Home நாடு மகாதீர் லங்காவியில் போட்டியிடுவதை அறிவித்த வான் அசிசா!

மகாதீர் லங்காவியில் போட்டியிடுவதை அறிவித்த வான் அசிசா!

1082
0
SHARE
Ad

லங்காவி – சில ஆண்டுகளுக்கு முன்னால் மலேசிய அரசியலில் இப்படியெல்லாம் நடக்குமா என நாம் கற்பனை கூட செய்து பார்க்க முடியாத சம்பவம் ஒன்று நேற்று ஞாயிற்றுக்கிழமை லங்காவியில் அரங்கேறியது.

சுமார் 10 ஆயிரம் பேர் திரண்டிருக்க, கெடா மாநிலத்தில் போட்டியிடும் பக்காத்தான் வேட்பாளர்களை குறிப்பாக பெர்சாத்து கட்சி வேட்பாளர்களை அறிவித்துக் கொண்டே வந்த துன் மகாதீர், லங்காவி நாடாளுமன்றத் தொகுதிக்கான வேட்பாளரை மட்டும் அறிவிக்காமல் அமர்ந்து விட்டார்.

அதன் பின்னர் மேடையில் ஒலி பெருக்கியின் முன்னால் வந்த பிகேஆர் கட்சியின் தலைவியும், சிறையில் வாடும் அன்வார் இப்ராகிமின் மனைவியுமான டாக்டர் வான் அசிசா முன்வந்து, லங்காவி தொகுதியில் மகாதீர் போட்டியிடுவார் என்ற அறிவிப்பைச் செய்தார்.

#TamilSchoolmychoice

கூடியிருந்த பக்காத்தான் தலைவர்களும், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்களும் (10 ஆயிரம் என உரையாற்றிய பக்காத்தான் தலைவர்கள் குறிப்பிட, 5 ஆயிரம் பேர் என மலேசியாகினி செய்தி தெரிவிக்கிறது) கரவொலி எழுப்பி தங்களின் ஆதரவைப் புலப்படுத்தியிருக்கின்றனர்.

1998-ஆம் ஆண்டில் மகாதீர் அன்வாரை கட்சியிலிருந்து விலக்கி, அவர்மீது, ஊழல் மற்றும் ஓரினப் புணர்ச்சி குற்றச்சாட்டுகளோடு கூடிய வழக்குகளைத் தொடுத்தபோது உதயமான கட்சி பார்ட்டி கெஅடிலான் ராயாட் (பிகேஆர்) என்ற மக்கள் நீதிக் கட்சி.

இன்றைக்கு 20-வது ஆண்டில் காலடி எடுத்து வைக்கும் அந்தக் கட்சியின் வரலாற்றில் உச்ச கட்டமாக, 93 வயதான மகாதீரை நாட்டின் அடுத்த பிரதமராக அறிவித்திருப்பதோடு, லங்காவியில், அவர் போட்டியிடுவார் என கட்சியின் தலைவி வான் அசிசாவே அறிவித்திருக்கும் அரசியல் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது.

பக்காத்தான் கூட்டணிக் கட்சிகள் அனைத்தும் ஒரே சின்னத்தில் போட்டியிடும் என்ற அறிவிப்பைத் தொடர்ந்து, எந்தக் கட்சி தொடங்கப்படுவதற்குக் காரணமாக இருந்தாரோ – எந்தக் கட்சி காலமெல்லாம் அவரை எதிர்த்து வந்ததோ – அதே கட்சியின் சின்னத்தின் கீழ் மகாதீர் லங்காவியில் போட்டியிடவிருக்கின்றார்.

தான் உருமாற்றிய லங்காவியிலேயே போட்டியிடும் மகாதீர்

துன் மகாதீர் – இளவயது மருத்துவராக…

இளவயது மருத்துவராக லங்காவியின் அரசாங்க மருத்துவமனையில் பணியாற்றியிருக்கும் மகாதீர், பின்னர் பிரதமராக லங்காவியை உலகப் பிரசித்தி பெற்ற சுற்றுலா நகர்களில் ஒன்றாக உருமாற்றினார்.

“முதன் முதலாக லங்காவியில் மருத்துவராகப் பணியாற்றிய காரணத்தால், மகாதீருக்கு லங்காவி மீது தனிப்பட்ட ஈடுபாடும், ஈர்ப்பும் இருந்தது என என் கணவர் அன்வார் இப்ராகிம் என்னிடம் கூறியிருக்கிறார்” என வான் அசிசாவும் நேற்று லங்காவியில் உரையாற்றும் போது குறிப்பிட்டிருக்கிறார்.

ஏழு தலைமுறைகளாக லங்காவி தீவி மேம்பாடு காணாமல் போகும் என இளவரசி ஒருவர் விட்ட சாபத்தால் லங்காவி பின்தங்கியிருந்தது என்ற நம்பிக்கை மலேசியர்களிடையே உலவி வந்தது.

சரியாக அந்த ஏழு தலைமுறைக் காலகட்டம் முடியும் தருவாயில் பிரதமராக வந்த மகாதீர், இளவரசியின் சாபத்தை முறியடிக்க வந்தவர் போல், லங்காவியில் மாபெரும் மாற்றங்களை ஏற்படுத்தி, இன்று இந்த நிலைமைக்குக் கொண்டு அந்தத் தீவுப் பகுதியை உருமாற்றம் செய்திருக்கிறார்.

ஆனால், தனது திட்டமிடப்பட்ட பங்களிப்பின் அடிச்சுவடுகள் ஒவ்வொரு பகுதியிலும் பதிந்திருக்கும் லங்காவி மண்ணில் – அந்த மக்களிடம் தனது 93 வயதில் நாடாளுமன்ற உறுப்பினராக வாக்கு கேட்டு வந்து நிற்கும் நிலைமை தனக்கு ஏற்படும் என்றும் மகாதீர் கற்பனை செய்து பார்த்திருக்க மாட்டார்.

ஒருவழியாக, மகாதீர் எங்கு போட்டியிடுவார் என நீண்ட காலமாக எழுப்பப்பட்டு வந்த கேள்விக்கும் நேற்று பதில் கிடைத்திருக்கிறது.

லங்காவி தொகுதியில் வென்றால், மலேசிய நாடாளுமன்றத்தில் நுழையும் மிக அதிகமான வயது கொண்ட உறுப்பினர் என்ற சாதனையை மகாதீர் பதிவு செய்வார்.

எதிர்வரும் காலங்களில் முறியடிக்கப்பட முடியாத ஒரு சாதனையாக அது மலேசிய வரலாற்றில் நிலைத்திருக்கும்.

-இரா.முத்தரசன்