊறு விளைவிப்பவர்கள், கட்சிக்கு எதிராக கீழறுப்பு வேலைகளில் ஈடுபடுபவர்கள் ஆகியோர் மீதும் கடுமையான ஒழுங்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். அத்தகைய உறுப்பினர்கள் உடனடியாக கட்சியிலிருந்து இடைக்கால நீக்கம் அல்லது நிரந்த நீக்கம் செய்யப்பட வேண்டும் என தேசிய முன்னணியின் உச்சமன்றம் முடிவு செய்துள்ளது” என்றும் டாக்டர் சுப்ரா தெளிவுபடுத்தினார்.

“ஒரு பொதுத் தேர்தலை நிர்வகிப்பது என்பது சுலபமல்ல! நாம் தற்போது எதிர்கொண்டிருக்கும் கடுமையான அரசியல் போராட்டத்தில் நாம் ஒன்றிணைந்து பணியாற்ற ஆர்வம் காட்டுவதும், ஒற்றுமையோடு செயல்படுவதும் மிகவும் முக்கியமாகும். நாம் அனைவரும் ஒன்றிணைந்து நமது ஆற்றல்கள் அத்தனையையும் ஒருங்கிணைத்து பாடுபட்டால் எதிர்வரும் பொதுத் தேர்தலில் நாம் மாபெரும் வெற்றியைப் பதிவு செய்ய முடியும்” என்றும் கேட்டுக் கொண்டுள்ள டாக்டர் சுப்ரா,

“நமது வாழ்நாளில் இதுவரை காணாத மாபெரும் அரசியல் போராட்டத்திற்கு நாம் தயாராவோம்” என்றும் அறைகூவல் விடுத்துள்ளார்.